பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 357

5.வஞ்சகம், குடிகெடுப்பு மிகுத்து சோம்பித்திரியும் வேலை கெட்டோரிடம் நேசம்பாராட்டல் திரவிய நஷ்டத்திற்கோர் மூலயே துவாம்.
6.பெருந்திண்டித் தின்று சதா நித்திறைக்கொண்டு யாதோர் முயற்சியுமின்றி சோம்பலே ஓருருகொண்டு திரிதல் திரவிய நஷ்டத்திற்கோர் மூல ஏதுவாம்.

இவ்வறுவகை பாபமூலங்களுக்குள் (ஒன்றாவது) புத்தியை மயக்குங் கள்ளை அருந்தும் பாவக்கிளைகள் யாதெனில்:-

1.அதி மயக்கத்தால் திரவியத்தை வீணே சிலவுசெய்தல்
2.விரோதசிந்தையைப் பெருக்கி கலகத்தை உண்டு செய்தல்
3.பலவகை வியாதிகளைத் தேடிக்கொள்ளுதல்
4.கீர்த்தியை நாசமாக்கிக்கொள்ளல்
5.மானயீனங் கெட்டு சூன்யமாதல்
6.விவேக விருத்தி கெட்டு மிருகத்திற்கு ஒப்பாதல்

இவைகளே கள்ளை அருந்துவோர்க்கு உண்டாகும் பாபக்கிளைகள் என்னப்படும்.

(இரண்டாவது) யாதோர் தொழிலுமற்று சோம்பேறியாய் அகால காலங்களில் வீதியுலாவுவதினால் உண்டாகும் பாபக்கிளைகள் யாதெனில்:

1.ஆபத்தினின்று தேகத்தை விடுதலைச்செய்ய முடியாமலும் ஆதரவற்றவனாகுதல்.
2.அவனது மனைவி மக்களும் ஆபத்திலிருப்போனை விடுதலை செய்ய முடியாமல் அவர்களும் ஆபத்துக்குள்ளாகுதல்
3.அவனது திரவியங்கள் யாவும் பாதுகாப்பின்றி ஆதரவற்றழிதல்
4.அவனது குணத்திற்கு சகலரும் அஞ்சுதல்
5.அவன் யாதுமறியா பேதையாயிருப்பினும் அவனது பெயரை இழிவுள்ளோர் கூட்டத்தின் பெயருடன் சேர்த்தல்
6.அளவுபடா துக்கத்தையும் உபத்திரவங்களையும் அடைதல்

இவைகளே சோம்பலால் வீதி உலாவுவோர்க்கு உண்டாகும் பாவக்கிளைகள் என்னப்படும்.

(மூன்றாவது) நடனம், பாட்டுக்கச்சேரி முதலியவைகளால் உண்டாகும் பாவக்கிளைகள் யாதெனில் :

1.எத்தொழிலிருப்பினும் அவற்றை விடுத்து நடனம் எங்கு நடக்கின்றதோ அங்கு செல்லுதல்.
2.பாட்டுகள் எங்கு பாடுகின்றாரோ அங்கு செல்லுதல்
3.களியாட்டு கச்சேரி எங்கு நடக்கின்றதோ அங்கு செல்லுதல்
4.பொய்யும் போரும் நிறைந்த கட்டுக்கதைகள் எங்கு நடக்கின்றதோ அங்கு செல்லுதல்.
5.எங்கு கைத்தாளங் கொட்டுவார்களோ, பறையடிப்பார்களோ அங்கு செல்லுதல்
6.மிருகவேட்டை, பட்சிவேட்டை, மட்சவேட்டை, மல்யுத்தம் எங்கு நடக்கின்றதோ அங்கு செல்லுதல்.

இவைகளே நடன விருப்பத்தாலுண்டாகும் பாபக்கிளைகள் எனப்படும்.

(நான்காவது) குடும்பிகளுக்கு சூதாட்டத்தால் விளையும் பாபக்கிளைகள் யாதென்பீரேல் :

1.ஒருவன் வெற்றியடைந்து மற்றொருவன் தோல்வியடைவானாயின் வெற்றியடைந்தவன் பேரிற் பெரும்பகை காட்டி வெறுப்பான்.
2.இன்ன மனிதன் நமது திரவியத்தை கெலித்துக் கொண்டானல்லவா என்று தோல்வியடைந்தவன் வியாகூலப்படுவான்.
3.அதிக கஷ்டத்துடன் சேகரித்த திரவியம் நஷ்டமாகிவிட்டதே என வியாகூலமடைவான்.
4.நியாய ஸ்தளங்களுக்குச் சென்று நீதியதிபர்முன் சாட்சி கூறுவானாயின் இவன் சூதாட்டமிகுந்தவனென்றறிந்த அதிபதியும் இவன் வாக்கை மெய்யென்று ஏற்க மாட்டார்.