பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


அதாவது கிறீஸ்துவின் போதகத்தையும் அவரைப் பின்பற்றியும், கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தும், இரண்டெஜமானனாகும் உலக இச்சையும், மோட்ச இச்சையுங் கொள்ளாது ஒரு எஜமானனாகும் மோட்ச இச்சையில் நின்றும், ஆவியிலும், உண்மெயிலும் அன்பை வளர்த்தும், அறை வீட்டை சாற்றி தியாணிப்பதாகும் ஐம்பொறி ஒடுக்கியும், சாந்தகுணத்தைப் பெருக்கியும், நீதியின் பேரில் பசிதாகமுற்றும், வேஷ பிராமண மத சாதிபேத மற்றும் அன்பே ஓருருவாக நின்று கிறீஸ்து தனக் குள்ளும், கிறீஸ்துவுக்குள் தானும் அமர்வானாயின் அவனே கிறீஸ்தவனென்று அழைக்கப்படுவான். அவனே மெய்ஞ்ஞானக் கிறீஸ்தவனுமாவான். கற்பனைகளுக்கு மாறாக விபச்சாரம், பொய், களவு, குடி, கொலை முதலிய துற்கிருத்தி யங்களே ஓருருவாகக் கொண்டு கேட்டிற்குக் கொண்டுபோகும் வாசல் வழிச் சென்று மதுவையும், மாமிஷத்தையும் புசித்து மதோன்மத்தனாகத் திரிந்து தன் கண்ணிலிருக்குந் துரும்பை எடாது அன்னியன் கண்ணிலுள்ள சிறாவை நோக்குவது போல் தனக்குள்ள அஞ்ஞானச் செயல்களை உணராது ஏனைய விவேகிகளை அஞ்ஞானிகளென்று புறங்கூறியும், ஆண்டவனெங்குமிருக் கின்றாரென்று வாய்ப்பறையடித்து அன்னியன் தாரத்தை இச்சிக்குங்கால் அவரிருக்கின்றாரென்றுணராமலும், ஆண்டவன் சகலமு மறிவாரென்னும் வாய்ப்பறை அடித்து அன்னியன் பொருளைக் களவாடுங்கால் அவரறிவா ரென்றுணராமலும், கிறீஸ்து கிறீஸ்துவென்று சொல்லிக்கொண்டு அவரது போதனையை உணராமலும், போதனையின்படி நடவாமலும், அவரது அன்பினுள் ஒடுங்காமலும், வேஷ பிராமணமத சாதிக்கட்டுக்குள் இருந்து கொண்டே கிறீஸ்து அவன், கிறீஸ்து அவன் என்னும் படாடம்பப் பொய்யைச் சொல்லி கேட்டின் வாசலில் விசாலமாகச் செல்பவன் எவனோ அவன் கிறீஸ்துவுக்குள் அடங்காதவனாதலின் அவனைக்கிறிஸ்தவனென்று அழைக்க ஏதுவற்றிருப்பதுடன் அஞ்ஞானக் கிறீஸ்தவனும் அவனேயாவன்.

- 3:26; டிசம்பர் 8,1909 –

35. சுயநலங்கருதி பாடுபடுவோர் பிறர்நலங் கருதி பாடுபடுவரோ

ஒருக்காலும் படார் காரணம், தருமமென்பது சகலருக்கும் பொது வென்பது அனுபவக் காட்சியாகும். அத்தகையப் பொதுவாயச் செயலை தங்கள் சுயசாதியோர்களுக்கு மட்டிலுஞ் செய்துக் கொண்டு ஏனையோர்களை விரட்டித் துரத்துங் கூட்டத்தோர்வசம் இராஜகீயப் பொதுக்காரியங்களைக் கொடுப்பதானால் சகலருக்கும் சுகமுண்டாகவேண்டுமென்று கருதி இரா ஜகாரியாதிகளை நடத்துவார்களா, தங்கள் கூட்டத்தோருக்கு மட்டிலுந் தருமஞ் செய்துக்கொள்ளுவது போல் செய்துக்கொள்ளுவார்களா என்பதை நந்தேயத்தோர் சீர் தூக்கி ஆலோசிக்க வேண்டியதாகும்.

நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் தற்காலம் ஏற்படுத்தியிருக்கும் இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் சகலவகுப்போரும் வீற்றிருந்து அந்தந்த வகுப்பாருக்குள்ளக் குறைகளை விளக்கி தங்களை சுகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதேயாகும். இத்தகைய கருணைமிகுத்த கருத்தை நமது தேயத்தோர் கவனியாது மவுனஞ்சாதிக்கின்றார்கள்.

அதாவது, முதலிகள் என்பவர்களுக்குள்ளும், நாயுடு என்பவர் களுக்குள்ளும், செட்டி என்பவர்களுக்குள்ளும், ரெட்டி என்பவர்களுக் குள்ளும், யாதவ குலத்தார் என்பவர்களுக்குள்ளும், வன்னிய குலத்தார் என்பவர்களுக்குள்ளும் உள்ள பெரியோர்களைத் தெரிந்தெடுத்து லெஜிஸ் லேட்டிவ் கவுன்சலுக்கு அனுப்புவதைக் காணோம். அவ்வகை அனுப்புவதனால் சகல வகுப்போரும் சுகமடைவோமா, யாரெப்படி போனாலும் நமக்கென்ன என்றிருந்தால் சுகமடைவோமா.

கருணைதங்கிய ராஜாங்கத்தோர் சகல சாதியோரும் முன்னேறி சுகம் பெறும்படியான வழிகளை எவ்வெவ்வளவோ செய்துவருகின்றார்கள். அவைகளை நாம் கருதாது நமது மதச்சிந்தையையும், சாதிச்சிந்தையையும் பெருக்கிக்கொண்டு நாளுக்குநாள் க்ஷணமடைந்து வருகின்றோம்.