பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 155

அடையாமலிருக்கும் போதனைகளையும் செய்துவருவது வழக்கமாகும். பஞ்சசீல சாதனமே பற்றறுக்கும் பாதையாதலின் அவற்றைப் போதித்து நல்வழி காட்டிய நாதனை சிந்தித்து சீர்பெறுவதற்காக அவரது சிலா உருவங்களை கண்டவுடன் அவர் குமரப்பருவத்தில் சக்கிரவர்த்தி பீடத்தைத் துறந்த சிறப்பையும், அருமைந்த மனைவியை அகன்ற வல்லபத்தையும், அத்தகையப் பற்றற்ற செயலால் பரிபூரண சுகமாம் நிருவாணம் பெற்று அப்பேரானந்த சுகத்தை சகல மக்களுக்கும் போதித்து ஈடேற்றிய அன்பின் மிகுதியையுஞ் சிந்தித்துத் தாங்களும் அவரைப்போல் ததாகதம் பெருவதற்காகக் கனஞ்செய்து வருகின்றார்களன்றி வேறன்று.

தற்காலம் நமதுதேசத்தில் மண்றோ , குயின் விக்டோரியாள் எட்வர்ட் சக்கிரவர்த்தியார் இவர்களுடைய உருவ சிலைகளைக் கண்டு அவரவர்கள் வாழ்க்கைகால நீதிநெறியாம் செயல்களை சிந்தித்து வந்திப்பதுபோல் புத்தரது சிலாரூபங் கண்டவுடன் அவரது வாழ்க்கைகால நீதி நெறியாம் நற்செயல்களை சிந்தித்து வந்தித்து வருகின்றார்கள். மற்றப்படி அச்சிலைகள் இவர்களுக்கு மோட்சங்கொடுக்கும் என்றாயினும் இவர்கள் வியாதியை நீக்கிவிடும் என்றாயினும், இவர்கள் அல்லலை அகற்றிவிடும் என்றாயினும் சிந்திப்பதுங் கிடையாது, அச்சிலைகளுக்கென்று லஞ்சமாம் பரிதானம் அளிப்பதுங் கிடையாது.

இத்தகைய சிலாரூப ஆதரவைக்கொண்டே நூதனமாகத் தோன்றிய மதக்கடை வியாபாரிகள் நாலு கை, ஆறுகையுள்ள உருவ சிலைகளையும், இறக்கைகட்டி ஆகாயத்திற் பரக்கும் உருவ சிலைகளையும், உலகத்திற் காணா பேய்களென்னும் உருவ சிலைகளையும் செய்து தங்கள் கூடத்திற் பரப்பி பேதைமக்களுக்குக் காண்பித்து பயமுறுத்தி பொருள் சம்பாதித்து தங்கள் தேசங்களுக்கு மூட்டைக்கட்டியனுப்புவதுடன் சுதேச மதக்கடை வியாபாரிகள் தங்கள் தங்கள் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமாகப் புசிப்பதற்கு அச்சிலாரூபங்களைக் காட்டி பேதைமக்களுக்குப் பொய்க்கதைகளைப் போதித்து பொருள் சம்பாதித்து அதைக்கொண்டே சீவித்து வருகின்றார்கள்.

இத்தகையப் பொருளாசை மிகுத்த பொய்க்குருக்களாம் மதக்கடை வியாபாரிகளுக்கும் பொருளாசையை நீக்கி பற்றறுக்க முயலும் மெய்க் குருக்களாம் பௌத்த சங்கத்தோர்களுக்கும் அனந்த பேதமுண்டு. இதன் மூலம் அறியவேண்டியவர்கள் இதனுள் இனி வரைந்துவரும் இந்திரதேச சரித்திரத்தால் உணர்ந்துக்கொள்ளலாம். - 4:20; அக்டோபர் 26, 1910 –


62. தீண்டாதவர்கள் மதத்தால் தீண்டப்படுவார்களோ தாழ்ந்தவர்கள் மதத்தால் உயர்வாவர்களோ

ஈதோர் புதின மொழிபோலும். அதாவது, ஓர் மதத்தினர் தீண்டாத நந்தனென்பவனை நெருப்பிலிட்டுச் சுட்டு சேர்த்துக்கொண்டதாக வரைந்திருக்க, தற்காலம் தீண்டாதவர்களை சுடாமற் சேர்த்துக் கொள்ளும் மதம் ஏதேனும் உளதோ. உளதாயின் தீண்டாதவன் பறையன் எனக் கூறும் பொறாமெய் மொழிகள் மாறுமோ. மாறுமென்பதாயின் திருவள்ளுவரூரில் அமைத்துள்ளக் கோவிலிலும் பறைப் பெருமாட் கோவிலென்பது மாறவில்லையே. நாயனார்களிலும் பறைநாயனார் பெயர் மாறவில்லையே. ஆழ்வார்களில் பறையாழ்வார் பெயர் மாறவில்லையே. இவ்வகையாலெல்லாம் உறுதிபெற இழிவுபடுத்தி ஓர் பெருங் கூட்டத்தோரை தங்கள் மதத்திலும் தாழ்வடையச் செய்தவர்கள் தற்காலம் அவர்களை உயர்வடையச் செய்யப்போகின்றோம் என்று வெளிதோன்றியுள்ளது விந்தையிலும் விந்தையென்றே கூறல்வேண்டும்.

காரணமோ வென்னில், ஆயிரத்திச்சில்லரைவருடங்களாக பௌத்ததன்ம விரோதத்தால் தங்களுக்குப்பராயர்களென்றுகூறி பலவகையாலும் இழிவுபடுத்தி