600/அயோத்திதாசர் சிந்தனைகள்
அவருடைய காலத்தில் பாலிபாஷையில் சகல வாக்கியங்களையும் வழங்கிவந்த போதிலும் வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே வழங்கி வந்தார்கள்.
வரிவடிவமின்றி சோதிகளிருக்கும் இடங்களின் நிலைகளையும், அதன் குணாகுணங்களையும் ஆராய்ந்து உலகத்தின் சீவராசிகளுக்கு முதற்பலனளிப்பது சூரியனாக விளங்கியபடியால் அவற்றிற்கு ஆதிவாரமென்றும், இரண்டாவது பலனளிப்பது சந்திரனாதலின் சோமவாரமென்றும், செவ்வாயென மூன்றாம் பலனளிப்பது பூமியாதலின் அவற்றிற்கு மங்களவாரமென்றும், புதனென நான்காம் பலனளிப்பது நீர் ஆதலின் அவற்றிற்கு புதவாரமென்றும், வியாழமென ஐந்தாம் பலனளிப்பது காற்றாதலின் அவற்றிற்கு குருவாரமென்றும், வெள்ளியென ஆறாம்பலனளிப்பது ஆகாயமாதலின் சுக்கிரவாரமென்றும், சனியாகிய ஏழாம்பலனளிப்பது இருளாதலின் சனிவாரமென்றுங் கூறி இத்தகைய பதினான்கு வாரங்கொண்டதை பட்சமென்றும். அமரவாசி, பூர்வவாசியாம் அமரபட்சம் பூர்வபட்சம் இரண்டு கொண்டதை மாதமென்றும், இம்மாதம் ஒவ்வொன்றிலும் சூரியன் தங்கி நிற்கும் நிலையை மேஷராசி என்றும், இரிஷபராசி என்றும் பன்னிரண்டு ராசிகளை வகுத்து அதன் மொத்த பெயர் வருடமென்றும் இவ்வகை வருடம் அறுபதுவரையில் அரசாண்டு கலியுலகமென்னும் பெயரால் தான் இருபதாவது வயதிற்குமேல் இராட்சியபாரந்தாங்கி ஒவ்வோர் வருடமுங் கண்டறிந்த பலனை கணித்து தருதியாகவே விளக்கி, அட்சய-பிரபவ-விபவ என்னும் அறுபது நாமங்களளித்து அறுபதாவது வருட முடிவில் இறந்துவிட்டபடியால் கலிவாகுச் சக்கிரவர்த்தி அரசுக்கு வந்தவருடமுதல் மரணமடைந்த அறுபதுவருடத்தையே பீடமாகக் கொண்டு சாக்கை வம்மிஷவரிசையோரால் கலியுலக மென்னும் பெயரளித்து அதன் கணிதவட்டம் இந்த செளமிய வருடத்துடன் ஐயாயிரத்து பத்து வருடமாகின்றது. இதன் விவரங்களை பாலிபாஷையினின்று வரைந்து திரியாங்கமென்றும் பஞ்சாங்கமென்றும் வழங்கும்படியான கணித விவரங்களை தீபேத் தேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், சீனதேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், பிரம்ம தேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், தெரிந்துக்கொள்ளலாம்.
பௌத்தர்களாகிய சாக்கையர்களே இக்கணித நூற்களை வகுத்தும், விருத்திசெய்தும் வந்தவர்களாதலின் இக்கணித முதநூற்களாம் திரியாங்கம், பஞ்சாங்கம் முதலியவைகளைப் பெரும்பாலும் பௌத்ததேசத்தோர்களே வழங்கிவருவதைக் காணலாம்.
அவற்றை அநுசரித்தே மற்றதேசத்தோர்களும், பாஷைக்காரர்களும் காலங்களை வழங்கிவருகின்றார்கள்.
இதன் விவரங்களை சாக்கையர் கணிதகரண்டகம் வெளிவருங்கால் காலக்குறிப்புகளை எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.
- 3:33; சனவரி 26, 1910 -
20. இந்திரர் தேச சரித்திரம்
இந்திரம் என்னும் மொழி ஐந்திரம் என்னும் மொழியின் திரிபாம். அதாவது, மகதநாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்கிரவர்த்தியவர்கள் கல்லாலடியில் வீற்று ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரரென்று (ஐ-இ) யாகத் திரிந்து இந்திரரென வழங்கி அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திரவியாரமென்றும் அவரது உற்சாகங் கொண்டாடுங் காலத்திற்கு இந்திரவிழாநாள், இந்திரவிழாக்கோலென்றும், இந்திரவிழாக் கொண்டாடுங் காலங்களிலெல்லாம் மழைப் பெய்வதின் அநுபவங்கண்டு மழைக்குமுன் காட்சியாகும் வானவில்லிற்கு இந்திரதனுசென்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசஞ்செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கிவந்தார்கள்.
பூர்வம் இத்தேசத்தை பரதகண்டம் என்று வழங்கியதும் உண்டு.