632 / அயோத்திதாசர் சிந்தனைகள்
வந்து சேர்ந்தீர்கள். நீங்களெடுத்துக்கொண்ட பிராமணவேஷத்தால் சீவனம் சரிகட்டி வருகின்றதா வென்றார் அதற்கு யாதொரு மாறுத்திரமுஞ் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொண்டார்கள். அவர்களின் மெளனத்தைக்கண்ட அஸ்வகோஷர் நந்தனைநோக்கி அரசே, இவர்கள் எடுத்துள்ள பிராமண வேஷமானது ஞான நூற்களைக் கற்று நன்குணர்ந்த மேன்மக்களுக்கு விளங்குமேயன்றி, ஞானமின்னது அஞ்ஞானமின்னதென்று விளங்காதவர்கள் இவர்களது வேஷத்தைக் கண்டறிவது மிக்க அரிதேயாகும். காரணமோவென்னில் உலக ஆசாபாசப் பற்றுக்களில் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையென்னும் மூவாசைகளற்று தமோகுணம், ரசோகுணமிரண்டும் நசிந்து தண்மெயுண்டாகி சருவுசீவர்களுக்கும் உபகாரியாய பிரம்மணம் வீசியபோது பிராமணனென சகலருங் கொண்டாடுவதுடன் அரசர்கள் முதல் பெரியோர்வரை அவருக்கு வந்தன வழிபாடுகள் செய்து அவரது வேணச் செயலுக்குரியப் பொருளும் உதவி செய்து வருவது வழக்கமாகும். அவரது தெரிசனமாயினும், பரிசனமாயினும் உண்டாயவுடன் சகல் உபாதைகளும் நீங்கும்படியான சிறந்த செயலாம் பிரம மணத்தால் பிராமணரென்றும் பெயர் தோன்றியதுமன்றி, தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகியப் பரிநிருவாண இரு வகைப் பிறப்பினைக்கொண்டு இருபிறப்பாளரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.
உலகத்தில் தோன்றியுள்ள சகல சீவர்களும் பிறப்பு, பிணி, மூப்பு சாக்காடென்னும் நான்வகைத் துக்கத்தில் வாதைப்படுவது பிரத்தியட்ச அனுபவமாதலின் அத்தகைய நான்குவகைத் துக்கத்தினின்று விடுபட்டு சதா விழிப்பிலும், நித்தியானந்தத்திலும் இருப்பவர்களாதலின் பாசபந்தத்திற் கட்டுபட்டுள்ள மதுக்கள் யாவரும் அவர்களை மகட பாஷையில் அறஹத்துக்களென்றும், சகடபாஷையில் பிராமணர்களென்றும் திராவிட பாஷையில் அந்தணர் அழைத்து அவர்களது அழியா சிறப்பால் அடிபணிந்தும் வந்தார்கள்.
இதோ உமதெதிரில் பெருங்கூட்டமாகப் பெண்டுபிள்ளைகளுடன் வந்து நின்று கொண்டு தங்கள் யாவரையும் பிராமணர்களென்று பொய்யைச் சொல்லி புலம்பித்திரியும் இக்கூட்டத்தோர் யாவரும் புருசீகதேசத்தோர்களாகும். சிலநாட்களுக்கு முன்பு வங்கருக்கும், புருசீகருக்கும் பெரும் போருண்டான போது வங்கரால் புருசீகர் முறியடிப்பட்டு சிந்தூரல் நதிக்கரையோரமாம் குமானிட தேசஞ் சார்ந்து கரையோர மண்ணைத் துளைத்து அவைகளிற் குடியிருந்துகொண்டு இக்கரைக்கு வந்து ஆந்தரம், கன்னடம், மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு வகுப்பார்களிடம் யாசகஞ் செய்துக் கொண்டுபோய் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றிவந்தார்கள். இத்தேசத்தோருள் பெரும்பாலும் வருணத்தில் கருப்பும், மானிறமும் பெற்றவர்களாதலின் புருசீகர்களின் மிக்க வெளுப்புள்ள தேகத்தைக் கண்டவுடன் ஆட்சரியமாகப் பிச்சையளிப்பதுடன் பெண்டு பிள்ளைகளுடன் மாறிமாறி ஒருகாலைத் தூக்கியாடும் ஆரியக்கூத்திற்கும் ஆனந்தித்து அல்லவரும் பிச்சையளித்து ஆதரித்துவந்தார்கள். இத்தகைய ஆரியக்கூத்தாடி பிச்சையேற்பினும் காரியத்தின் மீது கண்ணுடையவர்களாய், தங்களுடைய தேசத்தில் பேசிவரும் துளுவ பாஷையைப் பேசுவதைவிட்டு சகடபாஷையாம் வடமொழியும், திராவிட பாஷையாந் தமிழினையும் பேச ஆரம்பித்துக் கொண்டவுடன் அப்பாஷைகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டு வடமொழியின் சுலோகங்களைப் பொருளறியாமற் சொல்லித் தங்கள் பிராமணவேஷத்தைப் பெருக்கிக்கொண்டே வருவதுடன் காரியமுற்ற சிற்றரசரை வசப்படுத்திக்கொண்டு அவர்களது பூமியில் அவ்வரசர்கள் உயிருடன் இருப்பினும் இறப்பினும் அவர்கள் பெயரால் ஒவ்வோர் கட்டிடங்களைக் கட்டி கற்களினால் அவர்களைப்போன்ற சிலைகளைச் செய்து அவர்கள் குடும்பத்தோரை வந்து தொழும்படிச் செய்வதுடன் ஏனையோரையுந் தொழும்படிச்செய்து பிச்சையேற்றுப் பொருள்பறிப்பதுடன் தொழூஉம் தட்சணையாலும் பொருள் சம்பாதித்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள்.