பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 609


(க.) அவனவன் அன்பின் விருத்திக்கும், அன்பின் குறைவிற்கும் ஆதாரபீடமாகத் தொடர்ந்து வருவது என்புடன்தொடர்ந்த அன்பின் உருவகமேயாதலின் சருவவுயிர்களுக்கும் உண்டாகும் அன்பின்தொடர்பு என்போடியைந்தவை யென்பது கருத்து.

(வி.) சருவ சீவர்களின் விருத்திக்கும் அதனானந்தத்திற்கும் ஆதாரமாகத் தொடர்ந்து நிற்பது என்பென்னும் உருவகத் தோடமைந்த அன்பின் தொடர்பேயாதலின் அன்போடியைந்துசெய்துவரும் வழக்கங்கள் யாவும் உடலோடியைந்துத் தொடர்ந்து வருவதியல்பென்றறிந்த நாயன் என்போடியைந்த தொடர்பென்று கூறிய விரிவாம்.

4.அன்பீ னுமார்வமுடைமெ யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு.

(ப.) அன்பீனு - உழுவலாவதை பிறப்பிக்கும், மார்வமுடைமெ - அன்பின் மிகுத்த தேகியை, யதுவீனு - அது பிறப்பிக்கும், நண்பென்னு - இனிய நேயத்தால், நாடாச்சிறப்பு - அழியாப் புகழைத் தருமென்பது பதம்.

(பொ.) அன்பே அன்பின்மிகுதியைத் தோற்றுவிக்கும். அவ்வன்பின் மிகுத்ததேகி இனிய நட்பை தோற்றுவிப்பான். அவ்வினிய நட்பால் சகலமக்களாலும் அழியாப்புகழைப் பெறுவானென்பது பதம்.

(க.) அன்பு யாவரிடத்துண்டோ அவ்வன்பை யின்னும் பெருக்கல் வேண்டும். அதின் பெருக்கத்தால் அன்புடையோனெனத் தோற்றல்வேண்டும். அத்தோற்றத்தால் சகலருக்கும் இனிய நண்பனென விளங்கவேண்டும். அவ்விளக்கத்தால் அழியாப்புகழைப் பெறுவானென்பது கருத்து.

(வி.) அன்பின் பெருக்கமே அன்பனென்னும் ஓருருவத்தை விளக்கும். அவ்வுருவமே சகலருக்கும் இனிய நேயனெனத் தோற்றும். அன்பின்மிகுத்தத் தோற்றமே சகலராலுமினியநேயனெனக் கொண்டாடுஞ் சிறப்பென்பதற்குச் சார்பாய் அறநெறித்தீபம் “பல்லோர்தற்பணிவனவும்பகை கெடதர்மம் பெருகுவதும், இல்லார்க்கொன்றீவது மினியவே புகலுவது, நல்லார் கண்டுவப்பதுநலிவா நோயின்மெயும், எல்லார்க்குமுயிர்நிலையா மன்புடைய பயனென்பார்” என்னும் ஆதாரங்கொண்டு அன்பின் பயனே அழியாப் புகழைத் தருமென்பது விரிவு.

5.அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.

(ப.) அன்புற்றமர்ந்த - அன்பு பொருந்த நிலைத்த, வழக்கென்ப - இயல்பானது, வையகத் - பூமியின்கண், தின்புற்றார் - பேரின்ப சுவையை, ரெய்துஞ் - அநுபவிக்கும், சிறப்பு - புகழைத்தரு மென்பது பதம்.

(பொ.) சருவ செயலிலும் அன்பு பொருந்திவாழும் வழக்கமானது பூமியின்கண் ஞானசாதனத்தோர் சுகிக்கும் பேரின்பத் திற்கீடாய சிறப்பை யடையச்செய்யுமென்பது பொழிப்பு.

(க.) சருவசீவர்கண்மீதும், சருவச்செயல்களின்மீதும் அன்புபொருந்தச் செய்யுஞ் செயல்கள் இயல்பாகவே நிகழ்ந்துவரின் அதன் பயனை பேரின்பத்திற் கொப்பாக சிறப்பிப்பார்களென்பது கருத்து.

(வி.) மனைவிமக்களுடன் கூடி வாழும் இல்வாழ்வோன் தனது வாழ்க்கையை அன்பு பொருந்தி நடாத்தி வருவானாயின் இல்லந்துறந்த மகா ஞானிகளடையுஞ் சிறப்பை இவன் அடைவானென்பது விரிவு.

6.அறத்திற்கே யன்பு சார்பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை.

(ப.) அறத்திற்கே - தன்மத்திற்கே, அன்பு - உழூவல், சார்பென்ப - உடைந்தை யாமென்ப, வறியார் - ஏழைகளது, மறத்திற்கு - யீகையற்றச் செயலுக்கும், மஃதே - அவ்வன்பே, துணை உதவியாயிருந்து யீகையைத் தருமென்பது பதம்.