உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், சுத்த நீரை மொண்டுகுடிக்க விடாமலும் நாளொன்றுக்கு முக்காலணா கூலியேனும் சரிவரக் கொடுக்காமலும் கொல்லாமற்கொன்றுவரும் கருணையற்ற சாதித்தலைவர்கள் ஒன்றுகூடிக் கொண்டு மிக்கக் கருணையுள்ளவர்கள்போல் அபிநயங்காட்டி தங்கடங்கள் சாதியோர்கள் சுயப்பிரயோசனங்களுக்காக அன்னியதேசங்களுக்குஞ் சென்று சுகச்சீர் பெற்றுவரும் ஏழைக்குடிகளை நெட்டாலுக்குப் போகவிடாமல் தடுத்துவிட்டார்கள்.

அவ்வொரு தேசம் தடைப்பட்டவுடன் மற்றுமுள்ள தேசங்களுக்குச் சென்று சுகச்சீர் பெற்றுவரும் ஏழைக் குடிகளை அங்கும் செல்லவிடாமல் தடுக்கத்தக்க முயற்சிகளை செய்துவருகின்றார்கள், அவர்களது முயற்சிகள் யாவும் சாதிபேதமுள்ளக் குடிகள் நாளுக்குநாள் சுகச்சீர்பெறவும், சாதிபேதமில்லா ஏழைக்குடிகள் நாளுக்குநாள் நசிந்து பாழடைவதற்கேயாம். சாதிபேதமில்லாத ஏழை மநுக்களை மநுக்களாக பாவிக்காது சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாத கருணையற்றவர்கள் நெட்டாலுக்குச் சென்றுள்ள சாதிபேதமில்லா ஏழைக்குடிகள் மெத்தக் கஷ்டப்படுகின்றார்களென்றும், சாதிபேதமுள்ள கூட்டத்தோர் அவர்களுக்காக மிக்கப் பரிந்து பாடுபடுகின்றார்களென்றுங் கூறுவதாயின் இந்திய தேயத்திலுள்ள நீதிமான்களாம் மேன்மக்களும், சாதிபேதமுள்ளார் படாடம்பங்களையும், சாதிபேதமில்லார் கஷ்ட நஷ்டங்களையும் நெடுநாளாய் அநுபவத்திற் கண்டுவரும் ஆங்கில துரைமக்களும் நம்புவார்களோ, ஒருக்காலும் நம்பமாட்டார்கள்.

சீவகாருண்யமென்பதே கனவிலும் இல்லாமல் மனிதவகுப்போரை மனிதவகுப்பாக பாவிக்காதவர்களெல்லவரும் ஒன்று கூடிக்கொண்டு ஏழைகளுக்கெனப் பரிந்து பாடுபடுகின்றார்களென்று அவர்களைப் பின்பற்றுவது ஆடு கசாயிக்காரனை நம்புவதற்கொக்கும். ஆதலின் நமது கருணை மிகுத்த ராஜாங்கத்தோர் ஏழைக்குடிகள் சாதிபேதமுள்ளோர்பால் ஏதேது துன்பங்களை அநுபவித்துவருகின்றார்களென்பதை விசாரித்தும், நேரிற் கண்டும், அவர்களை நெட்டடாலுக்குப் போகவிடாமல் தடுத்திருக்குந் தடைகளைவிடுவித்து அவர்கள் மனம் நாடியவிடங்களுக்குச் சென்று சுகச்சீர் பெறும்படி செய்விக்க வேண்டுகிறோம்.

- 5:40; மார்ச் 13, 1912 -


247. ஏழைக்குடிகளின் இடுக்கங்களைத் தீர்க்கும் ஓர் சட்டசபை மெம்பர் இல்லையே

தற்காலம் நமது சென்னை ராஜதானியில் எக்ஸிகியூட்டிவ் மெம்பர்களென்னும் இராஜாங்கக் கூட்டத்தோர் நீங்கலாக, லெஜிஸ்லேட்டிவ் மெம்பர்களென்னுங் குடிகளின் ஆதரிணை சட்டசபைக் கூட்டத்தோர்களை அதிகமாக்கி அவரவர்களைச்சார்ந்த காரியங்களை ராஜாங்கத்தோர் முன்பு கொண்டுவந்து வேண்டிய வாதுகளிட்டு தங்கள் தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொள்ளுகிறார்களன்றி ஏழைக்குடிகளின் கஷ்டங்களை அறிந்து பேசுவோரில்லை. இத்தகைய சட்டசபையோர் பெரும்பாலும் தேசச்சீரையும் குடிகளின் சுகத்தையுங்கண்டு சீர்திருத்த முயல்வது யதார்த்தமாயின் கிராமக் குடிகளின் சீரையும் பண்ணை பூமிகளின் விருத்தியையுமே முக்கியமாகக் கவனித்தல் வேண்டும். பண்ணை பூமிகள் திருந்தி விவசாயம் செழிக்குமாயின் தானியவிருத்திப்பெற்று நகரக்குடிகளும் நாட்டுக் குடிகளும் சுகச்சீர் பெறுவார்கள். குடிகள் சுகச்சீரில் இருப்பார்களாயின் அரசும் ஆனந்த நிலையினிற்கும் இதுவே சட்ட சீர்திருத்த சபையார் செய்யவேண்டிய முதல் சீர்திருத்தங்களாகும்.

இத்தகைய தேசசிறப்பையுங் குடிகளின் சிறப்பையுங் கண்ணோக்காது அந்த கல்விசாலைப் பணங்களை நிறுத்திவிடல்வேண்டும். இந்த கல்விசாலைப் பணங்களைக் குறைத்துவிடல் வேண்டுமென்னும் வீண்சட்டங்களை