பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

724 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தான்றன்னின் - தன்னறிவுமற்ற, மெலியார் - அறிவிலிகள், மிடத்து - வசத்து, மேற்சொல்லு - மேலாக விளங்குமென்பது பதம்.

(பொ.) விவேகமிகுத்தத் துறவிகள் முன்னிலையில் விவேகமற்ற துறவி தன்னையும் ஓர் விவேகியென நடித்தல் தன்னறிவுமற்ற அறிவிலிகள் வசத்து மேலா விளங்கும் என்பது பொழிப்பு.

(க.) ஐம்புலன் தென்படா துறவி ஐம்புலன் தென்பட்டதென் புலத்தார்போல் நடிப்போனை அவனினும் அறிவிலிகளே கொண்டாடுவார்கள் என்பது கருத்து.

(வி.) கண்ணினாற் பார்க்குஞ் செயலுக்கும் மூக்கினால் முகருஞ் செயலுக்கும், நாவினால் உருசிக்குஞ் செயலுக்கும், செவியினாற் கேட்குஞ் செயலுக்கும், உடலால் ஊருஞ் செயலுக்கும் பீடமெஃதென்றாய்ந்து தன்னை உணர்ந்தடங்கி தன்னை போற்றினுந் தூற்றினும், ஒருவர் இகழினும் புகழினும், பூசிக்கினுந் தூஷிக்கினும் அவற்றை நோக்காது தாங்கள் நோக்குற்ற நிலையில்லயித்து ஆனந்தித்திருக்குந் துறவியைப்போல் இடம்பம், பொறாமெய், கோபம் நிறைந்த துறவி நடிப்பானாயின் அவனைப் போன்ற அவிவேகிகளே அத்துறவியைக் கொண்டாட இடம் உண்டாம் அன்றி வேறில்லையாதலின் விவேகமிகுத்த மேலோர் கொண்டாடும் துறவையடைந்து அருளை வளரச்செய்யவேண்டும் என்பது விரிவு.

40. மெய்யுணர்தல்

அதாவது, இவ்விடங்கூறியுள்ள மெய்யென்னும் பதம் இருவகைப்படும் அதாவது உண்மெயென்றும் புண்மெயென்றும் அந்தரங்கமென்றும், பகிரங்கமென்றுமாம். இஃது சகலருக்கும் விளங்குவதரிதாகும். இராகத் துவேஷ மோகங்களென்னும் காம வெகுளி மயக்க மூன்றும் அற்று சாந்தம் அன்பு ஈகை மூன்றுந் திரண்டு, பிறப்புப்பிணி மூப்புக்சாக்காடென்னும் நான்கு வகைத் துக்கங்களும் ஒழிந்து புளியம் பழம் வேறு ஓடுவேறாவது போல் உடல் வேறு உள்ளொளி வேறாகி, உயிரென்றும் உடலென்றும் வழங்கும் பெயரற்று அநித்திய அநாத்தும நிருவாணமாம் சத்து சித்து ஆனந்த நிலைபெறும். இதையே உண்மெயென்றும் இவற்றிற்கு ஆதாரமாம் உடலையே புலாலமைந்த புண்மெயென்றுங் கூறப்படும். இல்லறமக்கள் பாசபந்தப் பற்றுக்கள் நிறைந்துள்ளவரையில் புளியங்காயிற்கு சமமாகவும், துறவடைந்து சங்கஞ்சேர்ந்து உலக பற்றுக்களற்றபோது புளியம்பழத்திற்கு சமமாகவும் உடலினின்று உள்ளொளியை மாற்றிப் பிரிப்பதே பரிநிருவாணமென்றும், அத்துறவிகளையே தாயின் வயிற்றிருந்து பிறந்த பிறப்பொன்றும், உடலினின்று உள்ளொளியாய் மாற்றி பிறக்கும் பிறப்பொன்றுங் கண்டு இருபிறப்பாள ரென்றும் வழங்கப்படுவார்கள். இத்தகையப் பேரானந்த மெய்யுணர்வறிதற்கே துறவி சங்கஞ் சேர்ந்தும் பொருளல்லாதவற்றை உணராது மெய்ப்பொருளை உணரும் வழிவகைகளை விளக்கலாயினர்.

1.பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு
மருளாணா மாணாப் பிறப்பு.

(ப.) பொருளல்லவற்றை - துறவி தனக்கப்புறப் பட்டப்பொருளை, பொருளென்றுணறு - மெய்ப்பொருளென்றுணரும், மருளாணா - அஞ்ஞானமருண்ட நிலையடைவானாயின், மாணாப்பிறப்பு - மீளாப்பிறப்பில் சுழலுவானென்பது பதம்.

(பொ.) துறவி தனக்கப்புறப்பட்டப் பொருளை மெய்ப்பொரு ளென்றுணரும் அஞ்ஞானமருண்ட நிலையடைவானாயின் மீளாப்பிறப்பிற் சுழல்வான் என்பது பொழிப்பு.

(க.) மெய்ப்பொருளுணரத் துறவுபூண்டவன் புலன் தென்பட தன்னை உணராது தனதஞ்ஞான மருளால் தனது முன்னிலை சுட்டாக ஓர் பொருள் உண்டென்று மலைவானாயின் மீளா பிறப்பு இறப்பிற் சுழன்று மாளாதுக்கத்தில் அழுந்துவானென்பது கருத்து.