பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 747

கூறுவர். அஃது எத்துணையும் பொருந்தாவாம். கல்வியுமற்று செல்வமுமற்று யாசிப்போனை மேற்சாதியோனென்றும் கல்வியும் செல்வமுமுற்று சுகசீவியாக வாழ்வோனைக் கீழ்ச்சாதியோன் என்றும் வழங்கிவருவது இத்தேசத்தற்கால இயல்பாதலின் மேற்செய்யுளுக்கும் அன்னோர் உரைக்கும் நிறைபடாதது கண்டு திரண்ட செல்வமுமறிவு மிகுத்த மேலாய குடும்பத்திற் பிறந்தோராயினுங் கல்வியில்லாதோர் கனங் குலைவாரென்றும் செல்வமுமறிவுமற்றக் கீழாயக் குடும்பத்திற் பிறந்துங் கல்வியைக் கற்றுத்தெளிவாராயின் சகலராலுங் கனப்படுவார்கள் என்பது விரிவு.

பௌத்தர்களது நூலுக்கு பொய்யாய சாதி சம்மந்தவுரை கூறுவது இழுக்காம்.

10.விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

(ப.) விலங்கொடு - மிருகங்களுடன், மக்க - கல்லாமனுக்களும், ளனைய - பொருந்துவோராகலின், ரிலங்கு நூல் - அறிவை வளர்க்குங் கலை நூற்களை, கற்றாரோ - கற்றவர்களோ, டேனையவர் - அவர்களுக்கு வேறாகவே விளங்குவார்களென்பது பதம்.

(பொ.) மிருகங்களுடன் கல்லாமனுக்களும் பொருந்துவோராதலின் அறிவை வளர்க்குங் கலை நாற்களை கற்றவர்களோ அவர்களுக்கு வேறாகவே விளங்குவார்களென்பது பொழிப்பு.

(க.) கல்வியைக் கண்டு கல்லாதார் மிருகத்திற்கு ஒப்பானவர்களாதலின் கண்டு கற்றோர் அவர்களை அணுகார் என்பது கருத்து.

(வி.) கல்வியைக் கற்று தெளிவுறா மக்களை மிருகத்திற்கு ஒப்புவமெயிட்டுக் கூறியவை யாதெனில் கல்லாதோர் மனுவுருவாகத் தோன்றியும் செயல்கள்யாவும் மிருகத்துக்கு ஒத்துளதைகண்ட நாயன் கற்றுணர்ந்த விவேகிகள் கல்லார்களது செயலுக்கு வேறாகவே விளங்குவார்கள் என்பது விரிவு.

இச்செய்யுளில் கல்லாரை மிருகத்திற்கு ஒப்பிட்டும் கற்றோரை மனுக்களுக்கு ஒப்பிட்டுங் கூறியுளதால் இவ்வழிநூல் பொய்யாய சாதிசம்பந்த உரைகளுக்குப் பொருந்தா என்பதே துணிவு.

46. கேள்வி

அதாவது கல்வியைக்கற்றலில் மாத்திரம் பயனில்லை, கற்ற மொழிமுதல் யதார்த்தங்களையும் செய்யுள் முதல் யதார்த்தங்களையும் ஞான முதல் அந்தரார்த்தங்களையுங் கேட்டுத்தெளிய வேண்டியதே பயனாதலின் முதநூல் வழி நூல் சார்பு நூற்களுக்குரியவர்களாம் சமணமுனிவர்களைக் கொண்டே கேட்டுத்தெளியுங் கேள்வியை விவரிக்கலானார்.

1.செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.

(ப.) செல்வத்துட் - தனப்பொருள்யாவற்றிற்குமேலாய, செல்வஞ் - தனப்பொருள், செவிச்செல்வ - காதினாற் கேட்குங் கேள்விப்பொருளேயாம், மச்செல்வஞ் - அக்கேள்விப்பொருளாயது, செல்வத்து - சகலதனப்பொருட்கள், ளெல்லாந்தலை எல்லாவற்றிற்கும் முதலதாமென்பது பதம்.

(பொ.) தனப்பொருள் யாவற்றிற்கும் மேலாய தனப்பொருள், காதினாற் கேட்குங் கேள்விப்பொருளேயாம், அக்கேள்விப்பொருளாயது சகல தனப்பொருள் எல்லாவற்றிற்கும் முதலதாம் என்பது பொழிப்பு.

(க.) தனச்செல்வம் யாவற்றிற்கும் மேலாய செல்வம், காதினாற் கேட்டுத் தெளியும் செவிச்செல்வமேயாம் என்பது கருத்து.

(வி.) தனச்செல்வம், தானியச்செல்வம், மக்கட்செல்வம், மனைச்செல்வம் யாவுங் கள்ளர்களாலுங் காலயேதுக்களாலு மொழிந்துபோம். செவியினாற் கேட்கும் பொருளோ எவ்வாற்றானும் ஒழியாது நித்திய சுகமாம் நிருவாணம் வரை தொடர்ந்தே பயன் தருதலால் சகல செல்வங்களிலும் மேலாய செல்வம் செவிச்செல்வமே என்பது விரிவு.