அரசியல் / 27
மறவாதீர்கள் - மறவாதீர்கள். சுத்தஜலம் மொண்டுகுடிக்கவிடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள், மோசம் போகாதீர்கள். ஆங்கிலேயர்களாகும் துரைமக்களுக்கு ஏதேனும் இடுக்கம் நேரிடுமாயின் உங்கட் பிராணனை முன்பு கொடுத்து அவர்கள் இடுக்கங்களை நீக்கிவையுங்கள். அதுதான் அவர்கள் செய்துவைத்த நன்றிக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு. உங்கள் சத்துருக்கள் செய்த தீங்குகளை மறந்துவிடுங்கள். மித்துருக்கள் செய்த நன்றிகளை மறவாதீர்கள் - என்றும் மறவாதீர்கள்.
- 1:49; மே 20, 1908 -
14. மாற்றான்களுக்கு மலமெடுக்கும் வேலைவந்தது போலும்
1908வருஷம் மேமீ 16உ வெளிவந்த சுதேசமித்திரன் இரண்டாம் பக்கம் மூன்றாவது கலம் ஆறாவது வரியில் (தன்னுடைய மலமூத்திராதிகளைத் தானே எடுக்கும்படி அடிக்கின்றார்களாம்) எனப் பரிந்தெழுதியுள்ளப் பரிதாபத்தைக்கண்டு மிக்க வியப்புற்றோம்.
அஃதேனென்பீரேல், ஜெயில் கோர்ட்டில் பறையனை மலமெடுக்குந் தொழிலில் விடும்படியான எத்தனமும் செய்கையும் நிறைவேற்றி வந்த காலத்தில் இந்த பரிதாபம் இல்லாமற் போனதென்னோ. இத்தகைய சாதிபேதத்திற்கும் குரூரச் செயல்களுக்கும் மேன்மக்களாகும் ஆங்கிலேயர் காரணமல்லவே. பொறாமெயும், வஞ்சினமும், துற்குணமும் மிகுத்த கீழ்மக்களே காரணம் அன்றோ.
இத்தகையக் கீழ்மக்கள் செயல்களைக் கண்டித்து சீர்படுத்தாது கண்குளிரப் பார்த்திருக்குங் கனவான்கள் மற்றுமுள்ள சாதியார் மலசலாதிகள் எடுப்பதை மனஞ்சகியாமல் வரைந்துள்ளதைக் கண்டதினாலேயாம்.
மற்றுமுள்ள சாதியோர்களை மநுக்கள் என்றும் பறையர்கள் என்று அழைக்கப்படுவோரை மாடுகள் என்று எண்ணியிருந்தனரோ, அன்றேல் பெளத்த தன்மத்தைக் கடைப்பிடியாகப் பற்றியிருந்த திராவிட பௌத்தர்களை பறையர்கள் என்று தாழ்த்தி பலவகைத் துன்பங்கள் செய்துவந்தது போதாமல் மலமெடுக்கவுஞ் செய்யவேண்டும் என்று மகிழ்ச்சி கொண்டனர் போலும்.
ஆதலின் நமது தேசத்திலுள்ள கற்றவர்களும் மற்றவர்களும் அவரவர்கள் கன்மத்துக்கீடாய் அதனதன் பலனை அனுபவிக்கவேண்டும் என்று கூறுவதைக் கேட்டிருந்தும் இப்போது மலசலாதிகளை எடுக்க நேரிட்ட கன்மம் முன்செய் தீவினை வந்து மூண்டதென்று ஏற்கலாகாதோ. முன்செய் தீவினையேயாம்.
பெரியசாதிகள் என்று பெயர்வைத்துக் கொண்டுள்ளோர் யாவரும் பறையர்கள் என்றழைக்கப்படுவோர்களைப் பலவகைத் துன்பங்களைச் செய்து பாழடையவைத்த கன்மம், பலனளிக்காமல் போமோ. அளித்தே தீரும். அரசன் அன்றுகொன்றால் தெய்வம் நின்றுகொல்லும் என்னும் முதுமொழிக் கிணங்க திராவிட பௌத்தர்களை ஆயிரத்தி ஐந்நூறு வருட காலமாகப் பறையர்கள் என்று தாழ்த்திப் பதிகுலையச் செய்த பாவத்திற்கீடாய் பின்பலன்கள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் மற்ற பலனுங்கூடிய சீக்கிரம் வந்து பறையரென்போர்களைத் தாழ்த்தி மகிழ்ந்தவர் வாயில் மண்ணைத்தள்ளும்.
தற்காலம் மலமெடுப்போர் கன்மந் தாவளையே. வெள்ளையர்களுக்கோர் சட்டமும், கறுப்பர்களுக்கோர் சட்டமுமோ என்று விளக்கி வெளிவரும் விவேகிகள் பார்ப்பான் என்று பெயர்வைத்துக் கொண்டவனுக்கோர் சட்டமும் பறையன் என்றழைக்கப்படுவோனுக்கு ஓர் சட்டமும் ஆமோ என்பதைப் பரியாலோசிப்பார்களாக.
- 1:50; மே 27, 1908 -
15. சுதேச சீர்திருத்தம்
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாமென்னும் பழமொழிக்கிணங்க சுதேசிகளாகிய நாம் நமது சுதேசத்தை எவ்வகையில் சிறப்படையச் செய்யலாம்