பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பல்லை ஒத்த முல்லை பகுத்தறிந்தங் - கொல்லை
தயிர்சாடி மத்துடனே தாங்கி மருதத்
தியற்பள்ளாரர்ப்ப வெழுந்து.

அருங்கலைச்செப்பு. - முல்லைப்பத்து

முல்லைபுகுந்தான் முனையாச்சிய ருரிபால், வெல்லை விளித்தானிறை.
பாலினுரைப்பும் பருதயிறும் வெண்ணெய்க், கோலமுரைத்தான் குரு.
கன்றுக்களித்து களிப்பூட்டி மிக்கு பால், என்று முமக்கென்றறி.
புள்ளாங்குழலாற் புள்ளினான் வாய்மெய்த், தெள்ள விளித்தார் திரு.

அதனை உணர்ந்த பகவன் வெண்ணெய்யை வாயிலிட்டுப் புசித்துக் காட்டியதுமன்றி பாலைக்காய்த்து தயிறாக்கி வெண்ணெயெடுத்து நெய்யுறுக்கும் வகைகளையும் விளக்கி பசுவின் மடியில் கன்றானது பாலூட்டி திருப்தியடைந்தபின் மிகும் பாலைக் கரந்துக்கொள்ளவேண்டுமென்றும் அங்ஙனம் கன்றுக்கு பாலைத் திருப்த்தி செய்யாமல் கரப்பீர்களானால் உங்கள் புத்திரி புத்திரர்கள் யாவரும் புசிப்பற்று புலம்பித்திரியநேரிடுமென்று கன்மபலனை விளக்கி அவ்விடம் மாடு ஆடுகளைக் கார்க்கும் காவலர்களை அழைத்து அவர்களூதும் புள்ளாங்குழலை வாங்கி அதிலுள்ள நான்கு துவாரத்திலும் நான்கு விரல்களை ஊன்றி முதல் துவாரந் துக்கம், இரண்டாந்துவாரம் துக்கோற்பவம், மூன்றாந்துவாரம் துக்க நிவாரணம், நான்காம் துவாரம் துக்கநிவாரணமார்க்கம் என்றுங் குழலூதுங்கள் குழலூதுங்கோளென்றோதி துக்கம், துக்கோற்பவம், துக்கநிவாரணம், துக்க நிவாரணமார்க்கமாகிய இந்நான்குமே நாவினின்று வெளிப்படும் நான்கு வாய்மெய்கள் என்னப்படும். நான்கு வாய்மெய்களென்று சத்தியமாக நாவினின்று எழும் மெய்வாக்கியங்களும் இதுவேயாம்.

இவற்றை உணரும் ஒவ்வொருவனும் பொல்லாங்கென்னும் பாவங்கள் யாவையும் அகற்றி நன்மெய் கடைபிடித்து உள்ளக்களங்கங்களைப் போக்கி தெள்ளிய சுகம்பெறுவான். அங்ஙனமின்றி நாவினால் பொய்யைச் சொல்லித்திரியும் பொய்வாயாம் வாய்ப்பொய் உள்ளோர்க்கு முற்கூறியுள்ள நான்கு வாய்மெயும் விளங்காது. ஆதலின் உங்கள் ஊதுகுழலிலுள்ள நான்கு துவாரமே நான்கு வாய்மெய்யாகக்கொண்டு குழலூதி சருவ மக்கள் இதயங்களையுஞ் சுத்தி செய்வதுடன் வீரசெந்துக்களைக் கொலைபுரிந்து கோரோசினம் விற்று சீவிப்பதினும் பால், தயிர், நெய், தேன், அறக்கு, மெழுகு, மயிற்பீலி இவைகளைக் கொண்டுபோய் மாறி சென்னெல் சிறுபயிறு இவற்றைக் கொண்டுவந்து சுகசீவனஞ் செய்யுங்கோளென்று விடுத்து நஞ்சை நிலங்களுள்ள மருதநிலத்திற் சேர்ந்தார்.

அவ்விடஞ்சென்று அங்குள்ளக் குடிகளை அழைத்து பூமியைப் புழுகவழுகக் கலக்கி புன்செய் போக்கி நஞ்சையாக்கி சென்னெல் விளைக்குஞ் சாதனங்களையும், கோதமுது நெல்விளைக்கும் போதங்களையுமூட்டி, தென்னை, கரும்பு, வாழை, பலா முதலிய விருட்சக்காப்புகளையும் காட்டி, ஓர் புறம் நீர் கட்டி, ஏறிபாய்க்கும் வகைகளையும், பூமியை உழுது கலைக்குங் கலைப்புகளையும் உணர்த்தி குளங் கிணறுகளின் நீரேற்றுஞ் சால்களையும் பூட்டி வேளாண்மெய்ப் பயிரிடுந்தொழில் விருத்தியை நாட்டி, அதினால் அடையும் பலனை இந்திரவியார அறஹத்துக்களுக்கும், நகரை ஆண்டுகாக்கும் அரசர்களுக்கும் அளித்து சென்னெல் இவைகளைக்கொடுத்து தயிறு, பால், நெய் இவற்றைப் பெற்றுக்கொள்ளுதலும், தெங்கு, வாழை, மா இவற்றைக் கொடுத்து உலோகம் இரத்தினம் முதலியவைகளைப் பெற்றுக் கொள்ளுதலுமாகிய மாற்றலுடன் அங்கப்பழுதுற்றோர்களையும், ஆதுலர்களையும் ஆதரித்து ஈகையினிலையிலும் இதய ஒழுக்கத்திலும் இருந்து மேழியை நடாத்துவீர்களாயின் மாதம் மும்மாரி பெய்து மேழிச்செல்வம் பெருகி சுகம்பெற்று வாழ்வீர்கள்.

உங்களுக்குள்ள ஈகையையும், அன்பையும் அகற்றிவிட்டு மேழியைத் தொடுவீர்களாயின் பூமியழுந்தி, அன்புகாணாது, ஈகைசிறந்து வானம்பெய்யாது இவ்வகை பூமி அழுந்தாமலும் வானம் பெய்யாமலும் போமாயின் சகல தானியமும் விளைவுகுன்றி சஞ்சலத்திற்கு ஆளாகுவீர்கள்.