உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 427

வருகின்றார்கள். இத்தகையக் கருணையற்றோர் காலத்தில் பிரிட்டிஷார் துரைத்தன மட்டிலும் இவ்விடம் இல்லாதிருக்குமாயின் ஏழை மக்கள் யாவரும் பசிபட்டினியால் மடிந்து தென்னிந்தியாவே பாழைடைந்துபோம். பிரிட்டிஷ் துரைமக்களுக்குள்ள வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தினால் இரெயில்வே தொழில்களையும், இஸ்டீமர்களுக்கு உண்டாகியத் தொழில்களையும், அனந்தக் கைத்தொழிற்சாலைகளையும், வியாபாரக் கம்பனிகளையும், அச்சியந்திர சாலைகளையும் வைத்து விருத்திசெய்து வருகின்றபடியால் இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வரும் கூலிகளைப்பெற்று அரைவயிற்றுக் கஞ்சேனுங்குடித்து சீவித்து வருகின்றார்கள். அத்தகையத் தொழிற்சாலைகளுமில்லாமற் போமாயின் இந்நாலுபடி அரிசி விற்கும் பஞ்சகாலத்தில் “ஆடுகிடந்தவிடத்தில் மயிருங் கிடையா” தென்னும் பழமொழிபோல் ஏழைமக்கள் கிடந்தவிடத்தில் எலும்புகளுங் காணாமற் போமென்பது சத்தியம்.

ஆதலின் பெரியசாதியென வேஷமிடப் பெரிய பெரிய பணக்காரர்களென வெளிதோன்றுவோர் வானத்தை நோக்கி மழைப் பெய்யவில்லை என்பதினும் ஏழை எளியோரை நோக்கி அவர்களுக்கு இதங்கி அதிக லாபத்தைக் கருதாது சரிவிலைவிற்று ஏழைமக்களை சீவிக்கச் செய்வார்களென்று நம்புகிறோம். கருணை தங்கிய ராஜாங்கத்தோரும், கருணையற்ற வியாபாரிகளின் செயல்களை சற்று கண்ணோக்கும்படி வேண்டுகிறோம்.

- 6:15; செப்டம்பர் 18, 1912 -


271. பிரிட்டிஷ் துரைத்தனத்தால் உண்டாம் சுகமும் அதன் காட்சியும்

புத்ததன்மமும் புத்ததன்ம அரசாட்சிகளும் மாறுபட்டு அபுத்த தன்மங்களாம் பொய் வேதங்களும், பொய்வேதாந்தங்களும், பொய்ப் புராணங்களும், பொய்சாதிப்பிரிவுகளும் தோன்றி ஒருவருக்கொருவர் ஒற்றுமெய்க் கெட்டும், வித்தைகளற்றும், விவேகங் குறைந்தும், புத்திமயங்கியும், ஈகையை மறந்தும், மதக்கடைபரப்பி சீவிக்கும் பொய்க்குருக்களின் போதனைகளையே மெய்யென நம்பி தங்கள் தங்கள் சுய முயற்சிகளற்று ஐந்துதலை சாமி கொடுப்பார், நாலுதலைசாமி கொடுப்பார், நாலுகைசாமி கொடுப்பார், ஆறுகை சாமி கொடுப்பாரென்னுஞ் சோம்பல் மீறி தாடிகளை வளர்த்தும், சாம்பரைபூசியும், சடைகளை வளர்த்தும், சாமிபாட்டு பாடியும், மொட்டையடித்தும், கொட்டைகளைக் கட்டியும், கோவிந்தம் போட்டு கபோலம் ஏந்தியும், கொடுப்போரை வஞ்சித்து, கொடாதோரை தூஷித்தும், உற்றாரைக் கெடுத்தும், ஊர்குடிகளை நசித்தும் உங்கள் சாதி சிறியசாதி, எங்கள் சாதி பெரியசாதி, உங்கள்சாமி சின்னசாமி எங்கள் சாமி பெரியசாமியென்னும் பொய்யைச் சொல்லி வஞ்சித்துப் பொருள் பறித்து சீவிப்பதே தொழிலாகிவிட்டபடியால் ஒருவருக்கொருவர் ஒத்து போதிக்காது வித்தைகளுங்கெட்டு ஒருவருக்கொருவர் முதல் ஈவதற்று விவசாயங்கெட்டு தேசம் பாழடைந்ததன்றி தேசமக்களும் நாளுக்குநாள் விருத்தி குறைந்து சீலம் மறைந்து சீர்கேடுற்றேவந்தார்களென்பது தற்கால அநுபவங்களே சாட்சியாகும்.

இத்தகைய செயல்கள் மிகுத்துவந்த தேசத்தில் இதுகாரும் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து சேராமலிருக்குமாயின் தேசம் பாழடைந்தே போயிருக்கும். இச்சோம்பேறிகளின் சுயபுத்திகளை அறிந்த மகமதியர்கள் சுயராட்சியங் கொண்டு தங்கள் அரசாட்சியே நிலைத்திருக்குமாயின் பொய்சாதிகளும் பறந்து, பொய்ச்சாமிகளும் இறந்து மதக்கடைகளும் இடிந்து எங்கள் சாதிகளே பெரியசாதிகள் என்போர்களும், எங்கள் சாமிகளே பெரிய சாமிகளெனப் படாடம்பம் அடிப்போர் யாவரும் “சலாமலேக்கு”மென்று கூறவும் மற்றவர் “அலேக்கும் சலாம்” போடவும் அரகரா சத்தமடங்கி, கோவிந்தா சத்தமும் ஒடுங்கியிருக்கும் என்பதற்குப் பகரமாக நாகப்பட்டணம் கள்ளிக்கோட்டையில் வாசஞ்செய்யும் மகமதியக்கூட்டங்களும் அவர்களுக்குத் துலுக்குபாஷை தெரியாது பேசகற்பிப்பதே போதுஞ்சான்றாகும்.