உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 409

டெல்லிகிறாப் முதலிய அரியவித்தைகளை மேலும் மேலும் விருத்திச்செய்து வருகின்றார்கள். இவர்களன்றோ பெரியசாதிகள், இவர்களன்றோ மேன்மக்கள், இவர்களன்றோவிவேக விருத்திப்பெற்ற மகான்கள்.

இத்தகைய வித்தை புத்தி, ஈகை, சன்மார்க்கமற்று, தேச விருத்தியுங்கெட்டு, வித்தியா விருத்தியும் பட்டுப்போவதற்காய் சாதிவிருத்தியும் சமாத்துவிருத்தியும், சாமிவிருத்தியும், கோமியவிருத்தியும் குறுக்குபூசுவிருத்தியும் நெடுக்குபூசு விருத்தியும் வடகலை நாமவிருத்தியுந் தென்கலை நாமவிருத்தியும் பெருகிக் கொண்டே வருமாயின் நந்தேயஞ் சீர்கெடுவதுடன் தேசத்தோருஞ் சீரழிவார்களென்பது திண்ணம்.

ஈதன்றி பெரிய சாதிப் பொய்கட்டுபாடுகளும் இருத்தல் வேண்டும். பொய்ச்சாமிக் கதைகளும் பெருகவேண்டும். இராஜாங்க உத்தியோகங்களையும் அநுபவிக்கவேண்டுமென படிப்பதாயின் அப்படிப்பு அவலப்படிப்பேயாம்.

- 5:50; மே 22, 1912 -


256. தற்கால இந்தியர்கள் பெற்றுள்ள சீர்திருத்தங்களென்னை

பெரியப்பெரிய சாதிகளையுஞ் சிறியசிறிய சாதிகளையும் சிறக்க ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறிய சிறிய சாமிகளையும் பெரிய பெரிய சாமிகளையும் பெருக்க சிருட்டித்துக்கொண்டார்கள். இவைகளுக்காதரவாக ஏதொரு வஸ்திரமுமின்றி கோமணமென்றும் கெளபீனமென்றும் வழங்கும் துண்டு சீலையைக் கட்டிக்கொண்டு உலாவுவதோராச்சாரம், பூணுநூலைக் காதிற் சொருகிக்கொண்டு மலோபாதைக்கு போவதோராச்சாரம், குளிக்கப் போகுங்குளங்களில் முழுகி ழுமுகி முண முணப்பதோராச்சாரம், குளத்து நீரை செம்பு பாத்திரமோ பித்தளை பாத்திரமோ ஒன்றில் மொண்டுக்கொண்டு வீட்டிற்கு வருங்கால் மாட்டைக் கண்டால் ஒதுங்குவதில்லை, குதிரையைக் கண்டால் ஒதுங்குவதில்லை, நாயைக் கண்டால் ஒதுங்குவதில்லை தன்மெய்ப் போன்ற மனிதர்கள் எதிரில்வருவார்களாயின் துள்ளித் துள்ளி தூரவோடி விடுவதோராச்சாரம், தான் செய்யும் மந்திரம் வெளியோருக்குக் கேழ்க்காது மணியாட்டிக் கொள்ளுவதோர் ஆச்சாரம், சாம்பலைப்பூசுவதில் குழைத்துப் பூசுவதோர் ஆச்சாரம், வெறுமனே பூசுவதோர் ஆச்சாரம், (பொருளற்ற) நாமம் போடுவதில் பெரிய பெரிய நாமங்கள் போடுவதோர் ஆச்சாரம், அவற்றைக் கண்டதுண்டங்களிற் போடுவதோர் ஆச்சாரம், (பொருளற்ற) வடகலை நாமமென்பதோர் ஆச்சாரம், தென்கலை நாமம் என்பதோர் ஆச்சாரம், வீட்டிற்கு விருந்தினர்வந்து விட்டால் சுக்கிரவார விரதம், சோமவாரவிரதமென சோறு சமைக்காமல் இருப்பதோர் ஆச்சாரம்.

ஒருபொழுது புசிப்பதென்று சோறு சமைத்துண்டு மறுபொழுது பலவகைப் பலகாரங்களும் பாயசமும் புசிப்பதோர் விரதம், அதிரசமென்னும் பலகாரஞ் சுட்டுப்புசித்துக் கைகளில் கயிறு கட்டிக்கொள்ளுவதோர் விரதம், கோழி மாமிஷம் சமைத்து சாராயத்துடன் புசித்து கைகோர்த்துக் கூத்தாடுவதோர் விரதம், விக்கிரகங்களுக்கு அன்னாபிஷேகஞ் செய்வதோர் பூசை, கடலை சுண்டல் படைப்பதோர் பூசை, வடை பாயாசம் படைப்பதோர் பூசை, வாழைக்கனி தோசை வட்டிப்பதோர் பூசை இவைகள் யாவும் ஜீரணிப்பதற்கு சாமிக்கு சுக்கு நீர் கொடுப்பதோர் பூசை, ஜாமத்தில் சாமியைத் தூங்கவைப்பதோர் பூசை.

இத்தகைய தூங்குமூஞ்சு சாமிகளும் விடிந்தெழுந்து பல்லுவிளக்குஞ் சாமிகளும் ஆனோரை சிருட்டித்துக்கொண்டோர் வரவுகள் குன்றுமாயின் என்சாமி பெரிது உன்சாமி சிறிதென்னுஞ் சண்டை, நீங்கள் போடும் நாமம் பொய்நாமம், யாங்கள் போடும் நாமம் மெய்நாமமென்னுஞ் சண்டை, சிவன்சாமி பெரியசாமி, விஷ்ணுசாமி சின்னசாமியென்னும் ஓர் சண்டை, அந்தசாமி உச்சியைக் காணவில்லை இந்தசாமி பாதத்தைக் காணவில்லை என்பதோர் சண்டை ஆகிய சாதிபேதச் சண்டைகளாலும், சமயபேதச் சண்டைகளாலும், சாமிபேதச் சண்டைகளாலும், ஒற்றுமெய்க்