பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538/அயோத்திதாசர் சிந்தனைகள்

குதிரை, சிங்கம், பட்சி, சாராயம், அவுரி, அரக்கு, இவைகளில் ஒன்றையேனும் விற்கப்படாது.

அங்ஙனம் மாம்ஸம், அரக்கு, உப்பு, விற்பவன் பதிதனாக மாறிவிடுவதுமன்றி பால் விற்பவன் மூன்று தினத்தில் சூத்திரனாகிவிடுகின்றான்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு சாதிகளுக்குமேல் ஐந்தாவதுசாதி வேறு கிடையாதென்று கூறியுள்ள சாஸ்திரத்துள், சங்கரசாதி, அநலோமசாதி, பிரிதிலோமசாதி, அபோகவசாதி, க்ஷத்தாசாதி, உக்கிரசாதி, வைதேகசாதி, அந்தராளசாதி, அபீரசாதி, திக்குவணசாதி, மாகதசாதி, சூதசாதி, புல்கசசாதி, குக்குடசாதி, வேணசாதி, விராத்தியி சாதி, வாடாதானசாதி, புஷ்பதன்சாதி, சைகன்சாதி, நிச்சுவிசாதி, நடனசாதி, கறணன்சாதி, கஸன்சாதி, காரூசசாதி, விஜன்மாசாதி, மைத்திரசாதி, பாகியசாதி, தகயுசாதி, சையின்திரிபசாதி, மைத்திரேயனசாதி, மார்க்கவசாதி, காருவாரசாதி, வைதேகசாதி, பாண்டுசாதி, சோபாகசாதி, ஆகிண்டிசாதி, அந்தியாவசாதி, என்னும் முப்பத்தியேழு சாதிப்பெயர்களைக் குறித்திருக்கின்றார்கள்.

ஆயினும் பௌத்தர்கள் தொழில்களுக்கென்று வகுத்திருந்த பெயர்களே தற்காலம் வழங்கிவருகிறதன்றி இன்னூதன மதுசாஸ்திரத்தில் ஏற்படுத்தியுள்ள மேற்கூறிய சாதிகள் ஏதேனும் தற்காலம் வழங்கிவருகின்றதா, அதுவுமில்லை.

மநுஸ்மிருதியினுள்ளும் பராச ஸ்மிருதியினுள்ளும் பிராமணரென்றும், வேதியரென்றும் வழங்கும்படியானவர்களை கடவுள் வேள்வி செய்வதற்கே உண்டு செய்தாராம். அங்ஙனம் வேள்விசெய்துவரும் பிராமணர்கள் தற்காலமுண்டோ அதுவுமில்லை.

எந்த பிராமணன் வேதத்தை யோதாமல் வேறு நூல்களை ஓதுகின்றானோ அவனை சூத்திரனென்று அழைக்கக் குறிப்பிட்டிருக்கின்றது. ஆதலின் வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பிராமணர்களுண்டோ அதுவுமில்லை.

பிரம்மா பசுக்களை எக்கியத்திற்காகவே சிருட்டித்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அதன் ஆதரவைக் கொண்டு தற்கால பிராமணர்கள் பசுக்களைச் சுட்டுத் தின்று வருகின்றார்களா அதுவுமில்லை.

ஓர் சூத்திரனுக்கு மோட்சமாயினும், சீவனுமாயினும் வேண்டுமானால் பிராமணனையே தொழுதுவரவேண்டுமெனக் குறிப்பிட்டிருக்கின்றது. அதுபோல் சூத்திரர்கள் பிராமணனை தொழுது கொண்டு வருகின்றார்களா அதுவுமில்லை.

பிராமணர்கள் செம்படவர்களுடன் ஓர் மரத்தடியிலேனும் வாசஞ் செய்யப்படாதென்று குறித்திருக்கின்றார்கள். அதுபோல் செம்படவர்களுக்கு அருகே வாசஞ் செய்யாமலிருக்கின்றார்களோ அதுவுமில்லை.

சூத்திரன் அருகிலிருக்கும்போது வேதத்தை போதிக்கலாகாதென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதுபோல் சூத்திரர்கள் அருகே வேதத்தைப் போதிக்காமலிருக்கின்றார்களோ அதுவுமில்லை.

பிராமணனுக்கு சர்மாவென்றும், க்ஷத்திரியனுக்கு வர்மாவென்றும், வைசியனுக்கு பூதி என்றும் அவரவர்கள் பெயர்களினீற்றில் இத்தொடர் மொழிகளை சேர்த்து வழங்கிவரவேண்டும் என்று ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வகையேனும் வழங்கிவருகின்றனரோ அதுவுமில்லை.

பிராமணனுக்கு பருத்தி நூலும், க்ஷத்திரியனுக்கு சணப்ப நூலும், வைசியனுக்கு வெள்ளாட்டுமயிரினால் திரித்த நூலையும் அணைத்துக் கொள்ள வேண்டுமென்று குறித்திருக்கின்றார்கள். அதுபோல் க்ஷத்திரியர்கள் சணப்ப நூலையும், வைசியர்கள் வெள்ளாட்டுமயிரையும் பூநூலாக அணைவதுண்டோ அதுவுமில்லை.

- 2:7; சூலை 29, 1908 -

மநுதருமசாஸ்திரம் முதலத்தியாயம், 11-வது வசனம்.

87 வசனங்களில் பரமாத்துமா பிரம்மாவை சிருஷ்டித்தார், பிரம்மாதன் முகத்திலிருந்து பிராமணரை சிருஷ்டித்தாரென்றும் வரைந்திருக்கின்றார்கள்.