பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 27


செத்தவன் பேயாய் வருவானென்னும் பொய்ப்பிராந்தி யகல பாடையில் எள்ளுமூட்டையும் கோழிக்குஞ்சும் கட்டி விட வேண்டுமென்னும் பொய் மூட்டையைச் சேர்த்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் பாடையையும், மகமதியர்களின் பாடையையுந் தொடராதப் பேய் இவர்களை மட்டும் எங்கிருந்து தொடருகிறதென்று கண்டறிந்துக்கொள்ளுவீராக.

- 3:35; பிப்ர வரி 9, 1910 –

40. அந்தணர் அன்னபுசிப்பு

வினா : ஐயா, தாம் சென்றவாரம் வெளியிட்ட அரிய தமிழன் பத்திரிகையில் வரைந்துள்ளப் பூர்வத்தமிழொளியில் மிகாரா தனபதி என்னுமோர் வியாபாரி அந்தணர்களை அறஹத்தோவென்று கூவியழைத்து அன்னமளித்து வந்ததாகத் தெரியவருகின்றது. அவ்வகையாக வைசியனாகிய மிகாராவின் வீட்டில் அந்தணர்கள் புசிப்பதுண்டோ. அவ்வகை புசித்தாக சரித்திர ஆதாரமுண்டோ. அவ்வகையுண்டாயின் எமக்கு விளக்கி ஆட்கொள்ளும்படி வேண்டுகிறேன்.

காரணமோவெனில் தற்காலம் அந்தணர் பிராமணரென்று வழங்கும் படியானவர்கள் யாவர் வீடுகளிலும் சாப்பிடாமல் தங்கள் வீடுகளில் சகலரும் பணங்கொடுத்து சாப்பிடும்படி செய்துவருகின்றபடியால் மிகாரா தனபதி அந்தணர்களுக்குப் புசிப்பளித்த விவரம் விளங்காமலிருக்கின்றது.

வி. குமாரசாமி, வேலூர்.

விடை : அன்பரே, தாம் வினாவியுள்ள அந்தணர் புசிப்பின் வினா தற்காலம் நூதனமாகவே விளங்கும். பூர்வ பௌத்த தரும காலத்திலோ அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர் களிடத்தும் அந்தணர் சென்று அன்னம் புசித்துவந்த தனுபவக்காட்சியாகும்.

அவற்றை அநுசரித்தே வேளாளராம் பயிரிடுந் தொழிலாளர் வீட்டில் அந்தணர் புசித்துள்ளா ரென்பதைக் கண்டறிந்துக்கொள்ளலாம்.

நைடதம் - நாட்டுப்படலம்

மாதர்மென் முல்லையீன்ற / வான்முகை யனையமூரல்
கோதறு கருணை தீம்பால் கொழுங்களி யிவற்றினோடு
மாதுலர் யாவரென்ன / வதிர் குரன் முரசிற் சாற்றி
வேதியர்க் கருத்தி பின்னர் /விருந்தொடு நுகர்வர்மாதோ

பூர்வகால பெளத்தர்கள் அந்தணர்களென்றும், வேதியர்களென்றும், பிராமணர்களென்றும், அறஹத்துக்களென்றும் யாரை அழைத்துவந்தார் களென்னில், மநுமக்களில் எத்தேச எப்பாஷைக்காரனாயிருப்பினும் புத்தசங்கஞ் சேர்ந்து சமண நிலைபெற்று சகல பற்றுக்களுமற்று சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்குந் தண்மெயமைந்த சாந்தரூபிகளையேயாம். அவர்களையே நாயனாருந் தனது திரிக்குறளில் அந்தணரென்போற் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மெய்ப் பூண்டொழுகலால்". என்றும் அவர்களது செயல்களையுங் கண்டெழுதியிருக்கின்றார். அவ்வெதார்த்த அந்தணர்களோ சகலர் வீடுகளிலுங் களங்கமின்றி புசிப்பார்கள். ஆனால் ஆடுகளையும், மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு வதைத்து சுட்டுத்தின்னும் படுபாவிகள் வீட்டில் மட்டும் புசிக்கமாட்டார்கள்.

- 3:35; பிப்ரவரி 9, 1910 –

41. ஓர் பறையன் குடைபிடித்துச் சென்றானென்று
அவன் வியாஜியம் தள்ளப்பட்டதாமே

அந்தோ பொய்யாகிய துற்கந்த நாற்றமாம் சாதிபேதச் செயலை அகற்றி நற்கந்தம் வீசச்செய்யும் பிரிட்டிஷ் ஆட்சியில் பறையன் குடை பிடித்துச்சென்றது தப்பென அபிப்பிராயங்கொண்டு அவன் கொண்டுபோன வியாஜியத்தைத் தள்ளிவிட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து 1910 மார்ச்சு மாதம் 7ம் நாள் வெளிவந்த சுதேச நாட்டியமென்னும் பத்திரிகை 46-பக்கம் 3வது கலம் 48-ம் வரியில் குறிப்பிட்டிருக்கின்றது.