பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நாள் விழாக்கோலும், பங்குனிமீ பூரணியில் நிருவாணமடைந்த ஆலமர்ச் செல்வன் மதன்விழாக்கோல்நாளும், மார்கழிமீ பூரணி திருவாதிறை நட்சத்திரத்தில் பரிநிருவாணமடைந்த விடுத்த பூதவிழாக்கோல் நாளுங் கணக்கெடுத்து தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்ளுவது வழக்கமாகும்.

சமணமுநிவர்களாகும் சமய கணக்கர்கள் அவற்றிற்கு இசைந்து ஒவ்வோர் பௌர்ணமி காலக் குறிப்பையும், அவைகளின் காலகணிதங்களையும் விளக்கி அந்தந்த விழாக்கோலை கொண்டாடும்படி உத்திரவளிப்பார்கள்.

இவற்றை மணிமேகலை விழாவறை காதையிற் காண்க.

இவ்வகையாய் புத்தசங்கங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்களால் விசேஷகாலங்களை விளக்கிவரவும், பௌத்த அரசர்களுங் குடிகளும் அவற்றைக் கொண்டாடிவருவது இயல்பாயிருந்தது.

இப்பண்டிகை மார்கழிமீ 28உ பூரணிநாள் திருவாதிறை நட்சத்திரத்தில் ஆதியில் வந்தபடியால் மார்கழிமாதக் கடைநாளையே விசேஷமாகக்கொண்டு மார்கழிமீ முதல் திகதி முதல் விடியர்காலமெழுந்து வீடுவாசற் சுத்திசெய்து கோலமிட்டு புட்பம் பரப்பி ஜகத்தீசனாம் சத்குருநாதனை பஜிக்கும் பாடல்களாலும், கும்மியடிக்குங் குதூகலத்தாலும் மாதமுழுவதுங் கொண்டாடி கடைநாள் விடியற்காலம் சோதியை வளர்த்து தெரிசித்து போதிபண்டிகையென போதிநாதனை சிந்தித்து ஏழைகளுக்கு அன்ன வஸ்திரமளித்து சங்கராந்தி புண்ணிய காலத்தை பூர்த்திசெய்வார்கள்.

இத்தகைய புத்ததன்மச் செயல்களானது அபுத்ததன்மங்கள் மேலிட்டு மதக்கடைப் பரப்பி சீவிக்கும் பொய்க்குருக்களால் மாறுபட்டிருந்த போதினும் பூர்வ வழக்கத்தை மட்டிலும் மாறாமல் செய்துவருகின்றார்கள்.

போதிபண்டிகை, போகிப்பண்டிகை யெனக் கொண்டாடும் விடியர்காலத்தில் சகல பெண்களும் எழுந்து அழுது துக்கிக்குங் காரணம் யாதென்பீரேல் பகவனது உச்சியிலும் தேகமுழுவதும் வாள்போன்ற சோதி கழன்று பரிநிருவாணமுற்றபோது ஆனந்தன் என்னும் அவரது பிரதம சிஷியன் அலறித் துக்கித்து அழுகவும் அதையுணர்ந்த உலகமக்களுங் குடும்பத்தோரும் இனி எப்போதிவர்பால் அறவுரைக் கேழ்ப்போமென்று துக்கித்த வழக்கமே நாளதுவரையில் போதிபண்டிகை விடியர்காலத்தில் துக்கித்துவருகின்றார்கள்.

சோதியாய் பகவன் - பரிநிருவாணமடைந்த விவரம் வீரசோழியம்

கூரார்வளையுகிர் வாளெயிற்றுச் செங்கட்
கொலையுழுவை காய் பசியாற் கூர்ந்த வென்னோய் நீங்க
வோராயிரங் கதிர்போல் வாள் விரிந்தமேனி
யுளம்விரும்பிச்சென்றாங் கியைந்தனை நீயென்றாற்
காரர்திரை முளைத்த செம்பவளமேவுங்
கடி முகிழ் தண்சினைய கா மருபூம்போதி
யே ரார் முநிவரர் வானவர்தங் கோவே
யெந்தாயரோ நினை யேற்றாதார் யாரே
திருமேவு பது மஞ்சேர் திசைமுகனென் றுலகேற்ற
வுருமேவி யவதரித்த வுயிரனைத்து முயக்கொள்வா
னிவ்வுலகுங் கீழுலகு மிசையுலகு மிருள் நீங்க
மெவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்தசெழுஞ்சுடரென்ன
விலங்குகதி ரோரிரண்டு விலங்கிவலங் கொண்டு லவ
வலங்குசினைப் போதிநிழ லறமமர்ந்த பெரியோய் நீ

பகவன் உச்சியிலும் தேக முழுவதும் வாள்போன்ற சோதி கழன்று பரிநிருவாணமுற்றபோது புத்தபிரான் பிரதமமாணாக்கன் ஆனந்தன் துக்கித்த விவரம்.

பாணவீரியன் பாடியுள்ள வெண்டாழிசை

சீருங் சிதைந்தனவோ செல்வந் துறந்தன மாலென்செய்கோம் யாம்
பேரும் பிரிந்தன நம் பெம்மான் மறைந்தன மாலென்செய்கோம் யாம்
நெஞ்சாரவஞ்சமற்றோர் நீநிலத்தை நீக்க முற்றா ரென்செய்கோம் யாம்
துஞ்சாது துஞ்சியகண் டுஞ்சலுறக் கண்டோ மாலென்செய்கோம் யாம்