பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Xiii

கண்ணோட்டத்தில் பண்பாட்டு வேறுபாடுகளுக்கும் தாக்கங்களுக்கும் அப்பாற்பட்டதென்றும், எல்லா பண்பாட்டினரும் வேறுபாடற்ற முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டியதென்றும் பழமை என்பது பொதுவாக, ஒருமுகமான மரபு என்றும் நவீனம் என்பது மறுபடியும் ஒருமுகமான மேற்கத்தியரால் வரையறுக்கப்பட்ட, நிர்ணயிக்கப்பட்ட ‘புதினம்’ என்ற நிலைப்பாட்டினின்று கணிப்போருக்கு அயோத்திதாசர் ஓர் பழமைவாதியாகவே தோன்றுவார்.

மூன்றாவதாக, இவ்வாறு பண்பாட்டு - விமரிசன சமூக அறிவியல் அணுகு முறையில் இந்திய வரலாறு, பண்பாடு, சமூகம் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் அயோத்திதாசர் அசாதாரணமாக, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னமே, மிக முக்கியமான சமூக அறிவியல் பிரச்சனைகளில் அறிவியலாளரின் இன்றைய ஆய்வு முடிவுகளை நமக்களித்தார். இது அயோத்திதாசரின் அம்சங்களில் சிறப்பானது.

எடுத்துக்காட்டாக, சாதி அடிப்படையிலான அடுக்குமுறைச் சமுதாயத்தையே முக்கிய உட்கருவாகக் கொண்ட சனாதன இந்து மதத்தையே இந்தியத் துணைக் கண்டத்தின் ஒருமுகத் தொன்மையாக நிலைநிறுத்தி அதன் மூலம் இன்றைய, எதிர்கால சமூக அரசியலில் தனது மேலாண்மையை நிலைநிறுத்த முனைந்த பிரமாணிய தேசீயவாதிகள். 'இந்து மதத்தின் தொன்மையை' ஓர் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு அதனை பல்வேறு இடங்களில் வலியுறுத்தி வந்தனர். இந்த வாதத்திற்கு ஆதாரமாக ஓரியன்டலிஸ்டுகள் எனப்படும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளரும் பிராமணியத்தையே இந்து அல்லது இந்திய மதமெனத் தூக்கிப்பிடித்தனர். அடுக்கு சமூக முறையை எதிர்க்க முனைந்த பல்வேறு சமூக சக்திகளும் இவ்வாதத்தின் முன் செயலிழந்து நின்றன. இந்தியத் தொன்மை, 'இந்து' தொன்மையென்பதால் தொன்மை முழுமையையுமே கோட்பாட்டளவிலாவது மறுத்து, வெறுத்தொதுக்கி மேற்கத்தியரால் வரையறுக்கப்பட்ட நவீனத்தையும் நாத்தீகத்தையும் ஏற்றக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டனர். இதனால் அநீதியான சமூக முறையை எதிர்ப்போருக்கு சுய பண்பாட்டு அடித்தளம் இல்லாமல் போய்விட்டது. இந்த இக்கட்டான நிலையிலேயே அயோத்திதாசர் தனது மூன்றாம் மாற்றை முன் வைக்கிறார். காலனியாதிக்கத்தாலும் பிராமணிய தேசியவாதிகளாலும் தூக்கிப்பிடிக்கப்பட்ட இந்து மதத்தின் அடுக்கு சமூக முறையின் தொன்மையை கேள்விக்குட்படுத்துகிறார். இந்து மதம் தொன்மையானது அல்ல; ஓரிரு நூற்றாண்டுகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டதொன்று. ஏன், இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தின் உருவாக்கத்திற்கு ஆதாரம் ஆங்கிலேய துரைத்தனமே என்று ஐயமற, ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். எனவே இந்து மதம் என்பது ஆதாரமும் அடித்தளமும் அற்றது; அதனை இந்தியத் தொன்மையாக ஏற்றுக் கொள்ள இயலாது. அதே காரணத்தைக் கொண்டு இந்துமதம் இன்றைய அல்லது எதிர்கால இந்திய சமூகத்தை இணைக்கவோ, இயக்கவோ தகுதியற்றது என்று வாதிட்டார் அயோத்திதாசர். வலதுசாரிகளின் குறிப்பாக ‘இந்துத்துவ’ வின் இன்றைய சமூக அரசியல் எழுச்சியின் பின்னணியில், சமூக அறிவியலார், வெளிநாட்டவரும் முற்போக்கு உள்நாட்டவரும், இது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி அதன் துணிவாக