பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இஞ்சிநியர் காலேஜ், அன்டர் காலேஜ் முதலிய இடங்களுக்குச் சென்று வித்தைகளைக் கற்றுக் கொள்ளுவதற்கும் ஓர் கட்டிடத்தை ஏற்படுத்தி Buddhist College என்றும்,

நமது குலத்து பாலியர்கள் சத்விஷயங்களில் பழகி ஆங்கிலேயபாஷையை பயிரங்கத்தில் தெளிவாக பேசுவதற்கும் தேகசுகவிளையாட்டுகளை ஆடுவதற்கும் ஒவ்வோர் கூட்டங்களை ஏற்படுத்தி Buddhist Young Men Association என்றும்,

வருஷந்தோறும் அந்தந்த வைகாசிமாத பௌர்ணமியில் புத்தர் பிறந்த நாளை கொண்டாடி வருவதற்கு Buddha's Birth day Anniversary என்றும்,

அந்தந்த வருஷ மார்கழிமாத கடைசியில் புத்தர் சுவர்க்கவானமேறிய நாளை 28 நாள் கொண்டாடி வருவதற்கும் போதி பண்டிகையன்று நமது குலத்து ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானமுதலியவைகள் செய்து வருவதற்கும் Buddhist Charity fund என்றும்,

ஒவ்வோர் நிலையான வரம்புகளை உண்டு செய்து நமது குலத்தவர்களை ஒற்றுமைக்கும் சீருக்குங் கொண்டுவரவிருப்பமுடையவர்கள் அடியில் கையொப்ப மிட்டிருக்கும் பொதுக்காரியதரிசியவர்களுக்கு தங்கள் இருப்பிடங்களையும் பெயர்களையும் ஒப்பந்தரசீதில் எழுதி அனுப்பி விடுவீர்களானால் அதை சபை புத்தகத்தில் பதிவுசெய்து (சையாம்) (தீபேத்) முதலிய அரசர்களுக்கு அனுப்பி அவர்களை நமது சங்கத்தின் (Patron) இரட்சண்யகர்த்தர்களாக நியமித்துக் கொண்டு நமது பூர்வமதத்தை நிலைகாட்டும் உறுதி கொண்டிருக்கின்றோம்.

Pundit. C. Iyodhi Doss,
General Secretary, S.B. Society,
No. 7, M. Road, Rayapettah, Madras.
இப்படிக்கு
க. அயோத்திதாசபண்டிதர்
பொதுக் காரியதரிசி

(இது 1899இல் எழுதப்பட்டிருக்கக்கூடும்)
4. கடவுள்

கடவுள் எனும் மொழி தமிழா, கன்னடமா, தெலுகா, மராஷ்டிரமா என ஆராயுங்கால், அஃது தமிழ் மொழி என்றே கூறத்தகும். கடவுள் என்னும் மொழியை வரைந்துள்ளவர்கள் சைவர்களா, வைணவர்களா, வேதாந்திகளா என உசாவுங்கால் இம்மூவருமின்றி திரிபிடங்களுக்கு சார்பு நூல்கள் வரைந்துள்ள சமணமுநிவர்கள் என்றே பரக்க விளங்கும். இவ்வகை விளங்கும் கடவுள் என்னும் மொழிக்குப் பொருள் யாது கூறியுள்ளார் என்று ஆராயுங்கால்,

11-வது நிகண்டுக்கரவெதுகை

இகல்பகை வலிபோர் முப்பேரிகுளையே தோழிநட்பாம்
புகரென்ப மழைக் கோள் குற்றம் புற்கெனு நிறமுமுப்பேர்
நகமனையுகிர் மரப் பேர் நகைமகிழொளி சிரிப்பாங்
ககனம் விண்படை காடென்ப கடவுள்தே முநி நன்மைப்பேர்.

கடவுள் என்னும் மொழிக்கு நன்மை என்னும் பொருள் கூறி இருக்கின்றார்கள். இதை அனுசரித்தே கடவுள், கடவுளர், கடவுளர்கள் என்னும் மொழிகளும் பிறந்திருக்கின்றது. இவ்வகைப் பிறந்துள்ள கடவுள் என்னும் பெயரை யாருக்கு அளித்துள்ளார் என்று ஆராயுங்கால், சாக்கைய முநிவரையே ஆதிதேவனென்றும் ஆதி கடவுள் என்றும் வரைந்திருக்கின்றார்கள்.

பின்கலை நிகண்டு - தெய்வப்பெயர் தொகுதி

தருமராசன் முன்னிந்திரன் சினன் பஞ்சதாரைவிட்டே
யருள்சுரந்தவுணர் கூட்டு ந்ததாகதன் ஆதிதேவன்
விரவுசாக்கையனே சைனன் விநாயகன் சினந்தவிர்ந்தோன்
அரசு நீழலிலிருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்.

சூளாமணி

ஆதியங்கடவுளை யருமறை பயந்தனை / போதியங்கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங்கிழவனை பூமிசை யொதுங்கிய / சேதியஞ்செல்வ நின் றிருவடி வணங்கினம்.

சாக்கைய முநிவரை ஆதியங்கடவுளென்று கூறியிருப்பதுகண்டு அவர்