பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 653

- உண்மெயறியாது, கொளல் - கெடுத்துக்கொள் ளுதற்கொக்குமென்பது பதம்.

(பொ.) அநுபவத்திற் கண்டறியாதோன் தன்னிடத்துள்ளப் பணங் கொடுத்துக் குடித்து உண்மெ அறியாது கெடுத்துக் கொள்ளுதற்கு ஒக்கும் என்பது பொழிப்பு.

(க.) கட்குடியினால் உண்டாங் கேடுகளைக் கண்டும் அநுபவ மறியாதவன் உடைய பணத்தைக்கொடுத்துக் குடித்து உண்மெயைக் கெடுத்துக் கொள்ளுவதற்கு ஒக்கும் என்பது கருத்து.

(வி.) உண்மெய்ப்பொருளை அறியவேண்டி மக்கள் படுவது உலகறிந்திருக்க அவ்வனுபவத்தைக் கைகண்டதென்று உணராது கேட்டினைத் தன் பொருள் கொடுத்துப் பெற்றுக்கொள்ளுதல்போல் தன்னிடத்துள்ளப் பணத்தைக் கொடுத்து அறிவை மயக்குங் கள்ளினை வாங்கி அருந்துவதாகும் என்பது விரிவு.

6.துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

(ப.) துஞ்சினார் - தன்னை மறந்து தூங்கினோர், செத்தாரில் - மரித்தோருக்கு, வேறல்ல - மாறுபடாததுபோல், ரெஞ்ஞான்று எக்காலத்தும், கள்ளுண்பவர் - மதுவினை யருந்துவோர், நஞ்சுண்பார் - விஷத்தினை யருந்துவோருக் கொப்பாவ ரென்பது பதம்.

(பொ.) தன்னை மறந்து தூங்கினோர் மரித்தோருக்கு மாறுபடாததுபோல எக்காலும் மதுவினை அருந்துவோர் விஷத்தைக்குடிப்போருக்கு ஒப்பாவர் என்பது பொழிப்பு.

(க.) சகலவற்றையு மறந்து - நித்திரையால் மூடுபட்டவன் மரணமடைந்தோனுக்கு சமம் ஆவதுபோல் கள்ளினை என்நேரமுங் குடிப்பவன் தினேதினே விஷத்தினை அருந்துவோனுக்கு ஒக்குமென்பது கருத்து.

(வி.) நினைவற்று பெண்டுபிள்ளைகளையும் மறந்து சேகரித்துள்ளப் பொருள்களையும் மறந்து தூங்கினவன் மரணமுற்றோனுக்கு ஒப்பாவதுபோல் சகலவற்றையும் மறக்கச் செய்யுங் கள்ளினை அருந்தி திரிவோன் மதிமயங்கிக் கேடுண்டு மரிப்பானாதலின் அவன் எக்காலும் விஷத்தினை அருந்துவோனுக்கு ஒப்பாவன் என்பது விரிவு.

7.உள்ளொற்றி யுள்ளூர் நகப்படு ரெஞ்ஞான்றுங்
களவொற்றிக் கண்சாய் பவர்.

(ப.) யுள்ளூர் - தான் வசிக்கும் ஊரில், உள்ளொற்றி - ஒத்துவாழ்பவர், கள்ளொற்றி - கள்ளை யருந்தி, கண்சாய்பவர் - விழி மறைந்தோரை, ரெஞ்ஞான்றுங் - எக்காலத்தும், நகப்படுவ - அகன்றே - நிற்பார்களென்பது பதம்.

(பொ.) தான் வசிக்கும் ஊரில் ஒத்து வாழ்வோர் கள்ளை அருந்தி விழி மறைந்தோரை எக்காலமும் அகன்றே நிற்பார்கள் என்பது பொழிப்பு.

(க.) ஊரில் தன்னுடன் ஒத்து நேசித்து வந்தவர்கள் யாவரும் கள்ளை அருந்தி கண்மயங்கி நிற்போரைக் கண்டவுடன் நேசியாது தூரவே அகன்றுவிடுவார்கள் என்பது கருத்து.

(வி.) தனது ஊரில் தன்னுடன் நேசித்து அன்பு பொருந்தி ஒத்து வாழ்ந்துள்ளோர் யாவருங் கள்ளைக்குடித்து வெறியேறி கண்மயக்குற்றவர்களைக் கண்டவுடன் அவர்கள் அருகில் நெருங்காமலும் ஓருதவியும் புரியாமலுந் தூரவே விலகிப்போவார்கள் என்பது விரிவு.

8.களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததுஉ மாங்கே மீகும்.

(ப.) களித்தறியே - கள் குடியாதானந்தமறியேன், னென்பது - என்று கூறும்படியானதை, கைவிடுக - மறந்துவிடுவாயாக, நெஞ்சத் - உள்ளத்திலவ்வெண்ணமே, தொளித்ததுஉ - அடங்கி, மாங்கேமிகும் - அவ்வாசையையே அதிகரிக்கச்செய்யுமென்பது பதம்.