280 / அயோத்திதாசர் சிந்தனைகள்
சுதேசிகள் என்போர் சுதேசக் கைத்தொழிற்சாலைகளென்று கூறி அதில் சாதி பேதம் வைத்திருக்கும் பிள்ளைகள் மட்டிலும் வந்து கைத்தொழிற் கற்றுக்கொள்ளலாம், சாதிபேதமில்லாதவர்கள் அதிற் சேரப்படாது, சுதேச பிராமணக் காப்பி ஓட்டல்களில் சகலசாதியோரும் வந்து துட்டு கொடுத்து காப்பி சாப்பிடலாம் ஆனால் மகமதியர், பஞ்சமர், கிறிஸ்தவர்களென்போர் மட்டிலும் அவ்விடம் துட்டு கொடுத்தும் சாப்பிடப்படாது, சுதேசக் குளம் கிணறுகளில் சகலசாதியோரும் தண்ணீர்மொண்டு குடிக்கவும், பஞ்சமர், கிறிஸ்தவர்களென்போர்மட்டிலும் அத்தண்ணீரை மொள்ளவுங் கூடாது, குடிக்கவுங் கூடாது. இவர்களே சுதேசிகளென்போர் இவர்கள் கூட்டத்தையே சுதேசக்கூட்டமென்று கூறப்படும்.
ஆரிய சமாஜத்தோர் என்பவர்களோ, வேதமே தங்களுக்கு ஆதாரம், சாதியிலேயோ சகலரிலும் உயர்ந்தவர்கள், இவர்களோ தங்கள் வேத ஆதாரப்படி பிரம்மா முகத்தில் தோன்றினவர்கள். இவர்கள் யாவரும் ஒன்றுகூடி பிரம்மா பாதத்திற் பிறந்தவர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ளப் போகின்றார்களாம்.
அதற்குப் பகரமாய் தாழ்ந்த வகுப்பாரை உயர்த்தப்போகின்றோம் என்னும் சிற்சிலக் கிரியைகளை நடாத்திவருகின்றார்கள் ஆனால் அவர்கள் பெயர் ஆரியர்கள். அவர்கள் கூட்டத்தின் பெயர் ஆரியசமாஜம் அவர்களால் சீர்திருத்தப்படுவோர் பெயர், தாழ்ந்த வகுப்போர். இவர்களோ தங்களை உயர்ந்த சாதிகளென்று வரையறுத்தும் இருத்தல் வேண்டும். இவர்களால் சீர்திருத்தப்படுவோர் பெயர் தாழ்ந்த வகுப்பாரென்று கூறியும் வரல் வேண்டும். ஈதென்னை சீர்திருத்தமோ, என்ன உயர்த்தலோ விளங்கவில்லை.
இத்தகைய சுயகாரியக் கூட்டத்தோர் செயலையும், நாட்டத்தின் முகிவையும் நாளுக்குநாள் உணர்ந்துவரும் நாடார்களெல்லோரும் ஒன்றுகூடி தங்கள் சுயநலத்தை யாசிக்கச் சேர்ந்துக்கொண்டார்கள். மகம்மதியர்களெல்லோரும் தங்கள் சுயநலத்தை யாசிக்கச் சேர்ந்துக்கொண்டார்கள். தீயர்கள் யாவரும் தங்கள் சுயநலத்தையாசிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். சாதிபேதமற்ற திராவிடர்களோ சகலசாதியோர்கள் இடுக்கங்களினின்று சகிக்கமுடியாது வெளிதோன்றிவிட்டார்கள். இத்தியாதி கூட்டத்தோர் செயல்களையும் கண்ணுற்றுவந்த நாயுடு வட்டத்தாரும் ஒன்றுசேரப் போகின்றார்கள் போலும். இன்னும் இவைபோன்ற செட்டியார் கூட்டங்களும், முதலியார் கூட்டங்களென்னும் வெவ்வேறு கூட்டங்களும் தோன்றிவிடுமாயின் நாஷனல் காங்கிரஸ் கூட்டமென்னும் பெயர் யாவர்களைச் சார்ந்ததென்னும் விவரத்தை அவர்களே விளக்கிக்காட்டல் வேண்டும்.
அவரவர்கள் சுயநலங்களுக்கு அந்தந்தக்கூட்டத்தோரே பிரிந்து வெளிதோன்றியிருக்க இந்த நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தார் யாருக்கு சுகம்விளைக்கப் போகின்றார்களோ விளங்கவில்லை. அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகள் பொதுவாகியக் கிணறு குளங்களில் தண்ணீர்மொண்டு குடிக்க சுதந்திரமற்றிருப்பவர்கள் மற்றும் ஏது சுதந்திரங்கொண்டு என்ன சுகத்தை அநுபவிப்பார்களென்பதை உணராமலும் அவர்களுக்குற்ற இடுக்கங்களைக் கண்டு இதங்காமலும் உள்ளவர்கள் தங்களை நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தோரெனத் தகுமோ. அங்ஙனம் நாஷனல் காங்கிரஸென்னும் பெயரை மாற்றி சாதிபேதத்தலைவர் காங்கிரஸென சொல்லிக் கொள்ளுவதாயின் அவர்களது காகதாளிச்செயலுக்கும் காகதாளி நியாயத்துக்கும் பொருந்தும்போலும். அங்ஙனமின்றி அறுபது லட்சத்திற்குமேற் பட்டக் குடிகள் அன்னந் தண்ணீருக்கு அல்லற்படுவதையறிந்தும் அவர்களடைந்துவரும் துன்பங்களைப் பத்திரிகைகளின்வாயலாகத் தெரிந்தும் அவர்களது குறைகளைத் தங்கள் சங்கத்திலெடுத்துப் பேசாதசங்கம் ஓர் நாஷனல் சங்கமாமோ. இத்தகைய பாரபட்சமுற்றக் கூட்டத்தோரை நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தோரென்பதினும், மிஷ்நெரிக்கூட்டத்தோரை நாஷனல் கூட்டத்தோரென்பது நலமாகுமே.