பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

624 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நிலைமெயுள்ள மக்களது செல்வம் நாளுக்குநாட் பெருகி சுகந்தருவதுடன் தனது உரவின் முறையோருக்கும் உதவும் என்பது விரிவு.

நற்றொழிலிலும், நல்லெண்ணத்திலும், நற்செயலிலும் நின்று சம்பாதிக்கும் பொருள் நடுவுநிலைமெயாள ருடையதும், துற்செயலிலும், வஞ்சகத்திலும், சூதிலும், வட்டியிலும், நின்று சம்பாதிக்கும் பொருள் நடுவுநிலைமெ யற்றவர்களுடையதும் ஆதலின் அத்தகையோர் செல்வம் தங்களுக்கும் உதவாது தங்கள் தங்கள் சந்ததியோர்களுக்கும் உதவாமற்போம் என்பதேயாம்.

3.நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே வொழிய விடல்.

(ப.) நன்றேதரினு - சுகத்தைக் கொடுக்கக்கூடியதாயினும், நடுவிகந்தா - நல்வழியிற் சம்பாதிக்காத, மாக்கத்தை - செல்வத்தை, யன்றே - அப்பொழுதே, யொழிய விடல் - அகற்றிவிட வேண்டு மென்பது பதம்.

(பொ.) கெட்டவழியால் சம்பாதித்தப் பொருள் தனது சுகத்தைக் கொடுக்கக் கூடியதாயினும் அதனை அன்றே ஒழித்து விடவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) சூதாலும், வஞ்சகத்தாலும், களவாலும், வட்டியாலும் சம்பாதிக்கும் பொருள் அக்கால் தனக்கு சுகத்தைக் கொடுத்திடினும் பிற்கால் பெருந்துக்கத்திற்குக் கொண்டுபோமாதலின் அத்தகையப் பொருளை அன்றே ஒழித்து விடவேண்டும் என்பது கருத்து.

(வி.) தீயச் செயலால் சம்பாதிக்கும் பொருள் தீயவழியிலேயே செல்வதுடன் தன்னையுந் தீவினைக்கு உள்ளாக்குமென்பதை உணர்ந்த பெரியோன் அத்தீவினைக்குள்ளாகி அல்லலடையாது நல்வினையில் ஈடுபட்டு நடுவுநிலைமெயோனாம் நல்லோனாகி சகல சுகமும்பெற்று சகலருக்கும் உபகாரியாக விளங்கவேண்டும் என்பது விரிவு.

4.தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப்படும்.

(ப.) தக்கார் - நடுவுநிலைமெ யுள்ளார், தகவில - நடுவுநிலைமெயில்லாதார், ரென்ப - என்பதை, தவரவ - அவரவர்களின், ரெச்சத்தாற் - சற்புத்திர விருத்தியாற் காணப்படும் - தெரிந்துக்கொள்ளலாமென்பது பதம்.

(பொ.) இவர்கள் நடுவுநிலைமெயுள்ளோர் அவர்கள் நடுவுநிலைமெ யில்லார் என்பதை அவரவர்கள் நற்புத்திர விருத்தியாற் கண்டுக்கொள்ளலாம் என்பது பொழிப்பு.

(க.) தனபாக்கிய விருத்திக்கும், புத்திரபாக்கிய விருத்திக்கும் நடுவுநிலைமெயாம் நற்செயலே காரணம் என்பதை அவரது நடுவுநிலைமெய் செயலாற் காணலாமென்பது கருத்து.

(வி.) இவர்கள் துறந்தவர்கள் இவர்கள் துறவாதவர்களென்று அவரவர்கள் ஈகையினாலும் உள்ள வமைதியினாலும் அறிந்து கொள்ளுவதுபோல் இவர்கள் நடுநிலைமெயுள்ளார் அவர்கள் நடுவுநிலை மெயில்லாதார் என்பதை அவரவர்கள் ஈன்ற சற்புத்திரச்செயலால் அறியலாம் என்பது விரிவு. அறநெறிச்சாரம் “துறந்தார் துறந்திரலரென்றறியலாகும், துறந்தவர் கொண்டொழுகும் வேடங்-துறந்தவர், கொள்ப கொடுப்பவற்றாற் காணலாம் மற்றவர், உள்ளங்கிடந்தவகை”.

5.கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமெ சான்றோர்க் கணி

(ப.) கேடும் - தனக்குறைவும், பெருக்கமு - தனநிறைவும், மில்லல்ல - பகுப்பின்றாம், நெஞ்சத்துக் - உள்ளத்து, கோடாமெ - நடுவுநிலைமெ பிறழா, சான்றோர்க் - மேன்மக்களுக்கு, கணி - அணிகலமென்பது பதம்.

(பொ.) நடுநிலைமெ பிறழா சாந்தரூபிகளுக்கு அணிகலமாயுள்ளது யாதெனில் இவன் ஏழை அவன் தனவான் என்னும் பாரபட்சமற்ற பேதம்பாரா நிலை என்பது பொழிப்பு.