பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

586 / அயோத்திதாசர் சிந்தனைகள்

என்றும் விவேமிகுத்தப் பெரியோர் புகழ்ச்சியையும் அவிவேகிகளாம் சிறியோர்கள் இகழ்ச்சியையுங் கூறிய விரிவாம்.

7.சுவையொளி யுரோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.

(ப.) சுவை - உருசித்தலுக்கும், ஒளி - பார்த்தலுக்கும், ஊரு - பரிசித்தலுக்கும், ஓசை - கேட்டலுக்கும், நாற்றம் - முகர்தலுமாம், என்றைந்தின் - ஐந்திற்கும் ஆதாரமாயுள்ளவை யெவையென, வகைதெரிவான் - அதனிலையைத் தெரிந்துகொண்டவன், கட்டே - இடத்தே, உலகு - உலகம் அடங்கியுள்ள தென்பது பதம்.

(பொ.) ஐம்புல நுகற்சிக்கும் ஆதாரம் ஈதீதென்று அறிந்துகொண்டவ னிடத்தே உலகம் அடங்கியுள்ளதென்பது பொழிப்பு.

(க.) நாவினாற் சுவைத்து அறியும் நிலையையும், கண்ணினாற் கண்டறியும் நிலையையும், ஊரினால் உணர்ந்தறியும் நிலையையும், செவியினாற் கேட்டறியும் நிலையையும், நாசியினால் முகர்ந்தறியும் நிலையையும் கண்டடைந்தவனிடத்தே உலகம் ஒடுக்கமென்பது கருத்து.

(வி.) கண்ணானது பார்க்கும் புலனையுடைத்தாயினும் மனமானது வேறுவிவகாரத்தில் நிலைக்கின் பார்வை அற்றுப்போம். நாவானது சுவைக்கும் புலனை யுடைத்தாயினும் மனமானது வேறு விவகாரத்தில் நிலைக்கின் சுவையற்றுப்போம். தேகமானது ஊரும் புலனை யுடைத்தாயினும் மனமானது வேறுவிவகாரத்தில் நிலைக்கின் உணர்ச்சி அற்றுப்போம். செவியானது கேட்கும்புலனை யுடைத்தாயினும் மனமானது வேறுவிகாரத்தில் நிலைக்குமாயின் சப்தமற்றுப்போம். மூக்கானது முகரும் புலனையுடைத்தாயினும் மனமானது வேறு விவகாரத்தில் நிலைக்குமாயின் நாற்றமற்றுப்போம். இத்தகைய ஐம்புல நுகர்ச்சிக்கும் ஆதாரமாயுள்ள மனமே புருடனென்றுணர்ந்து அதனவாவாம் மாசினைக் கழுவி பற்றற்றவனது உள்ளங்கண்ணாடியின் கண் உலகமொடுங்கிசருவமுந் தனக்குள் தோன்றி செல்லல், நிகழல், வருங்கால மூன்றினையும் விளக்குகின்றபடியால் புலனைந்தின் வகை தெரிவானிடத்தே புழுப்பூச்சுக்கள் முதல் மக்கள் வரை ஒடுக்கமென்பதை விளக்குமாறு புலனைந்தின் வகைதெரிந்த தென்புலத்தானிடத்தே உலகம் அடங்கியுள்ளதற்குப் பகரமாக தேவிகாலோத்திரம் “யோகியாகி யொழுகுமியல்பினோன், போகமாற்றிப் பொருண்மேற் பொறிகளை, வேகமான பயமும் வியப்பும் போய், மாகர்காண சுகத்தை மருவுவான்” என்றும் வாசிஷ்டம் “பெருகத் திரண்ட முகில்களெல்லாம் பெருங்காற்றாலே யொதுங்குதல்போல், வருகற்பனை நாசத்தாலே மனம் போயிறக்கு மனமிறந்தால், பொருகற்பாந்த மாருதமும் பொங்கு கடலும் புவியனைத்து, முருகச்சுடு பன்னிரு கதிருமொருகால் வரினுமிடருண்டோ ” என்றும் நாலடி நாநூறு “மெய்வாய் கண்மூக்கு செவியெனப் பெயர்பெற்ற, வைவாய வேட்கைக்-கைவாய, கலங்காமற் காத்துய்க்கு மாற்றலுடையான், விலங்காது வீடுபெறும்” என்றும் அறநெறிச்சாரம் “தன்னைத்தன்னெஞ் சங்கரியாகத் தானடங்கின், பின்னைத்தா னெய்தாநலனில்லை-தன்னைக், குடிகெடுக்குந் தீநெஞ்சிற் குற்றேவல் செய்தல், பிடிபடுக்கப்பட்ட களிறு” என்றும் ஐம்புல நிலையாங் குணவமைதிகொண்டோனிடத்தே உலகம் அடங்கிற்றென்பது விரிவு.

8.நிறைமொழி மாந்தர் பெருமெ நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

(ப.) நிறை மொழி - மலைவுபடா வார்த்தையினையுடைய, மாந்தர் - முனிந்தோரது, பெருமெய் - அந்தரங்கத்தை, நிலத்து - பூமியின் கண் கூறவேண்டின், மறைமொழி - புத்தாகம மொழிகளே, காட்டிவிடும் - நிரூபிக்குமென்பது பதம்.

(பொ.) மலைவுபடா வார்த்தையினை உடைய முனிவரது உண்மெய்யை விளக்கவேண்டின் அவரால் போதித்துள்ள முப்பேத மொழிகளாம் திரிபீட வாக்கியங்களே அவற்றைக் காட்டிவிடுமென்பது பொழிப்பு.