அரசியல் / 187
ஆயர்பாடியென்றும் சகலசாஸ்திரங்களும் வழங்கிவந்ததேயன்றி பறைச்சேரியென்று எந்த சாஸ்திரங்களும் முறையிடவில்லை. தற்காலம் பெரியசாதிகளென்போர் வாசஞ் செய்யுமிடம் கூடுவான்சேரி, புதுச்சேரி, தலைச்சேரி முதலியவைகளேயாம்.
3 - வது வினா- இவர்களுடைய மதம் என்ன, அதை சம்மந்தித்த கன்மாதிகள் என்ன.
விடை: இவர்கள் துவிதபாவனையில், இந்திரரை தேவராகப் பூசித்தவர்கள் ஆகையால் இந்திய மதத்தினரானார்கள். இதன் கன்மாதியோவென்றால் மார்கழி, தைமாதங்களில் முன் பனிகால தானியங்களை அறுத்து புதுப்பானைகளில் பொங்கலிட்டு இந்திரனுக்குப் பூசைசெய்து, இக்குலத்தோரில் உள்ளொளி உணர்ந்து செவ்விய தண்மெயில் இருக்கும் அந்தணர்களை முந்தி புசிக்கச்செய்து, யாசகர்களுக்கிட்டு தாங்களும் புசித்து ஆனந்தித்து நிற்பதே இவர்களது கன்மாதியாகும்.
4 - வது வினா:- இவர்களை நடத்திவருகிற ஆசிரியன்மார்கள் யார்.
விடை : இவர்களுடைய ஆசிரியர்களில் ஞானாசிரியர்களென்றும், கன்மாசிரியர்களென்றும் இருவகையுண்டு. அதில் ஞானாசிரியர்களின் விவரம்: இக்குலத்தோர்களில் சிலர் சகலசாஸ்திரங்களையும் உணர்ந்து விவேக முதிர்ந்தபோது ஞானக்கூட்டங்களை ஏற்படுத்தி சகல தத்துவசாஸ்திரங்களையும் அமைத்து தென்காசிமடம், தென்பாண்டிமடம், பூதூர்மடம், கருவூர்மடம், திருப்புளிமடம் என்னும் பெயர்களிட்டு ஞானமார்க்கத்தைப் போதித்து வந்தார்கள்,
- இவர்களின் பெயர்கள்:
அருமெயாகிய தவத்தை செய்பவராகையால் அருந்தவரென்றும், மேன்மெய்தங்கிய நிலமெயுடையவராகையால் மாதவரென்றும், உள்ளொளி உணர்ந்தவராகையால் அந்தணரென்றும், அறிவு முதிர்ந்தவராகையால் ஞானிகளென்றும், வேதமோதுவதினால் வேதியொன்றும், தன்னைப் பார்ப்போராகையால் பார்ப்பாரென்றும், சகல தோற்றமும் ஒடுக்கமுடையவர்களாதலால் சித்தர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள்.
கன்மாசிரியர்கள் விவரம்: இக்குலத்தோர்களிற் சிலர் கணிதாதி சோதிடவிஷயங்களை நன்காராய்ந்து அரசர் முதல் வணிகர் வேளாளரென்ற முத்தொழிலாளருக்கும் விவாகபந்த அஷ்ட முகூர்த்தங்களையும் நியமித்து கிரியைகளை நடத்தி வருவதும், மரணசம்மந்தமான தன்மகன்மங்களையுஞ் செய்துவருகின்றார்கள். இவர்களின் பெயர்: ஈகையுடன் சகல தன்மகன்மங்களையும் செய்துவருகிறவர்களாகையால் வள்ளுவரென்றும், வருங்காரியம் போங்காரியங்களை அறிந்து ஓதவல்லவராகையால் சாக்கையரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.
- 3:16; செப்டம்பர் 29, 1909 -
5-வது வினா - இவர்களை சம்மந்தித்த சாதிகள் யார்?
விடை : இவர்கள் பூர்வத்தில் ஆந்திரசாதி, மராஷ்டகசாதி, கன்னடசாதி என்ற மூன்று சாதிகளுடன் சம்மந்தித்திருந்தார்கள். தற்காலத்திலோ, சிங்களர், சீனர், பர்மியர், வங்காளர், ஆங்கிலேயர், பிரான்சியர், பார்சியர், ஆரியர்களாகிய சகலசாதிகளிடத்தும் சம்பந்தித்திருக்கின்றார்கள்.
6-வது வினா. - பூர்வத்தொழிலென்ன? தற்காலத் தொழிலென்ன?
விடை : பூர்வத்தில் இவர்கள் அந்தண, அரச, வணிக, வேளாளமென்ற நான்கு தொழில்களையுஞ் சரிவரத் செய்துவந்தார்கள். தற்காலத்தில் மேற்சொன்னபடி தொழில்களை சிலர் செய்துவந்தபோதிலும் பெரும்பாலும் வேளாளத்தொழிலும், ஆங்கிலேயர் அரண்மனைத்தொழிலும், செரஸதார், இஞ்சினியர், சர்ஜன், இனிஸ்பெக்ட்டர், மானேஜர், ரிஜிஸ்ட்ரார், எட்ரயிட்டர் முதலிய ராஜாங்கத் தொழிலுஞ் செய்துவருகின்றார்கள்.
7 - வது வினா. - பூனூல் உண்டா? ஆசிரியன்மாரின் விவரம் என்ன?