பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /21


அங்ஙனமின்றி எடுத்த காரியச் செயலை விடுத்து விரோதிகட் செயலையும், வீணர்செயலையும் நோக்கி அவர்களிடம் வாதுபுரிவதாயின் விரோத கட்சி வலு பெறுவதுடன் முயற்சிகெட்டு எடுத்தகாரியமுமிழி வடைந்துபோம்.

ஆதலின் நமதன்பார்ந்த பௌத்த சோதிரர்களும், சாதிபேதமற்ற திராவிடர்களும், நமது விரோதிகளின் செயலை விரும்பாமலும், வீணர்கள் மொழிக்கு செவிகொடாமலுமிருந்து காரியாதிகளை நடத்தி வரும்படிக் கோறுகிறோம்.

எடுத்த நற்காரியம் பெரிதேயன்றி தெடுக்கும் வீரியம் பெரிதன்று. நற்காரியத்தால் சீர்பெற்றுள்ளாரையுங் காணலாம். துற்காரிய வீரியத்தால் சீர்கெட்டுள்ளாரையுங் காணலாம். மெய்வருத்தம்பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் / எவ்வவர்தீமெயும் மேற்கொள்ளார் - செவ்வி அருமெயும்பாரார் அவமதிப்புங்கொள்ளார் / கருமமே கண்ணாயினார்.

- 3:17; அக்டோபர் 8, 1909 –

33. மனிதன் தனது செயலால் தன்னை உயர்த்திக்கொள்ளுவான் தனது செயலால் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுவான்

மக்களுக்குள் கற்றோனாயினும், கல்லானாயினும், விண்டிதனாயினும், பண்டிதனாயினும், மெல்லியனாயினும், வல்லியனாயினும், தங்கடங்கள் வார்த்தைகளினாலும், செயல்களினாலும் தாங்களே தங்களை உயர்த்திக் கொள்ளவும், தாங்களே தங்களைத் தாழ்த்திக் கொள்ளவுமாகின்றோம். இவ்விருவகைச் செயலுள் ஓர் மனிதன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமாயின் சகலருக்குந் தன்னைத் தாழ்ந்தவனாக ஒடுக்கி டம்ப வார்த்தை களை அடக்கி நாவிற் பொய்யெழவிடாமலும், சுயப்பிரயோசனத்திற்காய் எதிரியை கெடாமலும், தனக்கு அவமானம் வரினும் எதிரிக்கு அவமானம் வராது காத்தலும், தங்களை ஒருவர் வைது சீரழிக்கினும் அவர்களை சீர்கெடுக்காமலும், தங்களை ஒருவர் மனநோக பேசினாலும் அவர்களை மனநோகச் செய்யாமலும், தங்களை ஒருவரடிக்கினும் அவர்களைத் துன்புற வடிக்காமலும், ஒடுக்கி களங்கமற்ற நெஞ்சினனாய் வாழ்வானாயின் உயர்ந்தோர்மாட்டேயுலகமென்பது திரிந்து உலகத்தி லிவனே உயர்ந்தோ னென்று அழைக்கப்படுவான்.

ஆதலின் நமது தீயச்செயல்களே நம்மெய்த் தாழ்ந்தவனாகக் காட்டுவதும், நமது நற்செயல்களே நம்மெ உயர்ந்தவனாகக் காட்டுவதும் இயல்பாம். நமது நற்செயலைக்கொண்டு நம்மெய் நல்லோரென்று கூறுவதற்கு அதிகநாட் செல்லும் நமது துற்செயலைக்கொண்டு நம்மெய் பொல்லாரென்று கூறுவதை எளிதிலும், சொற்ப நாளிலும் பெறலாம். பௌத்த சோதிரர்கள் யாவருந் தங்களது செய்கைகளே தங்களை உயர்த்துவதென்றும், தங்கள் செய்கைகளே தங்களை தாழ்த்துவதென்றும், கன்மத்தை நோக்கி நிற்க வேண்டியதாதலின் என்றும் நற்கருமத்தை நாடவேண்டுகிறோம்.

மூவர் தமிழ் - நாலடி நானூறு

நன்னிலைக்கட்டன்னை நிறுப்பானுந்தன்னை / நிலைகலைக்கிக் கீழிடுவானு - நிலையினு
மேன் மேலுயர்த்து நிறுப்பானுந் தன்னை / தலையாகச் செய்வானுந்தான்.

அறநெறிச்சாரம்


தானே தனக்குப் பகைவனு நட்டானும் / தானே தனக்கு மறுமெயு மிம்மெயும்
தானே தான் செய்தவினைப் பயன் றுய்த்தலால் / தானே தனக்குக் கரி.

20; அக்டோபர் 27, 1909

34. அஞ்ஞானக் கிறிஸ்தவர்களென்போர் யார்?

நண்பரே, தாம் வினாவியுள்ள அஞ்ஞானக் கிறிஸ்தவர்கள் மெய்ஞ் ஞானக் கிறிஸ்தவர்களென்பவற்றுள், அஞ்ஞானச்செயலை அதிகரித்திருப் பவர்கள் யார், மெய்ஞ்ஞானச் செயலை அதிகரித்திருப்பவர்கள் யாரென்று உசாவியவிடத்துத் தானே விளங்கும். ஈதன்றி கிறிஸ்தவனென்னும் இலக்கணம் யாதென்பீரேல், கிறிஸ்து அவன், அவன் கிறீஸ்து என்பதாம்.