உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை / xli

என்று கூறி பெருவாரியான மக்களால் தாழ்த்தப்பட்டோர்கள் அவதிப்படுவார்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி கூறுகிறார்: “இத் தேசத்தில் உழுது பண்படுத்தி சீவிக்காது வேறு தேசங்களுக்குப் போய் துயரடைய காரணமாக இருந்தவர்கள் யார்? பொய்யான சாதி நாற்றத்தை போர்த்துத் திரிந்தவர்களன்றோ?” (தமிழன் -17.12.1913) என்று கேட்டு, “கல்வியற்ற எளிய குடிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க சக்தியற்று நாளுக்குநாள் நசிந்து உள்ள பூமியையும் வஞ்சகருக்கு தாரை வார்த்துவிட்டு வெளிதேசங்களுக்குப் போய் பிழைக்கிறார்கள்” (தமிழன் - 37.1907) என்று தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி நாட்டிலிருக்கும் சாதி வெறியின் நேர்மையற்ற தன்மையையும் விளக்குகிறார்.

“கொல்லாமல் கொல்லப்பட்டு வரும் இத்தேசத்திய பூர்வ இந்தியர்களாம் ஆறுகோடி ... தாழ்த்தப்பட்டோர்களில் முன்னேறியிருப்பது பிரிட்டிஷ் துரைமார்களின் கருணையாலும் மிஷனரி கிறிஸ்தவ துரைமார்களின் அன்பினாலுமேயன்றி சாதி வேஷமுள்ள சீர்திருத்தக்காரரால் அல்ல என்று துணிந்து கூறலாம்” (தமிழன் - 24.12.1913)

என்று வலியுறுத்திக் கூறும் அயோத்திதாசர், ஆட்சி ஆங்கிலேயரிடத்தில் இருந்தாலும் அதிகாரங்களில் பெரும்பாலும் சாதி வெறியர்களே இருக்கிறார்கள் என்பதையும் கூறுகிறார். அந்நிய ஆட்சியை மாற்றி இந்திய ஆட்சியை நிறுவ எண்ணுகிற தேசிய இயக்கத்தை அவர் சரியாகவே கணித்தார்.

“ஆறு கோடி மக்களையும் நாசம் செய்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டே மேலுக்கு ‘நேஷனல் ’காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக்கொண்டு பெரிய வேஷக் காங்கிரசாகவே நடத்தி வருகின்றார்கள்” (தமிழன் - 7.1.1914) என்றும் இன்னும் சற்றுக் கடுமையாகவே சாடுகிறார்: “சீர்திருத்தம் வேண்டும் என்றும் சுயராட்சியம் ஆளவேண்டுமென்றும் கோறுவது மேல் மக்களின் எண்ணங்களாகக் காணவில்லை. தேசத்தை இப்போது சீர்கெட்டுள்ளதைவிட இன்னும் சீர்கெடுத்து பாழாக்கிவிடவும் ... இராஜாங்கத்திற்கும் குடிகளுக்கும் கலகத்தை உண்டாக்கிவிட்டு மத்திய பஞ்சாயத்தில் மகிழ்ச்சி பெற்றுக் கொள்ளும் கீழ்மக்கள் செயலாகவே காணப்படுகின்றது” (தமிழன் - 13.5.1908) என்று கூறுகிறார். முதலில் சமுதாய சீர்திருத்தம் வேண்டும் என்று விரும்புகின்ற அவர் “எப்போது இராஜாங்க சீர்திருத்தத்தை நாடினரோ அப்போதே குடிகளின் சீர்திருத்தத்தை நாம் வேண்டியதுதான். குடிகளின் சீர்திருத்தத்தை ஆலோசிப்பதால் என்ன பயன். தேசம் சிறப்படையுமா?” (தமிழன் - 5.11.1913) என்று கூறி இந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் சேர்த்து சுயராட்சியம் கொடுப்பதிலும் பெரும் கலகமே உண்டாகி... தேச மக்கள் சீரழியும்படி நேர்ந்துபோம்” என்றும் எச்சரிக்கிறார்.

இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் அன்று இந்திய ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடத் தோன்றியதல்ல என்பதை அவ்வியக்கத்தின் ஆரம்ப கால மாநாடுகளின் திட்டங்களும் தீர்மானங்களுமே அறிவித்துவிட்டன. எனவே அயோத்திதாசர் அக்கட்சியின்மீது அவநம்பிக்கை கொண்டதில் வியப்பில்லை. அத்துடன் அவர் காட்டும் காரணமும் நியாயமானதேயாகும்.

“... நெட்டால் தேசத்தில் அவலைப்படும் குடிகளுக்காகப் பரிந்து பரிந்து பேசும் கனவான்கள் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்த தேசத்து பூர்வத் தமிழ்க்குடிகளை தாழ்த்திப் பாழாக்கிவரும் பரிதாபத்தை பத்திரிகை மூலமாகவும் (நேரே) கண்டு வரும் கனவான்கள் இக்காங்கிரஸ் கூட்டத்தில் விளக்கி ஈடேற்றினார்கள் இல்லை. (இங்கு) கண்ணாரக் கண்டும் கவலைப்படாதவர்கள் காணாத நெட்டால் இந்தியர்களின் மீது கவலைப்படுவது என்ன காரணமோ... இக்கூட்டத்திற்கு நேஷனல் காங்கிரஸ் என்னும் பெயர் தகுமா?” (தமிழன் - 6.1.1909) என்று கேட்கும் அவர் அவ்வியக்கம் ‘நேஷனல்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதே அதற்குக் களங்கம் என்பதைப்போல் கருதுகிறார். இந்தியாவில் உள்ள மக்கள் அலைக்கழிக்கப்படுவதை எண்ணிப் பார்க்காதவர்கள் அந்நிய நாட்டில் வாழும் மக்களைப் பற்றி அக்கறை கொள்வது நியாயமா என்று