பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xi

மேலாண் குழுக்களால் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்தன, வருகின்றன. ஆனால் எந்தவொரு சமூக மேலாண்மை குழுக்களின் அதிகாரமும் முழுமை பெறாதது என்பதாலும் எதிர்ப்பும் மறுப்பும் அதிகாரத்தின் மாற்றுருவமே என்பதாலும் இவைகள் பல்வேறு கால கட்டங்களிலும் எழுச்சி பெற்றே வந்திருக்கின்றன. இந்த பரவலான எதிர்க்கோட்பாடுகளின் கருத்துக் குவியல்களின் மத்தியிலிருந்து எழுந்த ஓர் சிந்தனைக் கோர்வையே அயோத்திதாசர் சிந்தனைகள். இதற்கென சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவையே அயோத்திதாசரின் சிந்தனைகளை ஒத்த வேறு பலரின் சிந்தனைக் கோர்வைகளிலிருந்து வேறுபடுத்தி, தனிப்படுத்தி நிலைக்கச் செய்கின்றன.

இந்தியாவில் நவீனத்திற்கான மாற்றம் வரலாற்று சந்தர்ப்பத்தால் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. இந்திய மரபுகளையெல்லாம் ஒரே கூடையில் போட்டு, தள்ளப்பட வேண்டியவை என்று கணித்தும், மேற்கத்தியரால் வரையறுக்கப்பட்ட நவீனமே சிறந்தது காலத்திற்கேற்றது என முன்வைத்தனர், காலனிய அரசும் அதனைச் சார்ந்தோரும். அதற்கெதிராக காலனியாதிக்கத்தால் வரையறுக்கப்பட்ட இந்தியப் பழமையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதையே இந்திய வரலாற்றுப் பெருமை என்றும், நமது தனித்துவம் என்றும், மேற்கத்திய நவீனத்தை விட மேலானது என்றும் எதிர்மறையாக வாதிட்டது தேசிய இயக்கம். முன்னவரால் ஒதுக்கப்பட வேண்டியது என்று கணிக்கப்பட்டதும், பின்னவரால் கண் போன்று காக்கப்பட வேண்டியதென்றும் கருதப்பட்ட ‘இந்தியப் பழமை’யின் உட்கரு அடுக்கடுக்கான சமுதாய முறையும் அதனை நியாயப்படுத்தி நிலைப்படுத்தும் பண்பாட்டு சமயக் கோட்பாடுகளே என்பது குறிப்பிடத்தக்கது. இஃது நேரடியாகவோ, மறைமுகமாகவோ தேசியவாதிகள் அனைவராலும் குறிப்பாக காந்தியாலும் பேசப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே அயோத்திதாசரின் நிலை மூன்றாம் மாற்றுக் கருத்து ஒன்றை முன் வைக்கிறது. இந்தியப் பழமையை ஒருமுகமாகப் பார்க்க மறுக்கிறார் அயோத்திதாசர். இந்தியப் பழமையில் கலப்பைக் காண்கிறார் அவர். இரு பெரும் மரபு வழிகளின் வெள்ளப் பெருக்காக பார்க்கிறார். பிராமணியம் - சிராமணியம் என்ற இரு பிரிவின் அடிப்படையில் சாதியற்ற சமுதாயத்தின் அடித்தளங்களாக பகுத்தறிவு, பொருளியல்வாதம், நீதி நெறி, சமத்துவம் போன்ற கோட்பாடுகள், மூடநம்பிக்கை, ஆன்மீகம், அராஜகம், பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதீயம் என்றவற்றால் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருவதைக் காண்கிறார். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து சமூக சமத்துவத்தை முதன்மையாக உள்ளடக்கிய நவீனம் என்னும் கருத்தும், செயல்பாட்டு முறையும் ஏற்கனவே இந்தியப் பண்பாட்டுக்குள் சிறப்பாக தமிழ்ப்பண்பாட்டுக்குள் சிராமணியம் (சமணம்), பௌத்தம் என்ற குடையின் கீழ் பண்டையில் விரிந்தும் பரந்தும் மேலோங்கியும் இருந்த நிலையையும் இடைக்காலத்தில் பிராமணீய - சாதீய எதிர்மறைச் சக்திகளால் சீர்கெட்டும் அழிக்கப்பட்டும் வந்து கொண்டிருப்பதை வரலாற்றிலும், பண்பாட்டிலும், சமூகத்திலும் காணக்கூடும் என்று விளக்குகிறார். சாதியின்மையும் சமூக சமத்துவமுமே நவீனத்தின் உட்கரு என்று ஏற்றுக் கொண்டால் அதனைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டியதில்லை. இந்திய - தமிழ்த் தொன்மையிலேயே,