பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 265

1. ஞாபகம் எப்போதுந் தன்னிலிருக்கின்றதென்றும், 2. நுட்ப விசாரிணை எப்போதுந் தன்னில் இருக்கின்றதென்றும், 3. முயற்சி எப்போதுந் தன்னில் இருக்கின்றதென்றும், 4. ஆனந்தம் எப்போதும் தன்னில் இருக்கின்றதென்றும், 5. சந்தி எப்போதுந் தன்னில் இருக்கிறதென்றும், 6. மனனம் எப்போதும் தன்னில் இருக்கின்றதென்றும், 7. சம்திருஷ்டி எப்போதும் தன்னில் இருக்கின்ற தென்றும் இவைகளின் விடா நோக்கங்களே அறிவின் விருத்தி என்றும் விவேக மிகுதியென்றுங் கண்டறிகிறான்.

இவ்வகைக் குணங்கள் தன்னிலுள்ள போது இருப்பதென்றும் இல்லாத போது இல்லை என்றுந் தெரிகின்றான். இவ்விதமாய் மனக்களிம்பகற்றும் மூலயேதுக்கள் எவ்விதமாக வுதிக்கின்றதென்றும் எவ்விதமாகப் பூரணப்படுகிற தென்றும் அறிகின்றான். அப்பூரண நிலையாகும் நான்கு சத்தியத்தைப்பற்றி சிந்திப்பான்.

1. துக்கசத்ய, 2. சமுத்ய சத்ய, 3. நீரோத சத்ய, 4. மார்க்க சத்ய எனப்படும். இவ்வகை நான்கு சத்திய விசாரிணையால் 1. பஞ்சஸ்கந்தங்களே துக்கத்திற்கு மூலமென்றும், அதினால் உண்டாகும் 2. அவாக்களே துக்கத்தின் மூலகாரணம் என்றும், 3. அவாவறுத்தலே துக்க நிவாரணமென்றும், 4. அவாக்களை யறுக்கும் மார்க்கங்களே பரிசுத்த அஷ்டாங்க மார்க்கங் களென்று அறிகின்றான்.

இவ்வகை அறிந்தவன் அந்தரங்கத்தில் தனக்குள்ள சத்திய தன்மங்களையும் அதினாற்றா னடைந்துள்ள ஆறுதல்களையும் அன்னியன் அந்தரங்கத்துள்ள அசத்திய தன்மங்களையும் அதினால் அவனடையும் அல்லல்களையுங் கண்டறிகின்றான். இவ்வகை அந்தரங்க சத்தியங்களை அறிதற்கு நுட்ப அறிவும் பற்றற்ற நிலையும் புண்ணிய சிந்தையும் நன்மண வாசமுமே காரணமென்று அறிவான் இதய பரிசுத்த மடையும் அழிவிலா வாழ்க்கையை அடையவும் துக்கத்தினின்று விடுபடவும் அழுகையிலும், ஏக்கத்திலும், பற்கடிப்பிலும் நின்று நீங்கவும் நான்கு சத்திய தானங்களே ஆதாரமும் நிருவாணத்தின் பாதையும் என்றறிவான்.

ஓ! சகோதிரர்களே! ஓர் காட்டு யானையைப் படுகுழிவெட்டிப் பிடித்து நாளுக்குநாள் அதன் மதோன்மத்தங்களை அடக்கி காட்டில் ஏதேச்சையாய் உலாவித்திரியுங்காலிருந்த கொடுஞ்செயல்களை ஒடுக்கி ஊரிலுள்ள மக்களுடன் பழகிவருமளவுஞ் சதா விழிப்பிலும் நின்று வயப்படுத்துவதுபோல், இதய பரிசுத்தத்தை நாடும் அன்பனொருவன் தன்னெண்ணத்தில் நான்கு சத்திபதானங்களை நோக்கி காம வெகுளி மயக்கங்களைப் போக்கி உலகப் பற்றுக்களை நீக்கி சதா விழிப்பால் தன்னைத்தானே கார்த்து தன்னை சுத்திகரிக்குஞ் சாதனத்தினின்று சத்திய தரிசனமாம் பரிசுத்த முத்தி என்னும் நிருவாணத்தை அடைவான்.

சம்மா சமாதி - நல் அமைதி

ஓ! சகோதிரர்களே! மன அமைதியாஞ் சாந்தத்தைப் பற்றி இவ்விடம் விளக்குகின்றேன். அவையே, 1. காயானாபஸ்ஸன்னா 2. வேதனானுபஸ்ஸன்னா 3. சித்தானுபஸ்ஸன்னா 4. தம்மானுபஸ்ஸன்னா என்னும் நான்குவித சத்தி பதானங்கள் என்னப்படும். அதாவது, 1. அசுத்தத்தாலாய தேகத்தைப்பற்றி சிந்தித்தல் 2.வேதனா சகல உணர்ச்சிகளினின்று உண்டாகுங் கேடுகளைப்பற்றி சிந்தித்தல் 3. மனத்தினது எண்ணங்களின் ஓட்டங்களையும் மறதிகளையும் உதயங்களையும் சிந்தித்தல் 4. உலகத்தில் தோற்றும் பொருட்கள் யாவும் க்ஷணத்திற்கு க்ஷணங் கெட்டுக்கொண்டே வருகிறதென்று சிந்தித்தல் சாந்தத்தின் பெருக்கத்தையும், மன அமைதியையும், இதய சுத்தத்தையுங் கோறும் ஒவ்வொரு மனிதனும் மேற்கூறியுள்ள நான்குவகை சத்திபதானங்களையே தியானிக்கக் கடவன்.

இத்தகைய சிந்தனையாம் மன அமைதிக்கும், இதய சுத்தத்திற்கும் வழிகள் யாதெனில்:- சம்வாப்பதானா 2. பஹானப்பதானா 3. பாவனாப்பதானா