பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 691


அன்னோர் சமயம் எச்சமயமாகியும் அவர்கள் குருக்கள் மெய்க் குருக்களாகவும் இருந்து தங்கள் சமயத்தைப் பெருகவைப்பது மெய்யாயின், ஓர் மகமதியன் அவர்கள் குருவையடுத்து ஐயா தங்கள் விஷ்ணுசாமி சிவன் சாமியை விசேஷசாமிகளென்றறிந்தேன். அவர்களைத் தொழவேண்டுமென்னும் அவாக் கொண்டு வந்தேன் என்னைப் புறம்பாக்காது உங்களில் ஒருவனாக சேர்த்துக் கோவிலுள்ளே சென்று தொழும்படியான உத்திரவைக் கொடுங்கோளென்று கேட்பானாயின் அவனை சேர்த்துக்கொள்ளுவரோ, இல்லை. ஏனையோரை சேர்க்கா கூட்டம் பெருகுமோ. தங்களைப்போல் சகலரும் முத்திப் பெறவேண்டுமென்னும் பொதுநலச் செயலில்லா சமயமும் ஓர் சமயமாமோ, இத்தகைய ஒற்றுமெயற்ற சமயங்களினாலும் ஒற்றுமெய்க்கேட்டிற்கு உறுதிபீடமாகும் சாதிபேதங்களினாலும் தேசங் கெட்டுப் பாழடைவதுடன் தேசத்தோரும் சீரழிந்து வருவதை விளக்கும் பத்திரிகையை விரோதிப்பதுந் தூற்றுவதும் வீணேயாம்.

- 4:19; அக்டோபர் 19, 1910 -


31. குரங்கினின்றே மக்கள் தோன்றியுள்ளார்கள்

இஃதே அநுபவம். ஆய்ந்தெழுதும் பெளத்தசாஸ்திரிகளின் சம்மதமன்றி தற்காலம் உலகத்தில் தோன்றியுள்ள மநுக்களில் வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்ககமும் நிறைந்து விவேகமிகுத்த வித்தியாபுருஷர்களாக விளங்கும் ஆங்கில வகுப்பாருக்கு உட்பட்ட டார்வினென்னும் துரைமகனின் சம்மதமும் அதுவேயாம்.

பூர்வ பௌத்த சாஸ்திரி சம்மதம் யாதெனில், உலக தோற்றத்துள் தேவர், மக்கள், நரர் உயர்திணை என்றும்; மற்றவை அஃரிணையென்றும் வகுத்துள்ளவைகளில் வால் நரர் வானரரென்னுங் குரங்கினின்று வாலற்று, கிஞ்சித்து சீலமுண்டாகி நரரென்னும் பெயர்பெற்று மானமுண்டாகி மக்களிற் சேர்ந்து விவேக முதிர்ந்து தேவர்களானார்களென்பதேயாம். இதுவே காட்சிக்கும், அநுபவத்திற்கும் பொருந்தியதாகும்.

வித்தியாபுருடராகிய டார்வினென்னும் துரைமகனின் சம்மதமோ வென்னில், வானின்று மழைபெய்தவுடன் பூமியியின்று புற்பூண்டுகள் தோன்றுவதும், புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றுவதும், புழுக்கீடாதிகளினின்று மட்சம் பட்சிகள் தோன்றுவதும், மட்சம் பட்சிகளினின்று ஊர்வன மிருகாதிகள் தோன்றுவதுமான காட்சியில் குரங்கென்னும் சீவனுள்சிலதுக்குவாலிருந்தும் ஒராங்கடானென்னும் குரங்கிற்கு வாலற்றும் நாளுக்குநாள் உரோமங்களுதிர்ந்து சருமத்திறந்து நாணமுதிர்ந்து மக்கள் சாயலடைவதுமாய தோற்றங்களை ஆய்ந்து குரங்கினின்றே மக்கள் தோன்றியுள்ளாரென வற்புறுத்திக் கூறியிருக்கின்றார். அதற்குப் பகரமாக வடமேற்கு மாகாணங்களில் வோராங்டன் என்னும் வாலற்றக் குரங்குகளே உரோமங்கள் உதிர்ந்து காட்டுமனிதர்களென உலாவுவதை யாத்திரா சரித்திரங்களிற் காணலாம்.

இத்தகைய அநுபவங்களையும், காட்சிகளையும், கண்டறியாதோர் உலகதோற்றக் காலவரைகளையும், மநுக்கள்தோற்றக் காலவரைகளையும் கணிக்கற்பாலதோ இல்லை. ஐரோப்பிய சாஸ்திரிகளும் அமேரிக்கா சாஸ்திரிகளும் தங்களது கணிதவாராய்ச்சியால் உலகத்தோற்றமுண்டாகி 1,000,000 இப்பத்துலட்சம்போல் எத்தனையோ 10 லட்சவருடமிருக்க வேண்டுமென வரைந்திருக்க உலகமுண்டாகி 6,000 வருடமாயிற்று என்றால் விவேகமிகுத்த தத்துவ சாஸ்திரிகளும் கணிதசாஸ்திரிகளும் ஏற்பார்களோ. அவ்வருடத்தையே ஏற்காதோர் அக்காலந்தோற்றியவர்களையே ஆதிமக்களென்று அங்கீகரிப்பர்களோ, ஒருக்காலும் அங்கீகரிக்கமாட்டார்கள், அங்ஙனம் விவேகமும், பெருந்தகைமெயு மிகுத்த சாஸ்திரிகள் சம்மதிக்காதபோது மற்றவர்கள் சம்மதிப்பது மதிமயக்கேயாகும். அத்தகைய மதிமயக்கத்தால் நரர் இன்னா ரென்றும், மக்கள் இன்னாரென்றும், தேவர்