பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

638 / அயோத்திதாசர் சிந்தனைகள்


10.அறன்வரையா நல்ல செயினும் பிறன்வரையாள
பெண்மெ நயவாமெ நன்று.

(ப.) அறன்வரையா - அறநெறியாம் ஒழுக்கத்தினின்று, நல்லசெயினும் - நல்லற நடாத்துவோனாயினும், பிறன்வரையாள் - அன்னிய நெறிக்குள்ளடங்கி வாழும், பெண்மெ - இஸ்திரீயை, நயவாமெ - இச்சியாதவனே, நன்று - அறநெறியாளனென்பது பதம்.

(பொ.) அறநெறிவழுவாது நல்லவைகளைச் செய்வோன் ஆயினும் பிறனது கட்டுக்கு உள்ளடங்கி நிற்கும் பெண்ணை இச்சிப்போன் நல்லவனாகான் என்பது பொழிப்பு.

(க.) உலகமக்களுள் தன்ம வரம்பைக் கடவாது நல்லதைச் செய்வோன் அன்னியன் மனையாளை இச்சியாதிருப்பவதே அறநெறி வரம்பைக் கடவாதவன் என்பது கருத்து.

(வி.) அறமென்னும், நல்வாழ்க்கை , நன்முயற்சி, நல்வாய்மெய், நற்கடைபிடி முதலிய நல்லச் செயல்களில் முயல்வோன் அன்னியன் மனையாளை நயவுவானாயின் அவன் செய்யும் நன் முயற்சிகள் யாவும் தீயவையாக முடிவதன்றி பழிபாவத்திற்கு உள்ளாவதால் நன்மெயாம் அறநெறியோன் அன்னியன் மனையாளை நயவாதிருத்தலே நன்றென்பது விரிவு.

16. பொறையுடைமெய்

மக்களுள் இவன் பொறுமெ உடையவன், இவன் பொறாமெ உடையவனென்னுங் குறிப்பை தேகத்தைக்கொண்டே அறிதலால் பிறனில் விழையாமெ என்னும் நெறிக்குப்பின் பொறையுடைமெயாம் சாந்தருபியை விளக்குகின்றார்.

1.அகழ்வாரை தாங்கு நிலம் போலத் தம்மெ
யிகழ்வார்ப் பொறுத்த றலை.

(ப.) அகழ்வாரை - பூமியின் பலனைக்கருதா தகன்றோரை, தாங்குங் - காக்கும், நிலம்போலத் - பூமியைப்போல, தம்மெ - தன்னை, யிகழ்வார்ப் - தம்மெ நிந்திப்போர் செயலை, பொறுத்தறலை - மன்னித்துக் கொள்ளுதலே தலைமெயா மென்பது பதம்.

(பொ.) பூமியின் பலனைக் கருதாது அகன்றோரையும் பூமியே காப்பதுபோல் தம்மெ நிந்திப்போரை விரோதியாகக் கொள்ளாது பொறுத்துக்கொள்ளுதலே தலைமெயாம் என்பது பொழிப்பு.

(க.) பூமியை வெறுத்தும் அதன் பலன் கருதாது அகல்வோரை அப்பூமியே காத்து ரட்சிப்பதுபோல தம்மெ நிந்தித்து வைவோரது குற்றத்தைக் கருதாது காத்தலே பொறுமெயில் தலைமெயாம் என்பது கருத்து.

(வி.) பூமியை வெட்டிக் கொத்திப் புழுதியழுகக் கலக்கிய போதினும் அவ்வகை செய்வதை வெறுத்து அகழ்ந்தபோதினும் அஃது காப்பதுபோல், நிந்தித்து வைதோர் பெறாமெச்செயலை தங்கள் உள்ளத்தில் ஊன்றி அப்பொறாமெயைத் தங்களுக்குள் அணுகவிடாது அகற்றி அவர்களைக் காத்தலே பொறையுடையான் என்னுந் தோற்றத்திற்கு அழகாதலின் மற்றொருவர் குற்றத்தைப் பொறுத்துக் காத்தலை முதன்மெயாகக் குறிப்பிடப்பட்டது என்பது விரிவு.

2.பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.

(ப.) விறப்ப - வொருவன் குற்றத்தை மடித்து, பொறுத்த - மன்னித்துக்கொள்ளினும், யென்றுமதனை - எக்காலுமவற்றை, மறத்தல் - அக்குற்றத்தை மறந்துவிடுதல், லதனினு - அவற்றினும், நன்று - நல்லதாகுமென்பது பதம்.

(பொ.) ஒருவன் குற்றத்தை மடித்து விடினும் அவற்றை எழவிடாது மறத்தலே அதனினும் நன்றாம் என்பது பொழிப்பு.