பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 647


(க.) மற்றொருவர் சுகத்தைக்கண்டு மனஞ்சகியாது வெதும்பி பித்தேறி துன்பஞ் செய்துவிட்டு பயந்தோடுவோர் அறிவும் அறிவாமோ என்பது கருத்து.

(வி.) பலர் சுகங்களையுங் கருதி தனக்குக் கிட்டாது உள்ளம் வெதும்பி அதனால் அவா பித்தேறி அவர்களுக்குத் தீங்கிழைத்து பயந்தோடும் படியான மக்களுக்கு அறிவுமுண்டோ என்னும் இரங்கல் விரிவு.

6.அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

(ப.) அருள்வெஃகி - கிருபையில் வெதும்பி, யாற்றின்க ணின்றான் - ஆறுதல் பெற நோக்குவோன், பொருள் வெஃகி - அழியும்பொருளை நோக்கி வெதும்புவனாயின், பொல்லாத - கொடிய துன்பங்கள், சூழக்கெடும் - கவிழ்ந் தழிக்கு மென்பது பதம்.

(பொ.) கிருபையைநாடி வெதும்பி ஆறுதல் பெறவேண்டியவன் அழியும் பொருளைநாடி வெதும்புவானாயின் கொடுந்துன்பங் கவிழ்ந்து கெடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) அருளில் வெதும்பி ஆற்றலடைய வேண்டியவன் பொய்ப் பொருளையும் நாடி வெதும்புவானாயின் சகல துன்பத்திற்கும் ஆளாவான் என்பது கருத்து.

(வி.) புறப்பற்றுக்கள் யாவும் பொய்யெனக் கண்டு அகப்பற்றாம் உண்மெயில் வெதும்புவோன் மறந்தும் புறப்பற்றாம் பொய்ப்பொருளை நாடி வெதும்புவானாயின் அதுவே சகலகேட்டையும் விளைவித்துத் துன்பத்தை உண்டு செய்துவிடும் என்பது விரிவு.

7.வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

(ப.) வேண்டற்க - வெறுப்புற்றவன் போற் காட்டி, வெஃகியா - உள்ளுக்கு வெதும்புவோன், மாக்கம் - செல்வம், விளைவயின் - விருத்தியானது மாண்டற்கரிதாம் - மரித்தோனுக்கொப்பாய, பயன் - பலனாமென்பது பதம்.

(பொ.) வெறுப்புற்றவன்போற் காட்டி உள்ளுக்கு வெதும்புவோன் செல்வமானது மரித்தோனுக்கொப்பாய பலனுடைத்தாம் என்பது பொழிப்பு.

(க.) வெளிக்கு வெறுப்புற்றவன்போற்காட்டி உள்ளுக்குள் வெதும்பு வோனது பயன் மாண்டவனே சாட்சியாம் என்பது கருத்து.

(வி.) மாண்டான் என்றபோதே சகலமும் ஒழித்தானென்று கூறுவதுபோல் வெளிக்கு சகல பற்றுக்களையும் அறுப்பவன் போல் அபிநயித்து உள்ளுக்குள் பொருளாசையால் வெதும்புவோனது பயனும் விழலாகும் என்பது விரிவு.

8.அஃகாமெ செல்வத்திற் கியாதெனில் வெஃகாமெ
வேண்டும் பிறன்கைப் பொருள்.

(ப.) செல்வத்திற் - ஆக்க மழியுமென்று, அஃகாமெ - பயங்கொள்ளா நிலை, கியாதெனில் - எதுவென்னில், பிறன்கைப்பொருள் - அன்னியன் பொருளின்மீது, வேண்டுமென் - விருப்புற்று, வெஃகாமெ - வெதும்பாதிருத்தலேயாமென்பது பதம்.

(பொ.) ஆக்கம் அழியுமென்னும் பயம் கொள்ளா நிலை யாதெனில் அன்னியன் பொருள்மீது விருப்புற்று வெதும்பாதிருத்தல் என்பது பொழிப்பு.

(க) தனது செல்வம் அழியாதென அஞ்சாதிருப்பதற்குத் திடநிலை யாதெனில்: அன்னியர் பொருள் மீது அவாக்கொண்டு வெதும்பாதிருத்தலே நிலையாம் என்பது கருத்து.

(வி.) தான் நல்வழியால் சேகரித்துள்ளப் பொருள் கள்ளர்கைப்படுமோ, சூதர்கைப்படுமோ, வஞ்சகர்கைப்படுமோவென்று அஞ்சாதிருப்பதற்கு ஆதாரம் யாதெனில்: அன்னியர் பொருளைத் தான்கண்டு ஆசையுற்று வெதும்பாதிருத்த லேயாமென்பது விரிவு.