பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

458 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சென்று திரும்பிவந்தபோது சகசவிளக்கம் நூறு பாடலும் வீபூதி விளக்கம் பத்து பாடலும் பஞ்சரத்தினம் ஐந்துபாடலும் அடங்கி உள்ள ஓர் சுவடியும், அசோதரை காவியம் அச்சிட்ட சிறு புத்தகம் ஒன்றும், பாகுபலிநாயினார் பரம்பரையோரால் கிடைத்ததென்று நமக்களித்தார். அவைகளை முற்றிலும் வாசித்து இப்பஞ்சரத்தினத்தைக் கண்டவுடன் மனங்கலங்கி யாம் குடியேற்றஞ் சென்றுவரும்போது திருவள்ளுருக்குச் சென்று இப்பஞ்சரத்தினப்பா வடித்துள்ள இடங்களைத் தேடியும் கிடையாமல் அவ்விடமுள்ள விவேகந்தங்கிய சில பெரியோர்களை விசாரித்தோம்.

2:2, சூன் 24, 1908

அப்பெரியோர்கள் யாவரென்பீரேல் வேலூர் மார்க்கலிங்கப்பண்டாரம் மைத்துனர் முத்துசுவாமி ஜோஷியரவர்களும், காசி விசுவநாத முதலியாரவர்கள் சம்பந்தியாரிளவல் சௌந்திரபாண்டிய முதலியாரவர்களுமேயாம். அவ்விரு வரையும் அணுகி இச்சிலாலயத்தில் ஏதேனும் சிலாசாசனக் கவிகளுள்ளதாவென்று உசாவினோம். அதில் சௌந்திரபாண்டிய முதலியாரவர்கள் சற்று நிதானித்து வாசக சிலாசாசனங் கேட்கின்றீரா அன்று பஞ்சரத்தினப் பாக்களடித்துள்ள சிலாசாசனங் கேட்கின்றீரா என்றார். அதற்கு நாம் மாறுத்திரமாக பஞ்சரத்தின சிலாசாசனமே என்று கூறினோம்.

அப்பஞ்சரத்தின சிலாசாசனந் தோன்றிய காரணம் யாதென்றால் இத்திருவளுர் ஆலயத்திற்குப் பறையர்களே திரளாக வந்து பூசிப்பதும் அமாவாசைதோறும் அவர்களால் சேருந்தட்சணையுந் தேங்காய் பழமும், மாவும், வெல்லமும் அதிகமாக வரும் வழக்கத்தைக்கண்ட சில சாதியார் இக்கோவிலை அபகரிக்க ஏற்பட்டதினால் வள்ளுவர்களில் சிலர் அவர்களைக் கண்டித்து திருவள்ளுவர் குறிப்பு மாறாதிருப்பதற்கு நல்லுரையூரர் என்னும் பாணரால் பஞ்சரத்தின் தியானப்பா பாடி கற்பலகையில் அடித்து முகப்பிற் புதைத்திருந்தார்களாம். அப்பஞ்சரத்தினப்பாவை முத்துசுவாமி ஜோஷியர் பாடவும் கேட்டோம். ஆனால் என்னிடத்துள்ளப் பாடலைக் கொண்டு போகாததினால் ஒத்துப்பார்ப்பதற்கில்லாமல் போயது. ஆயினும் அச்சிலாசாசனத்தை யார் கொண்டுபோய் இருக்கலாம் என்று விசாரித்ததின் பேரில் சௌந்திர பாண்டிய முதலியாரவர்கள் கூறியது யாதெனில் - அந்த சிலாசாசனத்தை எடுத்து இந்தக் குளத்தில் போட்டுவிட்டிருப்பார்கள் அல்லது பறையர்கள் வெகுவாக இக்கோவிலுக்கு அமாவசைதோறும் வருவதை மாற்றிவிடுவதற்கு அதோயிருக்கும் சிறியக் கோவிலைக்கட்டி அதற்குப் பறைப்பொருள் கோவிலென்று பெயர் வைத்து அதில் பறையர்களைப் போம்படி உத்திரவுசெய்திருக்கின்றார்கள். ஒருகால் அக்கட்டிடத்திற்கு சிலாசாசனத்தை அடிப்படைப்போட்டிருப்பினும் போட்டிருப்பார்களென்று கூறினார்.

அதற்கு யாம் இஃது வைஷ்ணவர் கோவில் என்று வழங்குவதை பௌத்தர் மடமென்றும், திருவள்ளுவநாயனாரை அரசபுத்திரனென்றும் எவ்வகையில் கூறலாம் என்றோம்.

அதற்கு மாறுத்திரமாக முத்துசுவாமி ஜோஷியர் கூறியது யாதெனில் - வேலூர் வினயலங்காரர் வியாரமும், தின்னனூர் திருவள்ளுவர் வியாரமும் ஏககாலத்தில் கட்டியதென்றும் திருவள்ளுவர் நிருவாணத்திற்குமுன்பு இதை இந்திரவியாரம் என்றும் இராகுலர்வியாரம் என்றும் வழங்கிவந்த வார்த்தையைக் கொண்டே தற்காலம் அநுபவித்துவரும் வைணவசமயத்தார் இராகுலா, இராகுலர் என்னும் புத்தருடைய மைந்தன் பெயரை இராகவர், இராகவர் என்று மாற்றி வீரராகவ ராலயம் என்று பெருக்கிக்கொண்டபோதினும் இஃது பௌத்தர்மடமே என்று ரூபிப்பதற்கு உள்ளிருக்கும் பௌத்தர் நிருவாண சிலையே போதுஞ் சான்றென்று கூறினார்.

இதுவுமன்றி திருவள்ளுவநாயனார் அரசபுத்திரன் என்பதை இப்பஞ்சரத்தினம் கூறுவதுமன்றி திரிக்குறளுக்கு சாற்றுக்கவி கொடுத்துள்ள புத்த சங்கத்தாராகிய