பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நூதன மதவேஷங்களையும் உண்டு செய்து தேசத்தையும் தேச மக்களையும் பாழ்படுத்தி தங்கள் சுய சீவனங்களை விருத்தி செய்துக்கொண்டதுமன்றி இன்னுமதை விருத்தி செய்வதற்கான மனு அதரும சாஸ்திரங்களை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு மனுதரும சாஸ்திரமென்னும் பெயரைக் கொடுத்து வழங்கி வருகின்றார்கள் அஃது சுயநலங்கருதி எழுதிய நூலே யன்றி பொதுநலம் கருதி எழுதியதன்றாம். ஆதலின் பௌத்த சோதிரர்கள் பொதுநலங் கருதும் நூற்களை வாசிப்பீர்களேயன்றி சுயநலங் கருதும் நூற்களை கரங்களிலும் ஏந்தாதிருக்க வேண்டுகின்றோம்.

- 7:12; ஆகஸ்டு 27, 1913 –

104. மயானச் சடங்குகள்

வினா : ஓர் குடும்பத்தில் யாராமொருவர் இறந்துவிட்டால் இறந்தவரின் புத்திரனோ, பேரனோ, மைத்துனனோ ஒருவருக்கு தலையை நாவிதனிடம் மொட்டையடித்து மீசையை சிரைத்து, பூனுல் தரித்து, திருநீரை பட்டை பட்டையாய் பூசி, வேஷதாரி பிராமணனைப்போல் காட்டியும் இறந்தவரை மயானத்திற்கு கொண்டுபோகும்போது மொட்டையடித்தவன் இடதுபக்கம் முரத்தில் வெற்றிலையும் பொரியும் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கொண்டு போகிரதும், மாயானத்தின் அருகே போனதும் காளியம்மா கதவைதிர அரிச்சந்திரா வழியை விடுயென்று சொல்லியும் அரிச்சந்திரன் கோவிலை மூன்றுமூறை சுத்திவந்து எதிரில் பிரேதத்தை வைத்து எதிரில் வெட்டியான் நின்றுகொண்டு சிலவு சொல்லுகிறதும் வெட்டியானுக்கு கால்பணம் முழந்துண்டு வாய்க்கரிசி இவைகளை கொடுக்கிறதும், இவை முடிந்தவுடன் குழியண்டை வந்து மூன்றுதரம் சுற்றி குழியில் வைத்து வந்திருக்கும் யாவரும் பிடிமண் போடுகிறதும் அதன் பிற்பாடு முற்றிலும் மூடிவிட்டு மொட்டையடித்தவன் குடத்தில் தண்ணீர் நிறப்பி தோள்மேல் வைத்துக்கொண்டு மூன்று முறை சுற்றிவருகிறதும், ஒவ்வொரு தரமும் வண்ணான் துவாரம் செய்கிறதும் மூன்றாம் நாள் பால்சடங்கு செய்கிறதும், 16-ம் நாள் கருமாதி செய்கிறதும் இறந்தவரின் பாத்தியஸ்தர்கள் மொட்டை அடித்தவனுக்கு தங்கட்கைகளால் அங்கவஸ்திரம் தலையில் கட்டுகிறதும், இவ்வித சடங்குகளெல்லாம் நமது ஆதி சற்குருநாதன் இயற்றிய சட்டமா அல்லது மேல்ஜாதி மேல் ஜாதியென்று மேலுக்கு எடுத்து திரியும் வேஷதாரிகள் ஏற்படுத்திய கற்பனையா.

ஆ.அ.முருகேசர்
- 7:13; செப்டம்பர் 3, 1913 –

விடை: பூர்வ பௌத்தரது காலத்தில் இல்லறத்தோர் செய்யுங் கிரியைகள் வேறாகவும் துறவறத்தோராகிய கியான சங்கத்தோர் செய்யுங் கிரியைகள் வேறாகவும் நடாத்திவந்ததாக சரித்திரங்களாலும் சுருதிகளாலும் அநுபவங்களாலும் விளங்குகின்றது அவைகள் யாதென்னிலோ இல்லறத்தோர் பிணம் சத்துபோனது கண்டு செத்தானென்றும், இருளடைந்தது கண்டு இறந்தானென்றும் தன்னை மறந்தது கண்டு மரணமடைந்தானென்றும் வழக்கமொழி பெற்று பிணத்தை ஓரிடம் வளர்த்தி சிரசினின்று ஒளிரும் சோதி மறைந்துவிட்டபடியால் தலைபுறமாக ஓர் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு பாசபந்தக் கட்டுடையோனாக மரித்தது கொண்டு பாதப்பெருவிரல் இரண்டையுஞ் சேர்த்து பாசபந்தக்கட்டிட்டு பெண்கள் கற்பிற்கும் அச்சத்தை ஊட்டுமாறு நெற்பொரி பொரித்து அக்கால் சுடலைபூமி இதுயெனக் குறிப்பற்று கிடைத்தக்காடுகளில் கொண்டு போய் தகனஞ் செய்வதே வழக்கமாயிருந்த படியால், அப்பிணஞ் சுடுமிடங் கண்டு பின்வரு மக்கள் தேடிவருவதற்கு ஒர் முரத்தில் பொரித்தப் பொரியையும் வெற்றிலையையுங் கலந்து பிணமெடுத்துச் செல்லும் வழியிலிரைத்துக்கொண்டே போவது வழக்கமாகும். காலதாமதமாக வருவோர் அப்பொரியுடனுள்ள வெற்றிலைக் குறிப்பைப்பார்த்துக் கொண்டே போய் தகனவிடஞ் சேர்ந்துக்கொள்ளுவார்கள்.