576/அயோத்திதாசர் சிந்தனைகள்
மாற்கு சுவிசேஷம்: விசுவாசத்தினால் ஞானஸ்னானம் பெற்றவன் விஷத்திற்கு ஒப்பான ஒன்றைப் புசித்தபோதினும் சாகமாட்டானென்று வரைந்துள்ளபடியால் விசுவாசத்தின் ஞானிகளுக்கே அஃது வெள்ளென விளங்கும்.
அத்தேசத்தோர் கிறீஸ்து நமக்காகப் பாடுபட்டாரென்பதும் சத்தியமேயாம். அதாவது, கிறீஸ்துவானவர் தானடைந்த பேரானந்தத்தை தன்மட்டிலும் அனுபவித்துக் கொள்ளாமல் ஏனையோர் படுந்துக்கத்திற்கு இதங்கியத் தேயத்துள்ளோர் யாவருக்கும் போதிக்க ஆரம்பித்தபடியாலுந் தன்னூழ் பயனாலும் அப்பாடு நேர்ந்தது. அதை உணர்ந்த அத்தேச விவேகிகள் நமக்கு நல்லறம் போதிக்க ஏற்பட்டு பொல்லார்கள் கையால் நமக்காகப் பாடுபட்டாரென்று கூறியுள்ளார்கள். அம்மொழி அத்தேயத்தோருக்குப் பொருந்துமேயன்றி ஏனைய தேயத்தோர்க்குப் பொருந்தாவாம்.
- 2:31; சனவரி 13, 1909 -
புத்ததன்மத்தைத் தழுவிய ஞானானந்தம்
உலகத்தில் ஆதி சீர்திருத்த செல்வனாகத் தோன்றிய அவலோகித ஈசன் தன்னிற்றானே கண்டடைந்த ஞானானந்த சுகத்தை தன்மட்டில் அனுபவிக்காமல் மணிமேகலையில் “எண்ணருஞ் சக்கிரவாள மெங்கணும் அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை” என்று கூறியுள்ளவாறு பூவுலகெங்குஞ் சுற்றி புண்ணிய மீதென்றும், பாவமீதென்றும் விளக்கி பாப பெருக்கத்தால் உண்டாகும் பிறவிபெருக்கமாம் மரணதுக்கங்களையும், புண்ணிய பெருக்கத்தால் உண்டாகும் பிறவியற்ற மரணஜெயமாம் நிருவாண நித்திய நிலையையும் அருளிச்செய்து சுருதியாயிருந்த வாக்கியங்களை வரிவடிவாம் வடமொழி, தென்மொழி என்னும் அட்சரங்களையும் ஏற்படுத்தி என்றும் அழியாது மலைகளின் சிலாசாசனமாக தனது சத்தியதன்மத்தைப் பதிவுசெய்துவிட்டார்.
அவரது தன்மத்தைத் தழுவிய பரம்பரை அரசருள் அசோகச் சக்கிரவர்த்தி தனது ஆளுகைக்கு உட்பட்ட தேசங்களெங்கும் சுருதியாகவும், முதநூலாகவும் விளங்கிய முன்பதிப்பாம் சத்தியதன்மத்தை மற்றுமுள்ள மலைகளிலும், கம்பச் சிலைகளிலும் பதிவுசெய்து பரவச்செய்தார்.
அந்த சிலாசாசனப் பதிவுகளில் சிதைந்துள்ளவைகளை நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் மேலுமேலும் சீர்திருத்தி அந்த தன்மவாக்கியங்கள் அழியாவகைகளைச் செய்து வருகின்றார்கள்.
அந்த சத்தியதன்ம விளக்கங்கள் யாதெனில், உலகத்தில் தோன்றியுள்ள மநுமக்கள் ஒவ்வொருவரும் பாவச்செய்கை யீதென்றும், புண்ணியத் தவச்செய்கை ஈதென்றும் உணருமாறு நற்காட்சியில் நிலைத்தும், துற்காட்சியை அகற்றியும், நற்சிந்தையில் நிலைத்தும், துற்சிந்தையை அகற்றியும், துற்போதங்களைப் போக்கியும், நற்குடி என்று வாழ்தலும், துற்குடியென்னும் பெயர் அகற்றுதலும், நல்லூக்கத்தினிலைத்தலும் துன்முயற்சியை அகற்றுதலும், நல்லெண்ணங்களை விருத்தி செய்தலும், துன்னெண்ணங்கள் அணுகாவகைத் தேடலும், நல்லமதியில் வீற்றிருத்தலும், துன்னமதியில் நிலையாதிருத்தலும் ஆகிய துற்செயலை அகற்றி நற்செயலில் நிலைத்தலே மகாஞானிகளின் நற்கடைபிடியாகும்.
இத்தகைய வாக்கியத்தையும், செயலையும் சிரமேற்கொண்ட நமது ஞானத்தாயாகி அம்பிகை என்னும் ஔவையும் தனது முதல்வாசக நூலுள், அறன் செயல் விரும்பென்றுங் கூறியுள்ளாள். அதாவது, அறன்-தன்மச்சக்கிர பிரவர்த்தனனின், செயல் செய்கையை, விரும்பு - நீ ஆசை கொள்ளு என்பதேயாம். ஆசை கொள்ளும் செயலாகிய பற்று யாதெனில் உலக பந்த பாசப்பற்றுக்களாகும் துற்செயல்களற்று உலகம் துறந்த பற்றற்றோன் பற்றாகும் நற்காட்சி, நற்சிந்தை, நல்வசனம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம் நல்லெண்ணம், நல்லமதியாகிய சுத்தஞானமே ஆகும்.
திரிக்குறள்