பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /175


மொழியால் தேறுதல் கூறுவார்; திருப்போரூர் முருகனை நினைந்து நினைந்து வேண்டுதல் செய்வார்.

பண்டிதரால் எத்தனையோ முறை என்னுடல் சோதிக்கப்பட்டது. கையுங் காலுஞ் சூம்பிய பின்னர் ஒரு நாள் அவர் செய்த சோதனை வேறுவிதமாக இருந்தது. இதயம் நன்றாயிருக்கிறது; நாடிகள் செம்மையாக ஓடுகின்றன; புது மருந்தொன்று செய்யலாமென்று எண்ணுகிறேன். இடையில் மருந்து வேண்டாம். குடல் ஓய்வு பெறுவது நல்லது' என்று பண்டிதர் என் தகப்பனாரிடஞ் சொல்லிச் சென்றனர். ஒரு திங்கள் கடந்தது. புது மருந்து சித்தமாயிற்று. அம்மருந்து எனக்குக் கொடுக்கப்பட்டது. அஃது என் தாயார் உள்ளத்துள்ள முருகன் மருந்தோ என்னவோ தெரியவில்லை புது மருந்து அற்புதஞ் செய்ததென்றே சொல்வேன்.

இடை விட்டு விட்டு ஒரு மண்டலம் அம் மருந்துண்டேன். அடிக்கடி பண்டிதர் வந்து வந்து என்னைப் பார்ப்பார். ஒரு நாள் அவர் என்னைச் சோதித்து, 'இனி என் மருந்து வேண்டாம்; இயற்கை மருந்தே போதும். முடக்கு படிப்படியே நீங்கும்' என்று கூறி, ஒரு தைலங் கொடுத்து முட்டிகளின் மேலே பூசிப் பூசி வெந்நீர் விடுமாறு சொன்னார். அப்படியே செய்யப்பட்டது. நான்கு நாளில் கை மெல்ல மெல்ல நீண்டது. பின்னே கால் நீண்டது. முடவன் என்ற பெயர் நீங்கியது. எழுந்து எழுந்து நிற்பேன். விழுவேன். மறுபடியும் எழுவேன். விழுவேன். எழுந்தும் விழுந்தும் தள்ளாடித் தள்ளாடி நடக்கத் தொடங்கினேன். சுவர் பிடித்து நடப்பேன். மற்றவர் கைப்பற்றி நடப்பேன். கோலூன்றி நடப்பேன். இவ்வாறு நடக்க நடக்கச் சூம்புதல் ஒழிந்தது.

ஏறக்குறைய ஓராண்டு கடந்தது. எனக்குப் பள்ளி நினைப்புண்டாயிற்று. 'தம்பி இன்னும் ஓராண்டு பள்ளியை மறத்தல் வேண்டும்' என்ற கட்டளை மருத்துவரிடமிருந்து பிறந்தது. மற்றுமோராண்டு சென்றது. நோய் ஓராண்டை விழுங்கியது. ஓய்வு மற்றுமோராண்டை விழுங்கியது. உடல் நலமுற்றது. நாங்கள் அடிக்கடி திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டுத் திரும்புவோம்.

மீண்டும் என்னைப் பள்ளிக்கனுப்ப முயற்சி செய்யப்பட்டது. அவ்வேளையில் தந்தையாரைத் திடீரென விக்குள் நோய் அடர்ந்தது. அந்நோய் நெடுநாள் அவரை விட்டகலவில்லை. அவர் குணமடைந்ததும் தாயார்க்கு வயிற்று நோய் தோன்றிக் குடைந்தது. அஃது அவரை எழும்பூர் மருத்துவச் சாலைக்கு ஓட்டியது. சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. அந்நிலையில் தாயாரைப் பெற்ற தந்தையார் காலமனார். பலவிதத் தொல்லைகள் எங்கள் குடும்பத்தை நெருக்கின. அரிசி மண்டி மூடப்பட்டது. ஊரிலிருந்து நெல் ஒழுங்காக வருவதில்லை. ஊர் நண்பரும் நேர்மையாக நடந்தாரில்லை. ஏமாற்றமும் மோசமும் குடும்ப நட்பையுங் கடக்கச் செய்தன. தமையனார் பள்ளியை விடுத்தார். ஓர் அச்சுக்கூடம் சேர்ந்தார். இந்நெருக்கடியில் யான் எப்படிப் பள்ளிக்குப் போவேன்? என்னை ஓவியப் பள்ளிக்கு அனுப்பலாமா? வேறு தொழிற்சாலைக்கு அனுப்பலாமா? என்று விருத்தாசல முதலியார் எண்ணலானார். அவ்வெண்ணத்தை என்னிடம் பக்குவமாக வெளியிடுவார். யான் முன்னையதற்கும் இணங்குவதில்லை. பின்னையதற்கும் உடன்படுவதில்லை. அரிய பொழுது வீணே கழிந்தது. எத்தனை நாள்? ஏறக்குறைய ஈராண்டு தந்தையார் வீட்டிலேயே சுருங்கிய முறையில் வாணிபம் தொடங்கினார். ஊரிலிருந்து கொஞ்சம் நெல் வரும். செல்வ நிலை குலைந்ததென்றே சொல்லலாம்.

கழகப் பதிப்பு (1944), பக். 38-41