பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அக்கினியுடன் சம்மந்தித்துவருங்கால் நெருப்புக்காற்றென்றும், நீருடன் சம்மந்தித்து வருங்கால் குளுங்காற்றென்றும் வழங்குவது போல் காம அவாவால் காமத்துடன் சம்மந்தித்து தோற்றிய பிறப்பும், வெகுளி அவாவால் வெகுளியுடன் சம்மந்தித்து தோற்றிய பிறப்பும், மயக்க அவாவால் மயக்கத்துடன் சம்மந்தித்து தோற்றிய பிறப்பும், இன்ப அவாவாம் வினைபோகமாதலின் அவாவால் உண்டாகும் பற்றுக்களே பிறப்பிற்கு மூலமாகும்.

அவாவானது அருவுருவற்றிருப்பினும் காம அவாபற்றி பஞ்சஸ்கந்தங் களுடன் திரண்டு பிறப்புத்தோன்றில் காமரூபி என்றும், வெகுளி அவாபற்றி பஞ்சஸ் கந்தங்களுடன் திரண்டு பிறப்புத்தோன்றில் வெகுளி ரூபி என்றும், மயக்க அவாபற்றி பஞ்சஸ்கந்தங்களுடன் திரண்டு பிறப்புத் தோன்றில் மயக்க ரூபி என்றும் பெயர் பெருவான்.

இத்தகைய பிறப்பின் தோற்றங்களுக்கும் தோற்றங்கள் அனுபவிக்கும் துக்கங்களுக்கும் மூலகாரணம் பேதமெயால் உண்டாகும் அவாவின் பற்றுக்களாதலின் பற்றற்ற கண்களே பிறப்பறுக்கும், கேட்டலற்ற செவிகளே பிறப்பறுக்கும், கந்தமற்ற நாசிகளே பிறப்பறுக்கும், சுவையற்ற நாவுகளே பிறப்பறுக்கும். பரிசமற்ற தேகங்களே பிறப்பறுக்கும். இவ்வைந்தின் செயல்களை அறிந்துகொள்ளுகிறவனே அதி தீவிரத்தில் பிறவியை அறுத்து மரணத்தை ஜெயிப்பான்.

அவாவுடன் கலந்த தீயச்செயல்களின் பற்றானது தீய உருவத்தை தோற்றுவித்து தீச்செயல்களைப் பெருக்கி மேலும் மேலும் துக்கத்திற்கு ஆளாக்கும். அவாவுடன் கலந்த நியாயச்செயல்களின் பற்றானது நியாய உருவத்தைத் தோற்றுவித்து நியாயச்செயல்களைப்பெருக்கி நித்தியவாழ்வாம் நிருவாணத் திற்குக் கொண்டுபோகும்.

கண்ணினால் பார்க்கும் வஸ்துக்களை பேரவாவால் பற்றி மேலும் மேலும் தாவி நிற்றல் தீயப்பிறவிக்குக் கொண்டுபோகும். கண்ணினால் பார்க்கும் வஸ்துக்களைப் பார்த்தும் பாராததுபோல் நின்று அவ்வஸ்துக்களின் அதிரூபமும், அழகும் நாளுக்குநாள் மாறுதலடைந்து நசிந்துபோம். அவ்வகை நசிந்துபோகும் வஸ்துவை நாட்டமுறுவதும் அவைமீதவாபற்றுவதும் வீணென்றறிந்து நாட்டத்தாலெழும் அவாவையும், அவாவால் எழும் பற்றுக்களையும் அறுத்து வருதல் நியாயப்பிறவிக்குக் கொண்டுபோகும்.

சந்தனக்குழம்பில் ஓர் பாதமும், அக்கினிக்குண்டத்தில் ஓர் பாதமும் வைத்துக்கொண்டிருப்பதுபோல் இன்னின்னது தீயச்செயல்களென்றும், இன்னின்னது நியாயச்செயல்களென்றும் பகுத்துணர்ந்து தீயச்செயலால் உண்டாகும் தீவினைப்பயனாகும் பிறப்பையும் இறப்பையும் அறுத்து நற்செயலால் எழுவும் நல்வினைப்பயனாகும் பரிநிருவாண நித்தியவாழ்வைப் பெறுவாய்.

இத்தகைய நித்தியவாழ்வின் மார்க்கத்திற்கும், உமது குடிகளின் நீதிவாழ்வாம் வாழ்க்கைக்கும், போதகர்கள் மந்திரவாதிகளேயாவர். அவ்வகை மந்திரிகள் புத்தசங்கத்தோர்களாயிருப்பார்களாயின் உம்மிடத்தில் யாதோர் பிரிதிபலனையுங் கருதாது சத்தியதன்மங்களை நாட்டி சமயோசித யுக்த்திகளை ஊட்டிவருவார்கள்.

அதினால் உம்முடையக் குடிகள் யாவரும் சுகவாழ்க்கை அடைவதுடன் தாமும் நித்தியவாழ்வைப் பெறுவீர். இப்போதனா வாழ்க்கைப் பொருந்துவீ ராயின் காலாகாலத்திற்கு அன்பும், அருளும், பேரும், புகழுமடைவாய். இதுவே ததாகதருடைய அன்பென்றோதி அரசனுக்காசி கூறி அரணுக்கனுப்பி விட்டு யாதும் விளைவற்ற ஓர் வனத்தின் வழியே வாமன் சென்று கம்மஸதம்மா என்னுமிடத்தில் ஒற்றுமெயற்றிருக்கும் சங்கத்தோர்களை நோக்கி;

17. கலஹ விவாத காதை

ஓ! சகோதிரர்களே! விவாதமும், குதர்க்கமும், அழுகையும், துக்கமும், பொறாமெயுடன் எங்கிருந்து உதிக்கின்றன. அகந்தையும், வீணெண்ணமும் புறங்கூறலுடன் எங்கிருந்து எழுகின்றன.