பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஓர் கிராமவாசிகளும் அவ்வகையாகவே ஒருவருக்கொருவர் பேதமின்றி ஒருவருக்கொருவர் உபகாரிகளாயிருந்து உற்றதுணைவர்களாய் சேர்ந்து வாழ்தல் மகாமங்களமென்னப்படும்.

இவ்வாறாகவே ஓர் தேசவாசிகளும் அத்தேசவரசனும் சகல தேசவரசர்களின் சமாதானத்தைக் கருதி உப்பரிகையில் வெண்கொடி நாட்டி குடிகள் யாவருக்கும் சத்தியதன்மத்தையூட்டி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழும் வாழ்க்கை சுகந்தரும் நாட்டில் வாழ்தல் மகாமங்கள மென்னப்படும்.

முன்ஜெனனமாம் முன் மெய்யில் செய்த நல்வினைகளாம் புண்ணியபலனால், இம்மெய் புண்ணிய புருஷனென விளங்கும், பூர்வ பயனால் தன்னையும் தனக்காதாரச் செயல்களாம் நற்பயனையே பெருக்கி வருதல் மகாமங்களமென்னப்படும்.

சிறந்தகலை நூற்களின் ஆராய்ச்சியிலும் சகலருக்கும் உபகாரியாக விளங்கக்கூடிய பெருமுயற்சியிலும் தன் தேகத்தினால் மற்றோர் தேகத்திற்குத் தீங்குவிளைத்து நோகசெய்யாமலும், தன்னாவினால் மற்றவர்களைக்கொடூரமாக வைது அவர்களைப் புண்படுத்தாமலும், தன்மனதுள் வஞ்சினத்தை நிறப்பி மற்றவர்களுக்குக் கேடுண்டாக்காமலும் இருக்கும் மனோவாக்கு காய திரிகரண சுத்தவாழ்க்கையே மகாமங்களமென்னப்படும்.

மாதாபிதாக்களை ஈன்றவர்கள், வளர்த்தவர்கள், கார்த்தவர்களென்று எண்ணி அவர்கள் விருத்தாப்பியகாலத்தில் ஆனந்தமாக அமுதூட்டி அவர்களுக்கு யாதொரு கவலையுந் தோன்றவிடாமல் ஆதரித்தல் மகாமங்கள மென்னப்படும்.

மனைவி மக்களை விரும்புவோர் நற்கருமவிருத்தியால் சம்பாதிக்கக்கூடிய பொருளை சேகரித்து அதினால் தனது மனைவி மக்களுக்கு யாதொரு குறைவுமின்றி அமுதூட்டி கலை நூல் விருத்தியில் வளர்த்தல் மகாமங்கள மென்னப்படும்.

கல்வியில் விருத்தியடையுஞ் சிறுவர்கள் தங்கள் தாய் தந்தையரை கனஞ்செய்வதுபோல் மற்றுமுள்ள பெரியோர்களையுங் கனஞ்செய்து அவர்களுக்கு வணக்கமுற்று வளர்த்தல் மகாமங்களமென்னப்படும்.

புண்ணியதானஞ்செய்தல், சத்தியதன்மத்தில் நடத்தல், குடும்பத்தை யாதரித்தல், சகலருக்கும் உபகாரியாயிருத்தல், புண்ணியகன்மங்களை விருத்தி செய்யக்கூடிய தொழில்களின் முயற்சியிலிருத்தல், தான் நடத்துந் தொழிலால் தனக்கு உபகாரமாவதுமன்றி ஏனையோர்க்கும் உபகாரமுண்டாகக் கருதிச் செய்தல் மகாமங்களமென்னப்படும்.

எக்காலுந் தனக்குள்ளெழுங் காம, வெகுளி, மயக்கச்செயல்களின் பேரில் நாட்டமாயிருந்து அவைகளை விருத்தியடையவிடாமல் நசித்துவருதல் தனதறிவையும், தனது வித்தையையும், குடும்பத்தையுங் கெடுக்கக்கூடிய மயக்கபானங்களை அருந்தாதிருத்தல் மகாமங்களமென்னப்படும்.

நீதிநெறிகளின் வாக்கியங்களையும், அதின் நடைகளாம் ஒழுக்கங் களையும், அதன் பலன்களையும் நோக்கி நிற்றல், வணக்கத்தையும் ஒடுக்கத்தையுமே கருதுதல் தன்மபோதங்களாகும் ஞானசொற்களை செவிகளில் கேட்க விரும்புதல் மகாமங்களமென்னப்படும்.

சாந்தமும் மிருதுவுமான வார்த்தைகளைப் பேசுதல், சமணகுருக்களின் தெரிசனத்தையும் அவர்கள் நீதிபோதங்களையும் விரும்பியிருத்தல் துக்கந் தோன்றுங்காலங்களிலெல்லாம் தன்மவிசாரிணைப்புரிதல் மகாமங்கள மென்னப்படும்.

உலகப்பொருட்களின் பேரில் அதியவாக்கொண்டு பற்றும் பற்றுக்களை அறுத்து துக்கமற்று, பயமற்று, பிணியற்றும் இருத்தல் மகாமங்கள மென்னப்படும்.

மனத்தையும், வாக்கையும், தேகத்தையுங் காக்கக்கூடிய விரதங்களையும், கொன்றுதின்னாதிருக்கும் நோன்புகளையும் அனுஷ்டித்து அஷ்டாங்க மார்க்கத்தில் நிலைத்து சுகவாரியாம் அலையற்ற கடல்போற்றெளிந்து நிருவாணநிலை பெறுதல் மகாவுத்தம மங்களமென்னப்படும்.