பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

680 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அநுபவசித்தமாகும். “மனையுள் விருட்சமும் மக்கள் கல்வியும்மாறா சுகந்தரு” மென்னும் பழமொழிக்கிணங்க ஒவ்வொருவர் மனையிலும் சொற்ப துண்டு காலிபூமிகளிருந்தபோதினும் அதை வெறுமனேவிடாது ஓர்விருட்சத்தை வைத்து வளர்க்க வேண்டுகிறோம்.

- 4:2; சூன் 22, 1910 -


22. கல்வி கைத்தொழில் பயிடுரிந்தொழில் வியாபாரத்தொழில்

இந்திய தேசத்தின் கல்வியை முதலாவதாராய்வோமாக. கலாசாலை களெனக் குறிப்பிட்டு ஆதியிற் கல்வியையூட்டி சிறுவர்களுக்கு விவேக விருத்தி செய்துவந்தவர்கள், சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களேயாகும். மற்றொருவராலுங் கல்விவிருத்தி பெற்றது கிடையாது. அதற்குப் பகரமாய் பெளத்தர்களே கல்வி விருத்திக்கு மூலமென்பதை நாளது வரையில் கலாசாலைகளுக்கு பள்ளிக்கூடங்களென வழங்கும் பெயரே போதுஞ்சான்றாம். அதாவது, புத்தவிகாரமாங் கூடங்களுக்கு, திராவிட மொழியில் அறவோர் பள்ளியென்றும், அறப்பள்ளியென்றும், புத்தர் பள்ளியென்றும் வழங்கி வந்தவற்றை ஒவ்வோர் பெளத்த சரித்திர புத்தகங்களிலும் காணலாம். புத்தசங்கத்தோராம் சமண முநிவர்கள் வாசஞ்செய்திருந்த அறப்பள்ளிகளிலேயே, சிறுவர்களுக்குப் பாடங் கற்பித்துவந்ததுகொண்டு பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமென பூர்வத்திலும் வழங்கி நாளதுவரையிலும் வழங்கி வருகின்றார்கள். ஈதன்றி தற்காலம் இத்தேசத்தோர் கல்வி கற்று விவேகவிருத்தி பெற்று வரும் கலை நூற்களாம் இலக்கிய நூற்களும், வைத்திய நூற்களும் மக்கள் விவேக விருத்தி பெறவேண்டுமென்னுங் கருணை கொண்ட புத்தரங்கத்தோராகும் சமண முநிவர்களால் வரைந்துள்ளவைகளே அன்றி மற்றொருவராலும் வரைந்துள்ள விவேக விருத்தி நூற்கள் கிடையாது. ஆதலின் இத்தேசத்தோருக்குக் கல்வியைக் கற்பித்து நீதியின் விருத்தியையும் ஞானத்தின் விருத்தியையும் பெறச்செய்து குருவின் பக்தியிலும் இராஜ விசுவாசத்திலுங் குடிகளை நிலைக்கச்செய்து வந்தவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களேயாவர்.

இரண்டாவது, கைத்தொழில் விருத்தியை ஆலோசிப்போமாக. இத்தேச மெங்கும் புத்ததன்மம் பரவியிருந்த காலத்தில் கைத்தொழில் விருத்தி பெற்றோருக்கு வடமொழியில் சூஸ்திரரென்னும் பெயரை அளித்திருந்தார்கள். அதாவது, தங்கள் கைகளையுங் கால்களையும் ஓர் சூஸ்திரக் கருவிகளாகக்கொண்டு மரக்கருவி சூஸ்திரங்களையும், இரும்புக் கருவி சூஸ்திரங்களையும் விருத்திசெய்து அதனாதரவால் மாடமாளிகைகளையுங்கூட கோபுரங்களையுங்கட்டி பலவகைவருண சித்திரங்களால் கண்களிக்கச்செய்தவர்களும் அழியாத உலோகபாத்திரங்களை விருத்தி செய்தவர்களும் வஸ்திரங்களை நெய்து பலதேசங்களுக்கும் அனுப்பிக் கீர்த்திப் பெற்றவர்களும் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களே யாவர். அவைகளுக்குப் பகரமாய் தற்கால ஆர்ச்சலாஜிக்கல் சர்வேயர்களால் கண்டுபிடித்து வரும் புத்த வியாரக்கட்டிடங்களும் அவைகளுள் வரைந்திருக்கும் வருண பதுமெய்களும் பஞ்சலோகப் பாத்திரங்களும் சந்தன, தந்த பெட்டகங்களும் மேல் நாட்டிற்குச் சென்று கீர்த்திபெற்றுள்ள பட்டாடைகளும் தற்காலம் மகமதியர்களால் மஃமல்லென வழங்கிவருவதுமானவை திராவிட மல்லர்களால் நெசியப்பெற்று மேல் நாடுகளெங்கும் புகழப்பெற்ற சல்லா வஸ்திரங்களுமே போதுஞ் சான்றாம்.

மூன்றாவது, வியாபார விருத்தியை ஆலோசிப்போமாக. இந்தியதேச முழுவதும் புத்த தன்மம் பரவியிருந்த காலத்தில், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறி வியாபாரஞ் செய்பவர்களுக்கு வடமொழியில் வைசியரென்றும், தென் மொழியில் வாணிபரென்றும், செட்டியென்றும், ரெட்டியென்றும், வியாபாரக் காரணப் பெயர்களைப் பெற்றிருந்தார்கள். அதாவது, பால், நெய் வியாபாரஞ்செய்வோரை கௌ வைசியரென்றும்,