பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 587


(க.) ஞானமணிகளாம் புதைப்பொருளமைந்த மொழியினையுடைய முனிவரது பெருமெயை பூமியின் கண்கூறவேண்டின் அவர்களால் கூறியுள்ள மறைமொழிகளே விளக்கிவிடுமென்பது கருத்து.

(வி.) மறைமொழிகளாம் பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய் கடைபிடியுங்கள், உங்களிதயத்தை சுத்திசெய்யுங்கோளென்னுந் திரிபேத வாக்கியங்களே உலக மக்கள் சீர்திருத்தங்களுக்கு திரிபீடங்களாகவும், விளங்கி மும்மொழிகளில் யாதொன்றைப்பற்றின் அஃது முற்றி முத்திப்பேறாம் நிருவாணத்திற்குக் கொண்டுவரு கிறபடியால் அவற்றை உணர்ந்த வழிநூலார் பூமியின்கண் நிறைமொழி மாந்தரின் பெருமெயை அறியவேண்டின் மறைமொழியின் பயனே அவற்றிற்குச் சான்றெனக் கூறியுள்ளவற்றைக் கண்டு சூளாமணி என்னுஞ் சார்பு நூலார் தோலாமொழி தேவர் “ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை, போதியங்கிழவனை பூமிசை யொதுங்கினை, போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய, சேதியென் செல்வனின்றிருவடிவணங்கின” என்னுந் தொழுகினைக்காதாரமாம் முனிவனும் அவரால் ஓதிய மறைமொழியுமே போன்ற ஆதாரமென்பது விரிவு.

9.குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.

(ப.) குணமென்னும் - சாந்த குணமென்னும், குன்றேறி - மலைமீதேறி, நின்றார் - நிலைத்தவர்களது, வெகுளி - கோபமானது, கணமேனும் - கண்ணிமைப்பொழுதேனும், காத்தல் - நிலைத்தல், அரிது - அரிதென்பது பதம்.

(பொ.) சாந்த குணமே நிலையாகநின்ற தண்மெய் மிகுத்த அறவோர்களுக்குத் தோற்றும் கோபமானது கண்ணிமைப் பொழுதேனும் அவர்களிடம் நிலைக்காதென்பது பொழிப்பு.

(க.) இரசோகுணம், தமோகுணம் இரண்டும் நசிந்து சத்துவகுணம் நிலைத்த சாந்தரூபிகளாம் அந்தணர்களுக்கு பூர்வபழக்க வெகுளி தோன்றினும் அவ்வெகுளி சாந்தம் நிறைந்தவர்களிடம் கணமேனும் நிற்காதென்பது கருத்து.

(வி.) சாந்தகுணமாங் குன்றின்மீதேறி சகல பாசபந்த பற்றுக்களுமற்று நிருவாணநிலை நிலைத்தவர்களுக்கு ஏதோ முன்பழக்கவசத்தால் கோபங் கொள்ள நேரினும் சாந்தகுணமே உருவமைந்த நிலையில் நூதனமாக வந்து கலக்குங் கோபமானது ஒரு கணப்பொழுதேனுந் தரித்து நிலையாது என்பதற்குப் பகரமாக அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் "மெய்மெய் பொறையுடைமெய் மேன்மெ தவமடக்கம், செம்மெயொன்றின்மெ துறவு டமெ-நன்மெய், திறம்பாவிரதந் தரித்தலோடின்ன அறம்பத்து மான்ற குணம்” அமைந்த சிறப்பின் விரிவு.

10.அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குந்
செந்தண்மெய் பூண்டொழுக லால்.

(ப.) அந்தணரென்போர் - அந்தணரென் றழைக்கப்படுவோர், அறவோர் - சமணமுநிவரிற் சிறந்த தன்மசொரூபிகளே யாவர் (எவ்வகையிலென்னில்), எவ்வுயிர்க்கும் - சருவ வுயிர்களின்மீதும், செந்தண்மெய் - செவ்விய சாந்தநிலை யமைந்து, பூண்டொழுகலால் - கார்த்துவருதலா லென்பது பதம்.

(பொ.) சருவசீவர்களாம் புழுப்பூச்சுகள்முதல் மக்களீராகவுள்ள தோற்றங்களின்மீது அன்புபாராட்டி காக்கும் கருணை நிறைந்த சாந்தரூபிகள் யாரோ அவர்களையே அந்தணர்களென்று அழைக்கப்படுவதென்பது பொழிப்பு.

(க.) தண்மெயாம் சாந்தநிறைவால் சருவ உயிர்களையுந் தன்னுயிர்போல் கார்த்து தாங்களடைந்த சுகநிலையாம் நிருவாணத்தை மற்றய மக்களும் சுகிக்கவேண்டுமென்னும் அன்பின் பெருக்கத்தால் அந்தணர்களென்னும் பெயரைப் பெற்றார்களென்பது கருத்து.