பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 625


(க.) இவன் தனமற்றவன், அவன் தனமுள்ளவன் என்னும் பேதமற்று இருவரையும் சமநிலையாம் நடுநிலைமெயி நோக்குவதே மேன்மக்களுக்கு அணிகலம் என்பது கருத்து.

(வி.) இவன் தனமில்லாது கேடுற்றவன் அவன் தனம்பெற்று சுகமுற்றவனென்னும் பேதாபேதம் பாரா நடுவுநிலைமெயுற்ற நிலையே சான்றோர்களாம் மேன்மக்களின் அணிகலமென்று கூறியவற்றிற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "தூயவாய் சொல்லாடல் வண்மெயும் துன்பங்கள், ஆயபொழுதாற்று மாற்றலும்-காய்விடத்து, வேற்றுமெகொண்டாடா மெய்மெயும் இம்மூன்றும், சாற்றுங்கால் சாலத்தலை" என்னும் மிருதுவாய நல்வாக்கும் சுகத்தையுந் துக்கத்தையும் சமமாகக் கருதுதலும், தன்னவரன்னியர் என்னும் வேற்றுமெ பாராட்டாதலுமாகிய சான்றோர்களே உலகத்தில் எக்காலும் முதல்வர்களாவார்கள் என்பது கொண்டு நடுவுநிலைமெயுள்ளார்க்கு வேற்றுமெயற்றிருத்தலே அணிகலமென்பது விரிவு.

6.கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீ யல்ல செயின்.

(ப.) தன்னெஞ்ச - தன துள்ளத்திற்கு மாறாய், நடுவொரீஇ - நடுவநிலைமெ, யல்ல - அல்லாததை, செயின் - செய்வதாயின், கெடுவல்யானென்ப - யான் கெடுவேனென்பதை, தறிக - அறிந்துக்கொள்ள வேண்டுமென்பது பதம்.

(பொ.) தன துள்ளத்திற்கு மாறாய நடுவுநிலைமெயற்றச் செயலை செய்வதாயின் தான் கெடுவோமென்று அறியவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) தனது மனசான்றுக்கு விரோதமாக நடுவுநிலைமெயற்றச் செயலைச் செய்வதாயின் தனது கேட்டிற்கு வழியைத் திறந்துகொண்டோமென்று அறியவேண்டும் என்பது கருத்து.

(வி.) தன்னெஞ்சமே தனக்குக் கரியாய்நிற்க அதற்கு மாறாக நடுவுநிலைமெயற்றச் செயலைச் செய்வதாயின் தானே கெடுவான் என்பதும் கெடான் என்பதும் அவனவன் செயல் என்பதற்குச் சார்பாய் நாலடி நானூறு “நன்னிலைக்கட்டன்னை நிறுப்பானுந்தன்னை, நிலைகலைக்கிக்கீழிடுவானு நிலையினு , மேன்மேலுயர்த்து நிறுப்பானுந்தன்னைத், தலையாகச் செய்வானுந்தான்." அறநெறிச்சாரம் "தானேதனக்குப் பகைவனு நட்டானும், தானேதனக்கு மறுமெயு மிம்மெயும், தானேதான் செய்தவினைப்பயன் துய்த்தலால், தானே தனக்குக்கரி" என்பதுகொண்டு தான்செய்யும் நடுவுநிலைமெயற்றச் செயலால் தானே கெடவேண்டும் என்பது விரிவு.

7.கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக் கட்டங்கியான் றாழ்வு.

(ப.) நடுவாக - நடுவு நிலைமெயோனை, துலக - உலகத்தோர், கெடுவாக - குற்றமுடையவனாக, வையார் - நிந்தியார்கள், நன்றிக்கட்டங்கியான் - நன்றியை நினையா நடுவுநிலைமெ யற்றோனை, றாழ்வு - நிந்திப்பாரென்பது பதம்.

(பொ.) நடுவுநிலைமெயுள்ளானை உலகத்தார் நிந்திக்கமாட்டார்கள். நடுவுநிலைமெயில்லானை நிந்திப்பார்கள் என்பது பொழிப்பு.

(க.) சகலமக்களையும் சமமாக பாவிக்கும் மேன்மக்களை உலகத்தார் உயர்த்திப் பேசுவார்களன்றி தாழ்த்தி நிந்திக்கமாட்டார்கள். சகலரையும் சமமாகப் பாவிக்காத கீழ்மக்களைத் தாழ்த்தி நிந்திப்பார்கள் என்பது கருத்து.

(வி.) நடுவுநிலைமெயினின்று சகலமக்களையும் பேதம்பாராது ஆதரிப்போரை வையமாட்டார்கள், பேதமுறக் கெடுப்போரை வைவார்க ளென்பதற்குச் சார்பாய் அறநெறித்தீபம் " நல்லோரை யெல்லோரும் நாடிடுவர் நல்லறத்தி, லில்லாரை யெல்லோரு மிழுக்குறவே பேசிடுவர், சொல்லாலும் பொருளாலு மறியாத தொல்லுலகோ, ரெல்லவரும் நல்லவரை யேற்றுவதன் பயனாமே" யென்னும் ஆதாரங்கொண்டு நடுவுநிலைமெ யுற்றோரை வையாது போற்றுவதும் நடுவுநிலையற்று நன்றியில் நிலையாரை வைது தாழ்த்துவார் என்பது விரிவு.