பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 679


(க.) தான் வசிப்பதற்கு இல்லிடம் இல்லாவிடினுந் தனதீகையின் பயனை காட்சியால் அறிந்தவர்கள் ஒப்பிய உரவினர்க்கீயும் உபகாரங்களில் தளர்வடையார்கள் என்பது கருத்து.

(வி.) தாங்கள் தங்கியிருப்பதற்கு சுகமாய இல்லம் இல்லாதக் காலத்தினும் தன்மத்தின் பயனைக் காட்சியில் அறிந்தவர்கள் சருவசீவர்களுக்கும் உபகாரிகளாக விளங்குவார்கள் என்பது விரிவு.

9.நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர்மெ
செய்யா தமைகலா வாறு.

(ப.) நயனுடையா - கருணை நிறைந்தவன், னல்கூர்ந்தானாதல் சகலராலும் நல்லவனெனப் போற்றுதற்கு, செயுநீர்மெ - செய்யு முபகாரச்செயலில், செய்யா - தவிராது, தமைகலாவாறு - நிலைத்துநிற்றல் வேண்டுமென்பது பதம்.

(பொ.) கருணை நிறைந்தவன் சகலராலும் நல்லவனென்று போற்றுதற்கு செய்யும் உபகாரச்செயலில் தவிராது நிலைத்து நிற்றல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) கருணை நிறைந்த சகலராலும்போற்றத்தக்க உபகாரியானவன் அவ்வுபகாரச்செயலைத் தவிராதமைத்து நிற்றல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) சீவகாருண்யம் நிறைந்தவன் தனக்குள்ளக் காருண்யச்செயல் சீவர்களுக்கு வுபகாரியாக விளங்குதலால் அக்காருண்யன் என்னும் பெயரை சகலராலுங் கொண்டாடுவதற்காகும், அவ்வகையிற் கொண்டாடப்படுவோன் தனதுபகாரச் செயலை மாறாது நிலைக்கச்செய்ய வேண்டும் என்பது விரிவு.

10.ஒப்புரவி னால்வருங் கேடனி னஃதொருவன்
வித்துக் கோட்டக்க துடைத்து.

(ப.) ஒப்புரவினால் - ஒப்பிய வுரவினருக்குச் செய்யு முபகாரத்தால், வரும் - வருவது, கேடனி - தீங்கேயாயினும், னஃதொருவன் - அவ்வுபகாரஞ் செய்பவன், விற்றுக்கோட்டக்க - தன்னுடைய பொருளைக் கொடுத்துவிட்டதென்றெண்ணி, துடைத்து - அகற்றவேண்டு மென்பது பதம்.

(பொ.) ஒப்பிய உரவினருக்குச் செய்யும் உபகாரத்தால் வருவது தீங்கேயாயினும் அவ்வுபகாரஞ் செய்பவன் தன்னுடையப் பொருளைக் கொடுத்துவிட்டதென்று எண்ணி அகற்றவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) உரவினருக்கும் அன்னியருக்குஞ் செய்யும் உபகாரத்தால் ஏதொரு தீங்கு விளையுமாயின் அவற்றை யங்ஙனே மறந்து தனது உபகாரச்செயலிலேயே நிற்றல்வேண்டும் என்பது கருத்து.

(வி.) தனது கருணைமிகுத்த உபகாரச்செயலால் தனதுரவினருக்கும் ஒப்பிய வுரவினருக்கும் ஏனைய சீவராசிகளுக்கும் செய்யும் உபகாரத்தால் பிரதியுபகாரந் தீங்காக நேரினும் அதனை மனதிற் பதியவிடாது துடைத்து தனதுபகாரச் சிந்தையிலேயே உறுதிபட நிற்றல் வேண்டும் என்பது விரிவு.

28. ஈகை

இல்லற ஒழுக்கமுள்ளோன் ஒப்புரவொழுகலில் ஆதுலருக்கும் பிணியாளருக்கும் திக்கற்றவர்களுக்கும் இல்லை என்னாது ஈய்ந்து உண்டிகொடுத்து உயிர்கொடுத்தலே மேலாய தன்மமாதலின் ஒப்புரவொழுகலின் பின்னர் அதற்கு உறுதியாம் ஈகையின் பயனை விளக்குகின்றார்.

1.வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

(ப.) வறியார்க் - ஏழைகளுக்கு, கொன்றீவதே - உதவிபுரிவதே, ஈகை - உதவியாகும், மற்றெல்லாங் - மற்ற வுதவிகளெல்லாம், குறியெதிர்ப்பை . ஓர்பயனைக் கருதி யுதவுதற்கு, நீர - நேரா, துடைத்து - உடையதாமென்பது பதம்.

(பொ.) ஏழைகளுக்கு உதவிபுரிவதே உதவியாகும் மற்ற உதவிகளெல்லாம் ஓர் பயனைக்கருதி உதவுதற்கு நேராய் உடையதாம் என்பது பொழிப்பு.