- சமூகம்/719
வேண்டுமாயின் ஓர் மாடையேனும் குதிரையையேனும் தேடல் வேண்டும். அவை வசதியாக வீற்றிருக்கக் கொட்டகையேனும் லயமேனும் நியமித்தல் வேண்டும் அவைகள் சீவிக்க ஆகாரத்தைக் காலமறிந்து ஊட்டி வளர்த்தல் வேண்டும். அப்போதே வண்டியேறுஞ் சுகத்தை இவனனுபவிக்கக்கூடும். அங்ஙனமாய மாட்டிற்குக் கொட்டகையின்றியுங் காலப்புசிப்பின்றியும் வண்டிகட்டி சுகமனுபவிக்க வேண்டுமாயின் நடுவழியில் மாடு விழுந்து ஏறிவந்த வண்டியை இவனே இழுத்துச் செல்லல்வேண்டும் அதுபோலவே சகல வித்தைகளிலும் சகல விவசாயங்களிலும் தான் சுகம்பெற வேண்டுமென்று கருதுகிறவன் முதலாகப் பிறர் சுகத்தைக் கருதுவானாயின் அவன் கருதுஞ் சுகந்தானே கைக்கூடும். பிறர் சுகத்தைக் கருதாதவன் தன் சுகமடையமாட்டான். அவைபோல் பிறர்களது சுகத்தை நாடாது அவர்களை கெட்டழிக்க முயலுவோர் ஒருவர் கெடுப்பாரின்றி தாங்களே கெட்டழிவார்களென்பது நிலவரமேயாகும்.
இத்தகைய நீதிநெறி ஒழுக்கங்களை நோக்காது தங்கள் குடி ஒன்று பிழைக்க நூறு குடிகளை கெடுத்து பாழ்படுத்தும் சில மாந்தர் ஏதோ தற்காலம் நம்முடைய மித்திரபேதச் செயலால் முன்னேறிவிட்டோம், இனி உள்ளவர்களையும் பாழ்படுத்தி விட்டால் இன்னும் மேலாய சுகத்தையடையலாம் என்று எண்ணித் திரிகின்றார்கள். அவ்வளவும் கேட்டிற்கே விதை போடுகின்றார்களென்பது முடிவாம்.
- 7:34; சனவரி 28, 1914 -
50. இந்திய தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிகளாலும் மதங்களாலும் மநுக்களுக்கு சீர்திருத்த சுகம் ஏதேனும் உண்டோ
ஏதுங்கிடையாவாம், சீர்கேடும் அசுகமும் என்றே கூறல் வேண்டும். தற்காலமுள்ள நாகரீகமும் சுகமும் எவற்றால் உண்டாயது என்னில் நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் ராஜரீகத்தின் செயல்களினாலேயாம். நூதனமாய பெரிய சாதியென்போர் பெரிய பெரிய மாடமாளிகைகள் கட்டி வாழ்வதும் பிரிட்டிஷ் அருளேயாம். பெரிய சாதியென்போர் வண்டி குதிரைகள் ஏறிவுலாவுவதும் பிரிட்டிஷ் அருளேயாம். நாகரீகமாய உடைகள் தரித்து வீதி உலாவுவதும் பிரிட்டிஷ் அருளேயாம். குல்லாக்களிட்டு மூக்குக்கண்ணாடி பூண்டு கையில் தடி கொண்டு உலாவுவதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம். கம்பஞ்சோறு சோளச் சோறு தின்போனல்லாம் நெல்லஞ்சோறு தின்ன நேர்ந்ததெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம். பலவகை துன்னாற்றமடைந்துள்ள குட்டை நீர் குளத்து நீரைக் குடித்திருந்தோரெல்லாம் சுத்தநீரை மொண்டு குடிக்க நேர்ந்ததும் பிரிட்டிஷ் அருளேயாம். அவரவர்கள் சுயபாஷைகளையே சரிவரக்கற்காதவர்களுக்கெல்லாம் பலபாஷைகளையும் நன்கு வாசித்து சங்கங்களிலஞ்சாது பேசச்செய்வதும் பிரிட்டிஷ் அருளேயாம். பலவகை வியாதிகளால் பீடிக்கப்பட்டும் காலுடைந்து கையுடைந்தும் அங்கங்கு பாழடைவோரல்லவரையுங் கொண்டுவந்து சுகமளித்தாதரிப்பதும் பிரிட்டிஷ் அருளேயாம். கருப்புமணி கழுத்தில் அணைந்தோரை கண்டசரம் காசிமாலை அணையவைத்து வருவதும் (காஜில்போ) என்னுங் கறுப்பு வளையல்களைக் கையிலிட்டிருந்தோரெல்லாம் பொன்காப்பு கொலுசுகளணிந்து வருவதும் பிரிட்டிஷ் அருளேயாம். மண்கிண்ணியில் சோறும் மட்கலையத்தில் நீரும் அருந்தினோரெல்லாம் வெள்ளிக்கிண்ணியில் சோறும் வெள்ளி பாத்திரத்தில் நீரும் அருந்தவைத்து வருவதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம், காடாசீலை வெள்ளை சேலைகளைக் கட்டித் திரிந்தோரெல்லாம் காசிச்சீலை காம்பரச் சீலைக் கட்டும்படி செய்துவருதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம்.
இத்தியாதி மேடமாளிகைகளையுங் கூட கோபுரங்களையும் பொன்னாணயம் வெள்ளி நாணயம் பொன்னகைகள் வெள்ளி நகைகள் பட்டு வஸ்திரம் சரிகை வஸ்திரம் யாவையும் பயமின்றி வைத்துக்கொண்டு சுகமாய் அநுபவித்து வருவதற்குக் கள்ளர் பயமின்றி காப்பாற்றி வருவதும் பிரிட்டிஷ் அருளேயாம்.