அரசியல் / 21
பலதேசங்களுக்கும் சிதறி ஓடிப்போம்படி செய்து விட்டார்கள். அதன்பின் குயின் விக்டோரியாளம்மன் அரசாட்சியில் அதே சட்டத்திலுள்ள தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்னும் வரம்பின்றி குரூரச்செய்கை யுள்ளவனை தொழுக்கட்டையில் போடலாமென்று மாற்றிவிட்டார்கள். இவ்வகை நீதிக்கு வழுவான சட்டங்களை மாற்றியதுமன்றி தாசில்தாரர்களுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுத்திருந்ததினால் குடிகளை அதிக அக்கிரம் செய்கின்றார்கள் என்று அறிந்து தாசில்தார் அதிகாரத்தை வேறாகவும் மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை வேறாகவும் மாற்றிவிட்டார். அதினால் ஏழைக் குடிகள் யாவரும் கிராமங்களில் கவலையற்றிருக்கின்றார்கள்.
இவ்வகை விசாரிணை மிகுத்த நமது கருணை தங்கிய ராஜாங்கத்தார் தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்னும் பேதத்தையும் தொழுக்கட்டை சத்திரமென்னுஞ் சட்டத்தையும் ஆலோசனைக்குக் கொண்டுவந்திருப்பது ஆச்சரியமாயிருக்கின்றது. அதேனென்றால் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் நீதியானது தன்னவர் அன்னியர் என்னும் பட்சபாதம் இல்லாமல் இருந்து தங்கள் ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கு ஒருக்கண்ணிற் சுண்ணாம்பும் ஒருக்கண்ணில் வெண்ணெயையும் தடவுவதுபோல் தாழ்ந்த சாதியோருக்குத் தொழுக்கட்டையும், உயர்ந்த சாதியோருக்கு வெறுங்காவலுமாகிய பட்சபாத தண்டனையை ஆலோசிப்பது ஆச்சரியமாகக் காணப்படுகின்றது.
இத்தகைய உயர்ந்த சாதி தாழ்ந்தசாதி என்று ஏற்பட்டக் காரணம், தங்களுக்கு எதிரிகளாயுள்ளவர் மீதுள்ளப் பொறாமெயினால் சிலரைத் தாழ்ந்த சாதியென்றும் சோம்பேரிகளாய் வயிறு வளர்ப்பதற்குப் பெரியசாதிகள் என்றும் எற்படுத்திக் கொண்டார்களேயன்றி எதார்த்தத்தில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது.
அங்ஙனமிருக்குமாயின் உயர்ந்த சாதியான் யார். தாழ்ந்த சாதியான் யார், எச்செயலால் உயர்ந்த சாதியானான், எச்செயலால் தாழ்ந்த சாதியானான். பிச்சை ஏற்பவன் பெரியசாதியும் பயிரிடுபவன் சின்னசாதியானக் காரணம் யாதென, உயர்ந்த சாதி என்போர்களையும் தாழ்ந்த சாதி என்போர்களையும் ராஜாங்கத்தோர் நேரில் நிறுத்தி விசாரிணைச்செய்து இன்னாரென்றுந் தெரிந்துக்கொண்டபின்பு உயர்ந்த சாதி தாழ்ந்த சாதிச் சட்டத்தை ஆலோசிக்கவேண்டியது அவசியமாகும்.
தாழ்ந்தசாதியோர் யாரென்றும் உயர்ந்த சாதியோர் யாரென்றும் கண்டறியாமல் சட்டத்தை நிருமிப்பார்களாயின் தாசில்தார்களுக்கு மாஜிஸ்டிரேட்டு அதிகாரங் கொடுத்திருந்த காலத்தில் குடிகளுக்கு உண்டாயிருந்த இடுக்கங்களைப் பார்க்கினும் வில்லேஜ் முநிசிப்புகளுக்கு சொற்ப மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுத்து விட்டாலோ குரங்குக்கையில் வாளைக்கொடுத்து காவல்வைத்தக்கதைபோல் முடிவதுமன்றி முநிசிப்புவீட்டுக் கோழிமுட்டை குடித்தினக்காரர்கள். அம்மியை உடைக்குமென்னும் பழமொழியும் பலிதமாகும். நன்கு வாசித்த தாசில்தாரர்களிடங் கொடுத்திருந்த மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை மாற்றிவிட்ட ராஜாங்கத்தார் அவரினும் அந்தஸ்துக் குறைந்த முநிசிப்புகளிடம் மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுப்பது நியாயமாகக் காணவில்லை.
தற்காலம் ஏழைக்குடிகளுக்குள்ள சில இடுக்கண்கள் நீங்கி தங்கள் தங்கள் பூமிகளை சீர்ப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். இத்தகைய காலத்தில் தாழ்ந்தசாதிக்குத் தொழுவும் உயர்ந்தசாதிக்கு வெறுங்காவலும் ஏற்படுமாயின் ஏழைக்குடிகள் உள்ள பூமிகளையும் விட்டுவிட்டு ஓட வேண்டியதேயாம். பி.ஏ., எம்.ஏ வாசித்தவர்களுடைய ஆலோசனைச் செய்கையை ஓர் (லோயர் செக்கன்றி) பையன் நிறைவேற்றுவானென்றால் அது பொருந்துமோ, ஒருக்காலும் பொருந்தா. சாதியையே பெருமெய் பாராட்டித் திரிபவர்களும் சொற்பக் கல்வியுள்ளவர்களுமாகிய முநிசிப்புகளிடம் மாஜிஸ்டிரேட் அதிகாரங்கொடுப்பது ஆபத்தாகவே முடியும்.