பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

746 / அயோத்திதாசர் சிந்தனைகள்

னுழை புல - ஐம்புல நுகர்ச்சி, மில்லா - அடையாதோர், னெழினல - சிறப்பாய பலனை யடையார்களென்பது பதம்.

(பொ.) பூமியைப் பண்படுத்தாது அதன் பலனை அடையாதது போல நுண்ணிய கலை நூற்களைக் கற்று ஐம்புலநுகர்ச்சி அடையாதோர் சிறப்பாய பலனை அடையார்கள் என்பது பொழிப்பு.

(க.) பூமிக்குடையோன் அதனை ஆழவுழுது பண்படுத்தியதன் பலனை அநுபவியாதது போல கலை நூற்களைக்கற்று ஐம்புலனாம் தென்புலனடையாதோர் மனிதன் என்னுஞ்சிறப்பை ஏது வகையாலுமடையார்கள் என்பது கருத்து.

(வி.) உலக சிறப்பிற்கு மிக்க பூமியை உடையோனென்னும் பெயரை வைத்துக் கொண்டு அதனை சீர்திருத்தி ஆழவுழுது பண்படுத்தி அதன் பலனை அநுபவியாதது போல மனிதனெனத் தோன்றியுங் கலை நூற்களைக் கற்று தனதைம்புலனிலையையும் அதன் செயலையும் அறிந்தடங்காதோன் யாது சிறப்பையும் சுகத்தையும் அடையமாட்டான் என்பது விரிவு.

8.நல்லார்கட் பட்ட வறுமெயி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு.

(ப.) நல்லார்கட் - நல்லவர்களென்னுங் கற்றோராயினும், மறுமெயி - அவர்கள் பின்னெடுக்குந்தேகத்தில், பட்ட -படும், னின்னாதே - துன்பத்தினும், கல்லார்கட் - கல்வியைக் கல்லாரெடுத்ததேகத்தின் கண், திரு - செல்வஞ்சேரினும், பட்ட - அதுகொண்டே துன்பப்பட்டுழல்வார்களென்பது பதம்.

(பொ.) நல்லவர்கள் என்னுங் கற்றோராயினும் அவர்கள் பின்னெடுக்குந் தேகத்தில் படும் துன்பத்தினும் கல்வியைக் கல்லாரெடுத்த தேகத்தின்கண் செல்வஞ்சேரினும் அது கொண்டே துன்பப்பட்டு உழல்வார்கள் என்பது பொழிப்பு.

(க.) கற்றும் நல்லோராகி தன்னை மறந்து மறுபிறவியுற்று துன்பத்தை அடைவதினும் கல்லாதான் எடுத்துள்ள தேகத்தின் கண்ணே செல்வமும் அடைவானாயின் அதுகொண்டே மீளா துன்பப்பட்டு உழலுவான் என்பது கருத்து.

(வி.) கற்றுத்தேர்ந்து கல்விப்பொருள், செல்வப்பொருள் பெற்று சகலருக்கும் நல்லவர்களாக விளங்கி மறந்து, செத்து, மறுஜென்மம் புக்கித்துன்பத்தை அநுபவிப்பதினினும் கற்று கல்விப்பொருளை சேர்க்காது செல்வப்பொருளை சேர்ப்போர் அதுகொண்டே கெட்டவர்கள் என்றிழுக்குற்று எடுத்த தேகத்தின்கண்ணே பலவகைத் துன்பப்பட்டு உழல்வார்கள் என்பது விரிவு.

9.மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.

(ப.) மேற்பிறந்தா - கல்வி, செல்வம் பெற்ற சிறந்த குடிப்பிறந்தோர், ராயினும் - ஆனபோதினும், கல்லாதார் - கல்வியைக் கற்காதோரிழுக்கடைந்தே போவார்கள், கீழ்பிறந்தும் - கல்வி செல்வமற்ற தாழ்ந்த குடியிற் பிறந்தும், கற்றா - கல்வியைக்கற்றுத் தெளிவாராயின், ரனைத்திலர் - சகல மக்களாலும், பாடு - சிறப்பாடுடையோராவ ரென்பது பதம்.

(பொ.) கல்வி செல்வம் பெற்ற சிறந்த குடிப்பிறந்தோரானபோதினும் கல்வியைக் கற்காதோர் இழுக்கடைந்தே போவார்கள், கல்வி செல்வமற்ற தாழ்ந்த குடியிற் பிறந்தும் கல்வியைக் கற்றுத் தெளிவாராயின் சகல மக்களாலும் சிறப்பாடுடையோராவர் என்பது பொழிப்பு.

(க.) கல்வியும் செல்வமும் அடைந்த மேலாய குடும்பத்திற் பிறந்தோராயிருப்பினும் கல்வியைக் கல்லாராயின் தாழ்த்தப்பட்டே போவார்கள், கல்வி செல்வமற்ற எழிய குடும்பத்திற் பிறந்துங் கல்வியைக் கற்று தெளிவாராயின் சகலராலும் மேலோரெனக் கொண்டாடப்படுவார்கள் என்பது கருத்து.

(வி.) சில வித்துவான்கள் மேற்பிறந்தார் என்பதை மேற்சாதியிற் பிறந்தோர் என்றும் கீழ்ப்பிறந்தார் என்பதைக் கீழ்ச்சாதியிற் பிறந்தோர் என்றும் உரை