சமூகம் / 639
இவர்கள் அக்கினியை வளர்த்துவருந் தந்திரங்களையும், அவ்விடத்தோர் அக்கினியைத் தொழுதுவருஞ் செயல்களையும் உமது கண்களால் நோக்குவீராயின் இவர்கள் யாவரும் நம்முடைய தேசத்தோரன்று, புறதேசத்தோரென்பது தெள்ளற விளங்கும்.
ஈதன்றி நம்முடைய தேசக் கட்டிடப் போக்குகளையும், அவர்களது தேசக் கட்டிடச் சாயல்களையுங் கண்டறியவேண்டுமாயின் புன்னாட்டிற்கு வடகிழக்கே இவர்களே கூடி ஓர் கட்டிடங் கட்டிவருகின்றார்கள். இதன் சாயலையும், அவ்விடத்திய கட்டிடத்தின் சாயலையுங் காண்பீராயின் இக் கட்டிடச்சாயலே அக்கட்டிடச் சாயலென்றும், இவர்களே அவர்களென்பதும், அவர்களே இவர்கள் என்பதும் தெள்ளற விளங்கிப்போவதுடன் இத்தேசப் பூர்வ பௌத்தர்களுக்கும் இவ்வேஷப்பிராமணர்களுக்கும் உள்ளத் தீராப்பகையினாலும் இவர்களைப் புறநாட்டாரென்றே துணிந்து கூறல் வேண்டுமென சொல்லிவருங்கால் அரசனெழுந்து அஸ்வகோஷரை வணங்கி, அறஹத்தோ, இத்தேசப்பௌத்தர்களுக்கும் இப்புருசீகர்களுக்கும் தீராப்பகை உண்டாயக் காரணமென்னை, மத்தியிலெவரும் அவற்றை நீக்காதச் செயலென்னை, அவைகளை விளக்கி யாட்கொள்ளவேண்டுமென்றடி பணிந்தான். அவற்றை வினவிய அஸ்வகோஷர் ஆனந்தமுற்று பகையுண்டாய தன் காரண காரியங்களை சுருக்கத்தில் விளக்க ஆரம்பித்தார்.
அரசே, சகல உற்பத்திக்குக் காரணமும் சகல தோற்றத்திற்கு மூலமும், சகல மறைவுக்கு ஆதாரமுமாயிருப்பது ஏதுக்களுக்குத் தக்க நிகழ்ச்சிகளேயாம். அத்தகைய நிகழ்ச்சியில் வானம் பெய்து பூமியிற் புற்பூண்டுகள் தோன்றி, புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றி, புழுக்கிடாதிகளினின்று மட்சம், பட்சிகள் தோன்றி, மட்சம் பட்சிகளினின்று ஊர்வனத் தவழ்வன தோன்றி, ஊர்வனத் தவழ்வனத்தினின்று வானர விலங்காதிகள் தோன்றி, நரர் மக்களின்று புலன் தென்பட்ட தென்புலத்தார் தேவர் தோன்றி உலக சீர்திருத்தங்களைச் செய்துவருதலில் ஒவ்வொரு சீவராசிகளும் நாளுக்குநாள் மேலுக்குமேல் உயர்ந்து கொண்டே வருவதை அறியாது அவைகளைத் துன்பப்படுத்தியும், கொலைச் செய்தும் வருவதாயின் அவைகளின் மேன் நோக்க சுகங்களற்று மாளா துக்கத்தில் சுழல்வதன்றி அவைகளைத் துன்பஞ் செய்வோரும், கொலைச் செய்வோரும் மாளாப் பிறவியிற் சுழன்று தீராக்கவலையில் ஆழ்வரென்று பகவன் போதித்துள்ளபடியால் அம்மொழிகளை சிரமேற்றொழுகும் பௌத்த உபாசகர்கள் முன்னிலையில் இவ்வேஷப் பிராமணர்கள் ஆடுகளையும், மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டுக் கொன்றுத் தின்னுங் கொடூரச் செயல்களைக்கண்டு சகியாது இவர்களை மிலைச்சரென்றும், புலால் புசிக்கும் பிலையரென்றுங் கூறி பெளத்தவுபாசகர்கள் சேர்ந்து வாழும் சேரிகளுக்குள் இவர்களை வரவிடாது சாணச்சட்டியையுடைத்து அடித்துத் துரத்துவது ஓர் விரோதமாகும்.
இரண்டாவது விரோதமோவென்னில், பெளத்த உபாசகர்கள் பகவனது போதனையின்படி இராகத் துவேஷ மோகங்களை மீறவிடாது மிதாகாரம் புசித்து மாமிஷ பட்சணங்களை விலக்கியும், மதியை மயக்கும் சுராபானங்களை அகற்றியும் சுத்த சீலத்திலிருப்பவர்களாதலின் அவர்களது மத்தியில் இவ்வேஷப் பிராமணர்களாம் புருசீகர்கள் சுராபானமருந்தி மாமிஷங்களைப்புசித்து சுத்தசீலமற்று நாணாவொழுக்கத்திலிருப்பதுமன்றி சிற்றரசர்களையும் கனவான்களையும் அடுத்து இஸ்திரிகளும் புருஷர்களும் நாணமின்றி ஒரு காலைத் தூக்கி மறுகாலைத் தாழ்த்துவதும், மறுகாலைத் தூக்கி மற்றொருகாலைத் தாழ்த்தி கைகொட்டி ஆடுவதுமாகிய ஆரியக் கூத்தென்னுமோர் கூத்தாடி அவர்களை வசப்படுத்திக் கொள்ளுவதுடன் தங்கள் வேஷப்பிராமணக் காரியத்திலுங் கருத்தாயிருப்பதைக் காணும் பௌத்த உபாசகர்களுக்கு மனஞ்சகியாது இவ்வாரியக் கூத்தர்களாகிய மிலேச்சர்கள் இன்னுமித்தேசத்துள் பெருகிவிடுவார்களாயின் சுராபானமும் மாமிஷ பட்சணமும் பெருகி இத்தேச சுத்தசீலர்கள் யாவரும் அசுத்தசீலமுற்று