பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

748 / அயோத்திதாசர் சிந்தனைகள்


2.செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்.

(ப.) செவிக்குண - காதுகளுக்கு கேள்வி யுணவு, வில்லாத - கொடாத, போழ்து - காலத்தில், சிறிது - சொற்ப வுணவை, வயிற்றுக்கு - தன் வயிற்றிற்குமட்டும், மீயப்படும் - கொடுக்கப்படுவதால் யாது பயனென்பது பதம்.

(பொ.) காதுகளுக்கு கேள்வி உணவு கொடாத காலத்தில் சொற்ப உணவை தன் வயிற்றிற்குமட்டும் கொடுக்கப்படுவதால் யாது பயன் என்பது பொழிப்பு.

(க.) நேரம் தவராது வயிற்றிற்கு மட்டிலும் உணவை ஊட்டி வளர்ப்போன் தன் செவிக்காய கேள்வி உணவை ஊட்டாத போது யாது பயன் என்பது கருத்து.

(வி.) இச்செய்யுளுள் வயிற்றை சுட்டி உண்ணும் உணவையும் செவியைச் சுட்டிக் கேள்வி உணவையும் வகுத்துள்ளக் காரணம் யாதெனில் காலந்தவராது வயிற்றிற்கு உணவை ஊட்டி உடலை வளர்ப்பவன், செவிக்குணவாம் கேள்வியில் முயன்று அறிவை வளர்க்காதவன் யாது பயனையும் அடையான் என்பது விரிவு.

3.செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
னான்றாரோ டொப்பர் நிலத்து.

(ப.) செவியுணவிற் - காதுக்குணவாம், கேள்வியுடையா - கேள்வியில் முயன்று நிற்போர், நிலத்து - பூமியின்கண், ரவியுணவி - உணவாக்கினியை யவித்துள்ள, னான்றாரோ - மகா ஞானிகளுக்கு, டொப்பர் - ஒப்பாவரென்பது பதம்.

(பொ.) காதுக்குணவாம் கேள்வியில் முயன்றுநிற்போர் பூமியின்கண் உணவாக்கினியை அவித்துள்ள மகா ஞானிகளுக்கு - ஒப்பாவார் என்பது பொழிப்பு.

(க.) இப்பூமியின்கண் பசியாக்கினியை அவித்துள்ள பக்குவர்களுக்கு ஒப்பாவர் கேள்வியில் முயன்று நிற்போர்கள் என்பது கருத்து.

(வி.) கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்னும் கல்விப் பொருளியலில் தெளிந்தோராம் முற்றும் உணர்ந்தோரே காமாக்கினி கோபாக்கினி பசியாக்கினி மூன்றினையும் அவித்த முத்தராகுவர் இவர்களையே தேவர்கள் என்றும் கூறப்படும். இவற்றுள் கேள்வியில் முயன்று நிற்போர் பசியாக்கினியை அவித்தப் பெரியோர்களுக்கு ஒப்பாவர் என்பது விரிவு.

4.கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை.

(ப.) கற்றிலனாயினுங் - கலை நூற்களை கல்லாதவனாயினும், கேட்க - அறநெறியையேனுங் கேட்ட, வஃதொருவன் - ஒருவனுக்கு, கொற்கத்தி - கொடிய வாபத்து காலத்தில், னூற்றாந்துணை - லோக வூற்று நீர்போலுதவுமென்பது பதம்.

(பொ.) கலை நூற்களை கல்லாதவனாயினும் அறநெறியையேனுங் கேட்ட ஒருவனுக்கு கொடிய ஆபத்து காலத்தில் லோகவூற்று நீர்போலுதவும் என்பது பொழிப்பு.

(க.) சனிநீராடு என்பதைக் கல்லாவிடினும் கேள்வியாலாடி சுகமடைவது இயல்பாதலின் கல்லாதவனுங் கேள்வியால் சுகமடைவான் என்பது கருத்து.

(வி.) உலோகத்தி நின்று ஊற்றுநீர் சனிக்கு மிடங்களில் குளிப்போர் சில கொடிய வியாதியினது துன்பம் நீங்கி சுகமடைதற்குத் துணையாயிருப்பது கற்றலின்றி சனிநீராடென்னுங் கேள்வியேயாதலின் கல்லாதவனாயினுங் கேள்வியில் முயலுவானாயின் கொடிய ஆபத்துக்களிலவை துணையாகும் என்பது விரிவு.