பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /569


மநுடவுருதோன்றி உலாவுதற்கு தேவனென்னுஞ் சிரேஷ்ட வஸ்த்வே அன்பு, ஈகை, சாந்தம், அறிவென்னும் பெயர் வைத்துக் கொண்டு அவ்வவ் உடலில் கட்டுப்பட்டிருக்கின்றபடியால் அந்த சிரேஷ்ட பொருள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அன்பினுருவாகவும், சாந்தவுருவாகவும், அறிவுருவாகவும் அமர்ந்துள்ளது என்று உணர்ந்து தன்னைத்தானறிந்து அன்பை பெருக்கியும், சாந்தத்தைப் பெருக்கியும், அறிவைப் பெருக்கியும் நித்தியசீவனுக்கு ஆளாவான்.

அங்ஙனமின்றி தனக்குப் புறம்பாக ஓர் சிரேஷ்ட, பொருள் இருக்கின்றதென்று எண்ணிக் கொள்ளுவானாயின் தனக்குள்ள காமம், வெகுளி, மயக்கமென்னும் முக்குற்றங்களாம் துற்செயல்களைப் பெருக்கிக் கொண்டு துன்பமுண்டாயகாலத்து தனக்குப் புறம்பாயுள்ள சிரேஷ்ட வஸ்து தன்னைக் காக்கும் என்று இரைஞ்சி மாளாதுக்கம் பெருகி பாபத்தின் சம்பளமாகும் மரணாவத்தையை அநுபவிப்பான்.

ஆதலின் ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் தேனென்னும் சிரேஷ்ட வஸ்துவின் சுவாசமென்னும் அறிபொருளிருக்கின்றது. அஃதறியா மறைப் பொருள் ஒன்றுமில்லை. நாம் அன்னியதாரத்தை இச்சித்தலையும், அன்னியர் பொருளை அபகரித்தலையும், அன்னியரை வஞ்சித்துத் துன்பப்படுதலையும், அன்னியரைக் கெடுக்க எண்ணுதலையும் அஃதறிந்து பாபத்தின் சம்பளத்தைக் கொடுத்து மாளாதுன்பத்திற்கு ஆளாக்கிவிடும் என்றும்,

ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் தேவனென்னும் சிரேஷ்ட வஸ்துவின் சுவாசமென்னும் அறிபொருள் இருக்கின்றதென்று பயந்து பாபத்தின் பீடமாகும் காம, வெகுளி, மயக்கங்களைப் பீடமிடவிடாமல் அகற்றி அறிவையும், அன்பையும், சாந்தத்தையும், ஈகையையும் பெருக்கி நீதியின் பாதையில் நடந்து நீதியினீரை அருந்தி புண்ணியத்தின் சம்பளமாம் நித்தியசீவனைப் பெற்று நீர்வாய்க்காலின் ஓரமாக நடப்பட்ட விருட்சம் இலையுதிராது காலத்திற் கனியைத்தந்து நீடித்திருப்பதுபோல் சருவசீவர்களுக்குத் தான் பெற்ற பலனாஞ் சீவகனிகளை அளித்து சுகம்பெறச்செய்து தானும் நித்திய சுகத்தில் இருப்பானென்றும் விளக்கி ஒவ்வொருமக்களும் சீர்பெறுவான் வேண்டி களிமண்ணுருவையே மநுட சீவர்களாகவும், சீவசுவாசத்தையே உண்மெய்ப்பொருள் என்று உணர்ந்து உலகப்பொருளை வெறுத்து தானேதானாம் சிரேஷ்டப்பொருளை சிந்திப்பதற்கேயாம்.

இதன் சார்பாய் கிறீஸ்துவும் பராபரன் என்னிலேயும், நான் அவரிலேயும், அதுபோல் உங்களுக்குள்ளாக நிறைந்திருக்கின்றான் என்றும் பேசுகிறவர்கள் நீங்களல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவரென்றும் அதனை அநுசரித்தே கொருந்தியரும் நீங்கள் பராபரனுடைய ஆலயமாயிருக்கின்றீர்கள் என்றும் வரைந்திருக்கின்றார்.

இத்தகையக் களிமண் வர்ணனையைப்போன்ற காமியவர்ணனையும் மற்றொன்றை வரைந்திருக்கின்றார்.

அதாவது இஸ்திரீயையே பரிமளிக்கும் நந்தவன கந்தவிருட்சமாகவும், அவளல்குலே இன்ப சுகமாம் நன்மெய் தின்மெய் யீயத்தக்கக் கனியாகவும், அக்கனியைப் புசிப்பதால் நன்மெயென்னும் புத்திரபாக்கிய விருத்தியும், தின்மெயாகும் அதேயிச்சையால் தேகம் க்ஷீணமடைந்து மரணமடைவான் என்றும் வகுத்திருக்கின்றார்.

இதையே புத்ததன்ம சாஸ்திரிகள் இஸ்திரீயின் தேகமத்தியபாகத்தில் அல்குல் என்னும் சர்ப்பசிறமுள்ளதென்றும் அதனிடத்தில் மாணிக்கத்திற் கொப்பாகிய தற்பலனென்னும் புத்திரபாக்கியமும் விஷத்திற்கொப்டாகிய தீயபலனென்னும் பிணி, மூப்புச், சாக்காடும் உண்டு என்று வகுத்திருக்கின்றார்கள்.

அதை அநுசரித்தே மோசே என்னும் மகாஞானியாரும் வர்ணனையால் இஸ்திரீயையே ஓர் நந்தவனமாகவும், அவள் மத்தியபாகத்தை நன்மெய், தினமெய் அறியத்தக்க விருட்சமாகவும், இன்பத்தையே ஓர் கனியாகவும் வர்ணித்து அக்கனியைப் புசிப்பதினால் நன்மெயென்னும் புத்திரசந்தான விருத்தியும் அக்கனியினின்பத்தை சதா கருதுவானாயின் சாவவே சாவானென்றும் வற்புறுத்திக் கூறியுள்ளார்.