பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இம்மூவருள் வட பரதகண்டத்து வங்காளம், காம்போஜம், பப்பிர மென்னும் மூன்று நகரங்களையும் அரசாண்டுவந்த சுத்தவீரி காளியென்னும் ஓர் அரசியிருந்தாளாம். அவளது நீதிநெறி ஒழுக்கத்திற்கும், வாய்மெய்க்கும், எத்தகைய அரசருக்கும் அஞ்சாத வல்லபத்திற்கும் சகல அரசர்களுங் குடிகளும் அஞ்சும்படி ராட்சியபாரஞ்செய்து மறைந்தனளென்பது காளிதாச தியானம். அவள் வாசஞ்செய்த கோவிலுள் அவளுருவத்தை அமைத்து காளிகாதேவி என்றும், துருக்கை, சாமுண்டி என்றும், வராகி என்றும், வணங்கி வந்தார்கள்.

மற்றுமோர் துஷ்டதேவதை கோவிலன் மனைவி கன்னகா பரமேஸ்பரி. இவளை நீலியென்றும் கூறுவதுண்டு.

மற்றுமோர் சாந்ததேவதை சாக்கையருள் பாணர்வம்மிஷ மலையரசன் புத்திரி வாலாம்பிகை என்றும், ஔவையென்றும், அம்மை என்றும், மணிமேகலா தெய்வமென்றும் வாலை, மனோன்மணி என்றும் மாறியை ஆற்றினவளென்றுங் கூறியுள்ள ஒருவளுண்டு.

இம்மமூவருள் வடபரதகண்டத்தில் இருந்த காளிகாதேவியை அவளது வம்மிஷ வரிசை அரசர்கள் அவள் மரணமடைந்த நாளை பத்துநாள் கொண்டாடுவதற்காய் வருடந்தோரும் அரண்மனை முன்னில் பெரும்பந்தலிட்டு காளிகா வுருவை ஒன்பதுநாள் கொலுவிருக்கச்செய்து தங்கள் சம்மாரத்திற்கு உதவியாகும் வில், வாள், கதை முதலிய யுத்தக்கருவிகளை காளியம்மன் முன் வைத்து தாங்கள் எவ்வரசர்களின்மீது யுத்தத்திற்குச் செல்லினும் ஜெயம்பெற வேண்டுமென பூசித்து அவ்வாயுதங்களைக் கொண்டே அரசர்கள் ஒருவருக்கொருவர் விளையாடி ஆயுதங்களைக் கலைத்து தூணிகளில் வைப்பது வழக்கமாகும்.

இதை அநுசரித்தே காளிதாசர் தனது கமலப்பிரவாள சமஸ்கிருத சூத்திரத்தின் தமிழ்மொழி பெயர்ப்பு.

"காளிகாதேவி கண்வைத்தருள்வாய்
கல்லார்க்கெல்லாங் கலைவகுத்தருள்வாய்
வில்லும் வாளுமேந்திடு மரசர்
சொல்லித்தொழவும் சுகந்தந்தருளாய்
ஒன்பது நாளு மன்பர்முன் னின்று
இன்ப மருளி யெனையாண்டருள்வாய்”.

என்றுந் துதித்துள்ள மற்றுஞ் சூத்திரங்களைக் கமலப்பிரவாளத்தை நோக்குக. காளிதாசர், கமலப்பிரவாளத்தை வங்காளம் துருகப்பிரசாத் அவர்கள் வெளியிட்டுள்ள காளிதாச சரித்திரத்திற் காணலாம்.

வட பரதகண்டத்தில் அரசாண்டுவந்த காளிகாதேவியின் உருவை ஒன்பதுநாள் கொலுவீற்றிருக்கச்செய்வதினால் நவராத்திரி கொலு என்றும், பத்தாநாள் வில், வாள், கதை முதலியவைகளை பூசித்து விளையாடுவதால் ஆயுதபூசை என்றும், இஃது பத்துநாள் கொண்டாட்டமானதால் தசரா வென்றுங் கொண்டாடிவந்தார்கள்.

இஃது அரசர்கள் கொண்டாடும் ஆயுதபூசா சம்பந்தமென்பதே வட பரத காளிகாபூசை என்றும் சாமுண்டி பூசை என்றும் வழங்கும். இதன் பிரபல வைபவத்தை மைசூர் அரண்மனையில் வருடந்தோருங் காணலாம்.

- 3:20; அக்டோபர் 27, 1909 –

36. அரசபுத்திரன் புத்தர்

வினா: புத்தரென்னும் பெயரை சகல நீதி நூற்களிலும் ஞான நூற்களிலுங் காண்கின்றேன். ஆயினும் அவரை அரசபுத்திரனென்று எந்த நூற்கள் கூறுகின்றதோ யான் காணவில்லை. சிவசமயத்தோருட் சிலர் தங்கள் சிவன் ஆலமரத்தடியில் உட்கார்ந்தாரென்றும், புத்தர் அரசமரத்தடியில் உட்கார்ந்தார் என்றும் கூறுகின்ற படியால் இவ்விரண்டும் ஒரு சரித்திரமா அன்றேல் இரண்டு சரித்திரமா விளங்கவில்லை.

வீ. மாரிமுத்தாப்பிள்ளை , திரிசிரபுரம்.