பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xliv / அயோத்திதாசர் சிந்தனைகள்

பிறந்திருக்கிறது... இதனை பின்கலை நிகண்டுதெய்வப் பெயர் தொகுதியிலும், சூளாமணி, சீவகசிந்தாமணி, முத்திய தெய்வக் கலம்பகம் பகுதியிலும் கூறப்பட்டிருக்கின்றது. நன்மெய் கடைபிடி என்னும் ஒரு சொல்லே ஏதுவாக, இல்லந்துறந்து கடவுளென்று மொழியின் ஆதரவால் நன்மையைக் கடைப்பிடித்த மகாஞானிகள் ஒவ்வொருவருக்கும் கடவுளென்னும் பெயர் நிற்கின்றன” (தமிழன் - 19.6.1907).

என்று நன்மையைக் கடைப்பிடித்த பேரறிவாளர்களைக் கடவுள் என்று கருதத் தூண்டுகிறார். புத்தர், மகாவீரர், ஏசு, நபி, நானக் போன்ற நல்லாசிரியர்களையும் இது குறிக்கலாம். இவர்களெல்லாம் நன்மை பயக்கும் நல்ல நெறிகளைக் கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கிய பெருமக்களாவர். எனவே நல்லறிவாளர்களைக் கடவுள் என ஏற்கலாம் போலும். மேலும் அவர் கவனத்தில் கொள்ளவேண்டியவற்றையும் கூறுகிறார்.

“ஒவ்வொரு மனிதரும் தத்தமது முன்னேற்றத்திற்கு வகை செய்துக்கொண்டு (வித்தை) கல்வி, தொழில் போன்றவைகளில் சிறப்படைய நல்லாசிரியர்களை நாடாமல் சுய நலக்காரர் மதக்கடையைப் பரப்பி தம்மதமே உயர்ந்த மதம் என்று பொய் புராண மூட்டைகளைக் கட்டி வைத்துக்கொண்டு, வஞ்சித்து பொருள் பறிக்கும் போதகர்களாகிய பாதகர்களை நம்பி, கல்வி கைத்தொழில்களின் மூலம் முன்னேறும் வழிகளை மறந்து அடிமை தொழில் புரிந்து இரந்து தின்னும் காரணம், கடவுள் என்பதைப்பற்றி உறுதியாக தெரியாமையேயாகும். (தமிழன்-7.8.1907) என்று பொய் கதைகளால் மெய்யறிவைப் புதைக்கும் பாதகர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.

“... கடவுள்... எனத் தோன்றிய பெயர்கள் ஒலிபற்றிய பெயரா, செயல் பற்றிய பெயரா, மக்கள் பெயரா, தெய்வப் பெயரா அங்ஙனம் தெய்வப் பெயராயின் அத்தெய்வங்கள் ஆகாயத்தினின்றும் தோன்றியவர்களா, மக்களினின்றும் தோன்றியவர்களா, அவற்றையும் விசாரித்து உணர்வாரில்லை.

ஒரு கடவுள் உண்டா ஒரு தெய்வமில்லையா என்று உசாவும் கடாக்களுக்கு உரைமொழியின்றி மவுனமுரலே மாற்றாகும்... விசாரணையற்ற மக்களுடன் வாது கூறல் இருதிற சுகமற்றுப்போம்” (தமிழன் - 11.12.1907)

என்று கூறி கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு முடிவு வர இயலாது என்பது மட்டுமல்ல, தேவையற்றதும் கூட என்று எண்ணி அப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டு வாதிடாமல் பேசாமல் இருந்து விடுவது நல்லது என்று கூறுகிறார். எனவே, நன்னெறியைப் பரப்பிய நல்லறிவாளர்களைப் பின்பற்றிப் பயனடைவதே சிறப்பு என்பதே அயோத்திதாசர் கருத்தாகும் என்று துணிந்து கூறலாம். அத்தகைய நன்னெறியை அருளிய புத்தரையே அவர் பின்பற்றினார். அவர் கூறுகிறார்:

“ஒரு மனிதன் கடவுள் உண்டென்றும், கடவுளை நம்பியும், கடவுளை தொழுதும் கெட்ட காரியங்களைச் செய்தால் துன்பமே அடைவான். ஒருவன் கடவுள் இல்லையென்றும், கடவுளை நம்பாமலும், கடவுளை தொழாமலும் நல்ல காரியங்களைச் செய்தால் பயனடைவான். நற்கருமங்களை செயலே கடவுளென்னு மொழியாய் இருக்கின்றபடியால் கடவுளைக் கடைபிடியெனக் கூறாது நன்மையைக் கடைபிடி என்று கூறுவதை உணருங்கள்” (தமிழன் - 16.10.1907)

என்று சொல்லுகிறார். புத்தர் கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல் நன்மையைக் கடைபிடித்து நன்னெறிகளைப் பரப்பியவர். அவரைப் போன்ற நல்லாசிரியர்களை ஏற்கத் தயங்கத் தேவையில்லை என்று கருதுகிறார். இக்கருத்தோடு பேரறிஞர் கருத்தோட்டத்தையும் இணைத்துப் பார்ப்பது சிறப்பாகும்.

“கடவுளைக் கண்டவர் ஒருவருமில்லை. பேசமட்டுமே செய்கிறார்கள். கடவுள் அறியப்படவுமில்லை காணப்படவுமில்லை. கடவுள்தான் உலகத்தைப்