உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கெட்டு மானுஷீக தன்மகாருண்யம்விட்டு ஒருவர் முகச்சின்னங்களை மற்றவர்கள் கண்டவுடன் ஒருவருக்கொருவர் சீறிச் சினந்துத் தடிகளைக்கொண்டு மண்டை உடைவதுடம் அதிகாரிகளால் தண்டனை அடைவதும், அப்போதைக்கப்போது தலபுராணங்கள் எழுதுவதும், தங்கள் மதமே மதம் தங்கள் சாமியே சாமியெனக் கூறித்திரிவதும், அந்த சாதியோர் ஆச்சாரமது இந்தசாதியோராச்சாரம் மீதென்னுங் கட்டுக்கதைகளை வரைவதும், அதற்கான முற்றும் பொய்களை முட்டுக்கொடுக்குஞ் செயல் இவர்களது சீர்திருத்தங்களேயன்றி மக்கள் சீர்திருத்தம் தேசசீர்திருத்தங்கள் ஒன்றுங் கிடையாவாம்.

இவர்களது விருத்திக் குறைவுகளுக்குக் காரணம் ஒற்றுமெக்குக் கேடாய சீர்குறைகளும், இவர்களது விவசாயத்துக்கு கேடாய சோம்பல்களும், வித்தைக்குக் கேடாய முயற்சிக் குறைகளும், சாதிப்பிரிவினை, சமயப்பிரிவினை, சாமிப்பிரிவினையால் உண்டான கேடுகளென்று உணர்ந்த கருணைவல்ல பிரிட்டிஷ் ஆட்சியார் கல்விவிருத்திக்காய் ஆதாரங்களையும், கைத்தொழில் விருத்திக்கான ஆதாரங்களையும், விவசாய விருத்திக்கான ஆதாரங்களையும், ஒற்றுமெய் அடைவதற்கு ஏதுவாயச் செயல்களையும் விருத்திசெய்து வருகின்றார்கள். அத்தகைய சீர்திருத்தங்களை சரிவர நோக்காது பழயக்குருடியே குருடியென சாதிசம்பந்தத்தை விடப்படாது சமயசம்மந்தத்தை விடப்படாதென்னும் விசாரிணையற்ற வீணர்கள் தோன்றி இராஜாங்கத்தோர் செய்துவரும் சீர்திருத்தங்களையும், பெரியோர்கள் பிரசங்கங்களில் பேசிவரும் நீதி நெறிகளையும் உணராது வீண்வாது கூறி வருகின்றனர். இவர்களது வாதமும் போதமும் அவலமேயாம்.

- 5:51: மே 29, 1912 -


257. ஆசாரமென்னும் மொழிக்குப் பொருளறியாதோர் ஓர் மேற்சாதிகளாம் அவர்கள் கூடி கீழ்ச்சாதியோரை உயர்த்தப்போகின்றார்களாம்

அந்தோ! ஆசாரமென்னும் மொழியை சாஸ்திரிகள் எவ்வகைச் செயலுக்கு உபயோகப்படுத்தி வந்திருக்கின்றார்களென்னில் சமயாசாரங்களை விடுதலும், குலாசாரங்களை விடுதலும், இல்வாழ்க்கையை விடுதலுமாகியப் பற்றற்றச் செயலெதுவோ அதையே ஆசாரமென வகுத்திருக்கின்றார்கள்.

தேவிகாலோத்திரம்

ஈமயாசார சங்கற்ப விகற்பமும் / அமையதாங்குல வாசாரமானதும்
இமையாதாரும் விடாத வில்லாழ்க்கையும் / அமையார் தோளாய் விடுத லாசாரமே.

சமயாசாரங் குலாசாரமென்பவற்றை தவிற்குஞ் செயலுக்கே ஆசாரமென்னும் மொழியை வழங்கிவருவதை உணராது மேற்சாதியோர் சிலரிருக்கின்றோம்; அவர்கள் எல்லவருங்கூடி கீழ்ச்சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்பது என்னவாசாரமோ விளங்கவில்லை. இவர்களும் ஆசார சீர்திருத்தக்காரர்களென வெளிதோன்றி ஐயா பிரசங்கித்தார், அம்மா பிரசங்கித்தாரென்பதில் யாதுபயன். கீழ்வகுப்புக்கலையிற்றேறி மேல்வகுப்புக் கேறினானென்னில் அஃது கல்வியின் திரத்தைக் காட்டும். அவைபோற் கீழ்ச்சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்னு மொழி மேற்சாதியாகச் செய்கின்றதா அன்றேல் தங்களை உயர்ந்தசாதியென்றே படாடம்பமடித்துக் கொண்டு தங்கள் எதிரிகளை கீழ்ச்சாதியென்றே காலமெல்லாம் சொல்லி வருகின்றதா அதேனும் விளங்கவில்லை. கீழ்ச்சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்னு மொழி யதார்த்தமாயின் இவர்கள் எல்லவரும் ஓர்கால் கீழ்ச்சாதியாயிருந்து உயர்த்தப்பட்டவர்களாயின் அவர்கள் கூடிய கூட்டங்களும், செய்யுங் செயல்களும் செவ்வனே முடியும். அங்ஙனமின்றி தாங்கள் எக்காலும் உயர்ந்த சாதியோரே என்பாராயின் அவர்கள் சொல்லுமொழியுஞ் செய்யுஞ் செயலும் முக்காலும் முடியாவென்பது துணிபு. அன்னோர் பிரசங்கங்களிற் கீழ்ச்சாதியோருட் சிலர் தங்கள் முயற்சியால் முன்னுக்கு வந்திருக்கின்றார்