பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 715

தான்வேண்டு - தானே கருதிநிற்பானாயின், மாற்றான்வரும் - மரண துன்பம் வந்தே தீருமென்பது பதம்.

(பொ.) ஆசையை ஒழித்து ஆறுதலுற்றவனுக்குப் பிறவியின் பின்னலறுந்துபோம், ஆசையினைத்தானே கருதி நிற்பானாயின் மரண துன்பம் வந்தே தீரும் என்பது பொழிப்பு.

(க.) உலக விபத்தில் ஆசையைப் பெருக்கி நிற்போனுக்கு மரண துன்பம் உண்டாவதுடன் மறுபிறவியில் மீளா துன்பத்தையும் அடைவான், ஆசைகளை அறுத்து ஆறுதலுற்றவன் மரணதுக்கத்தைப் போக்கிக் கொள்ளுவதுடன் மறுபிறவியுமற்ற சுகநிலை பெறுவான் என்பது கருத்து.

(வி.) ஆசையினால் ஒன்றை தாவிதாவி அலைவதின் செயலே மாறிமாறி பிறத்தற்கு ஏதுவாகி, பிறப்பின் துக்கம், பிணியின் துக்கம், மூப்பின் துக்கம், மரணதுக்கம், இன்னான்கையும் பெருக்கிக்கொண்டே வரும் உலக இன்பத்தின் ஆசைகளற்றபோது மாற்றான் வருவான் என்னும் பயமும் மரணத்தின் துன்பமும் பிறவியின் தோற்றமும் அற்று சுகவாரி என்னும் ஆனந்த நிலையில் இருப்பான் என்பது விரிவு.

8.அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்.

(ப.) அவாவில்லார்க் - ஆசையற்றவர்களுக்கு, துன்பம் - துக்கமானது, கில்லாகும் - இல்லையென்பதாகும், மஃதுண்டேல் அதுயிருக்குமாயின், றவா அது - ஆசையின் பெருக்கமே, மேன்மேல் - மேலு மேலும், வரும் - வந்தேதீருமென்பது பதம்.

(பொ.) ஆசையற்றவர்களுக்கு துக்கமானது இல்லை என்பதாகும், அது இருக்குமாயின் ஆசையின் பெருக்கமே மேலும் மேலும் வந்தே தீரும் என்பது பொழிப்பு.

(க.) நிராசையுற்றோர் நிமலநிலைப் பெற்றவர்களாதலின் அவர்களை யாதொரு துன்பமும் அணுகாவாம், ஆசையென்பதுள்ளோருக்கு மேலும் மேலும் ஆசை வளர்ந்தே தீரும் என்பது கருத்து.

(வி.) கண்ணினால் பார்க்கும் பொருளிலாசையும் நாவினால் உருசிக்கும் பொருளிலாசையும் மூக்கினால் முகறும் பொருளிலாசையும் செவியினால் கேட்கும் பொருளிலாசையும் உடலால் சுகிக்கும் பொருளிலாசையு மாயச்செயல்களில் இச்சையை விடாதோர்க்கு அஃது மேலும் மேலும் பெருகி மீளாதுக்கத்திற்கு ஆளக்கிவிடும். பஞ்ச புலநுகற்சியின் ஆசைகளற்று சுக நிலைபெற்றோருக்கு துக்கமென்பதே அணுகாது என்பது விரிவு.

9.இன்பமிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத் துட்டுன்பங் கெடும்

(ப.) துன்பத்துட்டுன்பங் - மேலு மேலுந்துக்கத்தையே கொடுத்துவரும், மவா வென்னுந் - ஆசையானது, கெடும் - அற்றொழியுங்கால், இன்பம் - பேரின்ப நிருவாணமானது, மிடையறா - மத்திய தடைகளின்றி, தீண்டு - வந்து கூடுமென்பது பதம்.

(பொ.) மேலும் மேலுந் துக்கத்தைக் கொடுத்துவரும் ஆசையானது அற்றொழியுங்கால் பேரின்ப நிருவாணமானது மத்திய தடைகளின்றி வந்து கூடும் என்பது பொழிப்பு.

(க.) உலக இன்பத்தை நாடி தினேதினே பெருகும் ஆசையினால் உண்டாந் துக்கமானது சகலமும் ஒழிந்து நிராசையுற்றபோது பேரின்பமாம் நித்திய சுகம் யாதாமொரு தடையுமின்றி வந்து கூடும் என்பது கருத்து.

(வி.) பாசபந்த இன்பத்தை நாடி ஆசையின் பெருக்கில் உலைந்த துறவி அவற்றை அகற்ற வேண்டியே சங்கஞ் சேர்ந்தவனாதலின் மற்றுமுண்டாம் ஆசையின் பெருக்கங்கள் யாவையும் பற்றற ஒழித்து விடுவானாயின் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பி பூரணமுற்று தானே தானே தத்துவனாவான் என்பது விரிவு.